பித்தர்கள்

Posted by G J Thamilselvi On Friday, 30 September 2016 0 comments
அலுவலகத்தின் பர பரப்பையும் தாண்டி அந்த பெண் உள் நுழைந்ததை கவனித்தான் ஜெயராமன். நேர்த்தியாய் கட்டப்பட்டிருந்த சேலை. மாராப்பு மாத்திரம் ஒரு பக்க மார்பு தெரியுமாறு விலகி இருந்தது. கண்கள் நிலையில்லாது சுழன்று கொண்டிருக்க, சுற்றும் முற்றும் பார்த்தபடியே நடந்து வந்துக்கொண்டிருந்தாள். கையில் ஒரு மஞ்சள் ஜவுளிக்டையில் தரப்படும் பாலித்தின் பை. என்ன பெண்கள் இவர்கள், ஆடையை நேர்த்தியாய் உடுத்தும் அறிவு கூட இல்லாமல். பிறகு ஆண்ககள் கயவர்கள் அங்கே பாத்தாங்க, இங்கே இடிச்சாங்கன்னு கதைவிட்டுட்டு, கோஷம் போட்டுட்டு திரியவேண்டியது என்று எண்ணினாலும், கண் அந்த ஒற்றை மார்பகத்தை தொட்டு மீள முடியாமல் தவித்து, பின் பார்வையை விடாப்பிடியாய் நகர்த்தியதை வயது கோளாறு என்று சாந்தப்படுத்திக்கொண்டான்.


த்தமா இன்னாவேணும் என்று அவன் உத்தியோகத்திற்கே உண்டான நேர்த்தியோடு கேட்க, அவள் சற்று நிதானித்தாள். ஒரு பாஃர்ம் என்றாள். இன்னா பாமு வேணும் உனக்கு? என்ற அவனின் வினவலில் ஒரு எக்களிப்பு இருந்தது. அது அலுவலக உதவியாளர் பணிக்கே உடைய கூடுதல் தகுதி. அந்த எக்களிப்பை பொருட்படுத்தாமல் எலெக்ஷன் பார்ஃம் என்றாள். அவள் வார்த்தைகள் தெளிவாய் வந்து விழுந்தது. சுற்றிலும் நின்றவர்களின் பார்வை இப்பொழுது அவள் மீது. அவள் வைத்திருந்த பாலித்தீன் பையில் தெளிவில்லாமல் சில குப்பைகள். கசக்கி நொந்தப்பட்டிருந்த காகிதங்கள். உடுத்தியிருந்த உடைக்கும், அவளின் குறு குறு பார்வைக்கும், கையில் வைத்திருந்த குப்பைக்கும் சம்பந்தமே இல்லை. என் பையனுக்கு எபிப் கார்ட் செய்யனும் என்றாள் தெளிவாய். வயசு பதினெட்டாச்சு, திறமையான அரசியல் தலைவரா மாத்தப்போறேன் என்றாள். கழுத்தை பார்த்தான் ஜெயராமன், வெறுங்கழுத்து அவனைப் பார்த்து போடா பைத்தியமே என்பது போல இருந்தது.

ஒரு பாஃர்மை கொடுத்து அந்த பொம்பளைய வெளியே அனுப்பு என்று சத்தம் போட்டார் அதிகாரி. அவன் குழப்ப சிந்தையோடு ஒரு விண்ணப்பத்தை எடுத்து அவளின் கையில் கொடுத்தான். அவள் வாங்கிக்கொண்டு வெளியே சென்று வேப்பர நிழலில் அமர்ந்துகொண்டு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள்.  இன்னும் சில ஆண்களின் கண்கள் அவள் மார்பகத்தை தழுவி மீண்டது. ஒரு பெண்ணுக்கும் துணிச்சல் இல்லை அந்த புத்தி சுவாதீனமற்றவளின் ஆடையை சரி செய்ய வேண்டும் என்று. 

ஜெயராமன் மட்டும் தன் கண்களை திட்டிக்கொண்டான். இச்சையோடு பார்த்துவிட்ட அந்த நொடிக்காக. அவன் மனதின் உணர்வை பிரதிபலிப்பது பொல காகம் ஒன்று காவென கரைந்து தன் திசையை நோக்கி பறந்தது. உலக பித்தர்களின் மன கோணங்களை அறியா அந்த பெண் ஒரு திறமையான நேர்மையான அரசியல் தலைவனை உருவாக்கும் சிந்தையில் ஆழ்ந்து போய் உலக பிரக்ஞை அற்று இருந்தாள்.

0 comments:

Post a Comment