நெல்லிக்காய்!

Posted by G J Thamilselvi On Friday, 16 September 2016 1 comments
அலுவலகம் நிசப்தித்திருந்தது, வெளி ஆட்கள் எவரும் அவ்வளவாய் வரவில்லை. அலுவலக ஊழியர்களிலும் அநேகர் இன்று விடுப்பு போல. உள்ளே நுழைந்த காமாட்சி தன் கட்டைப் பையை கக்கத்தில் இடுக்கிக்கொண்டாள். சேலை ஒருபுறம் உருவிக்கொண்டு வந்தது. சட்டென்று அருகாமை கணிணி அறையில் நுழைந்தாள். கக்கத்திலிருந்த பையை தொப்பென்று கீழே போட்டுவிட்டு, உருவிய சேலை கொசுவத்தை கொசுவி உட்புறமாய் சொருக சட்டென்று கதவைத்திறந்து உள் வந்து விட்டான் வெங்கடேசன். அவன் பார்வை அவளின் வயிற்றை தழுவி வேறுபக்கம் திரும்பியது. ப்ச் என்னதிது கதவை சாத்தக் கூடாதா என்று முணகியபடி வெளியே போய்விட்டான்.


காமாட்சிக்குத்தான் படக் படக்கென்று மனம் அடித்துக்கொண்டது. என்ன நினைப்பான். ச்சே புத்திக்கெட்டவள் என்று நினைத்திருப்பானா? அப்படி நினைத்திருந்தால் தான் தேவலையே வயிற்றை ஆடையற்று பார்த்துவிட்டானே என்று குமுறியது மனம். அவன் பார்த்ததற்கு அவளும் தான் காரணம். அந்த வெற்று வயிற்றில் அப்படி என்னத்தான் இருக்கிறது. பசிக்கு உயிர்த்து உள்ளடங்கிய வெற்று வயிறு. ஆண்களின் கண்களுக்கு அது எப்படிப் புலப்படுமோ? நான் என்ன ஆணா? அவன் கோணத்தில் இருந்து பார்க்க பலவாறு யோசித்தவள். கலைந்த தலையை ஒதுக்கி, தட்டச்சர் மணிமேகலையிடம் வந்தமர்ந்தாள். மேடம் அந்த ஹெட்கிளர்க் அப்படி பேசிட்டானே மேடம் என்று ஆரம்பித்தாள். அந்த ஹெட்கிளார்க் அவளைப் பேசி 6 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இருந்தும் ஒரு முறையாவது அதை அவள் நினைவுப்படுத்திக்கொள்ளாது இருந்ததே இல்லை.

மணிமேகலைக்கு எரிச்சல் மண்ட, காலையில வேலை எதுவும் இல்லையா காமாட்சி என்றவள் அதனூடே உதவியாளரை அழைத்து சார் இந்த காமாட்சியை உங்க சீட்டாண்ட உட்கார வச்சுக்கங்களேன்என்றாள்.

“ஏன் மேடம்” என்று எழுந்து வந்த உதவியாளர் சண்முகம், காமாட்சியை மறந்துவிட்டு, மேடம் செய்ன் புதுசா இருக்கு, உங்க வீட்டுக்காரர் வாங்கியதா என்று  டாலரை  கையில் எடுத்துப் பார்த்தான்.

இதற்கு காமாட்சியே தேவலாம் போல என்று எண்ணிக்கொண்டவள். அதை வெளியே காண்பிக்காமல் ஆமாம் சார் என்று இளித்தாள்.

இந்த பெண்கள் மனதில் இருப்பதை அப்படியே வெளிப்படுத்த துணிவற்றவர்கள். அதை ஏன் அவர்கள் பழகிக்கொள்ளவில்லை.

சார் திரும்ப எப்ப போறார் மேடம் என்றார்

இன்னும் ஒரு மாசம் இருப்பார் சார் என்றாள்

ஒரே மஜாதான் போங்க என்று கண் சிமிட்டினான் சண்முகம்.

அந்த கண்சிமிட்டலின்  அர்த்தத்தை புரிந்து மருகிக்கொண்டிருக்கும் போதே இடைப்புகுந்தாள் சஹானா மஜாவுக்கு என்ன குறைச்சல் சார், உங்க வீட்லயும் பொண்டாட்டி இருக்காங்களே என்றாள் அழுத்தமாய் புன்னகைத்து. மஜாவின் அர்த்தம் சண்முகத்தின் கண்சிமிட்டலில் புதைந்திருந்ததை அங்கிருந்த பெண்கள் அறியாமல் இல்லை. 

அய்யோ சைக்கோ வந்துடுச்சே என்று முணு முணுத்துக்கொண்டே அவர் இருக்கையை நோக்கி கிட்டத் தட்ட ஓடிப்போனார் சண்முகம்.

தேங்க்ஸ் சகா என்று புன்னகைத்தாள் மணிமேகலை.

தப்பா பேசுறாங்கன்னு தெரியும்போதே திரும்ப பேசிடனும் மேடம் அப்பத்தான் அடுத்த முறை பேசுறதுக் யோசிப்பாங்க என்றாள் சஹானா

அது  உடனே முடியறதில்லயே சகா என்றாள் மணிமேகலை.

காமாட்சி இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது அந்த ஹெட்கிளார்க் திட்டியதையே யோசித்துக்கொண்டு நின்றாள்.

“காமாட்சி “

“சொல்லுங்க மேடம்”

கொஞ்சம் பார்ஃம்ஸ்க்கு சீல் போடனும் வாயேன் என்றவள் சண்முகம் சார் காமாட்சியை இன்னைக்கு என் சீட்டுக்கு கூப்டுக்கறேன் என்றாள்.

சண்முகத்தின் “ம்ம் ” எரிச்சல் வழிந்துக்கொண்டிருந்தது.

“ஏன் காமாட்சி காலையிலயே மணிய என்ன பண்ண”

நான் இன்னா பண்ண மேடம், பொடவை உருவிக்கிச்சு, அந்த வெங்கடேசன் வேற வயத்து பாத்துத் தொலைச்சுட்டான், என்ன நெனச்சிருப்பான்னு.. என்று இழுத்தாள்.

“அவங்க வீட்லயும் பொண்ணுங்க இருப்பாங்க, எதவும் நெனச்சிருக்கமாட்டான் விடு”

“சரி மேடம். நான் போய் சண்முகம் சார்கிட்ட ஏதாச்சும் வேலை இருந்தா பாக்குறேன் என்று சஹானாவிடமிருந்து நகர்ந்தாள். 

காமாட்சி ஒரு வேலையும் செய்யமாட்டாள். எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பாள். இங்கே வேலை வைத்தாள் அங்கே போகிறேன் என்பாள். அங்கே வேலை வைத்தாள் இங்கே வருகிறேன் என்பாள். அவள் மனம் எதிலும் நிலையாய் இருப்பதில்லை. வேலையை விட்டு திடீரென்று அழத்துவங்கிவிடுவாள்.

சண்முகம் காமாட்சியை இலை வாங்கி வரச் சொன்னது காதில் விழுந்தது. பின்பு ஏதேதோ தொடர்பிலற்ற பேச்சுக்குரல்கள். 

சிறிது நேரத்தில் காமாட்சி  நான்கு நெல்லிக்காய்களோடு வந்து சஹானாவின் அருகில் அமர்ந்தாள்.

மேடம் இந்தாங்களேன் நெல்லிக்காய்

நீ வாங்கினியா?

இல்ல மேடம்

பிறகு

சார் இலை வாங்கிட்டு வர சொன்னார், பத்து ரூபாய்க்கு சில்லரை இல்லேன்னு இதை கொடுத்துட்டாங்க என்றாள்.

வேண்டாம்ப்பா பாரு அவர் அந்த காசை விடவே மாட்டார். எதுக்கு வம்பு என்றவள் எனக்கு வேணுமின்னா ஒரு நெல்லிக்காய் கொடு இந்தா இரண்டு ரூபாய் என்று அவள் கையில் திணித்தாள்.

ஏன் மேடம் என்றாள் காமாட்சி

விடும்மா போ போய் அவர்ட்ட அந்த நெல்லிக்காயை கொடு என்றாள் சஹானா

சரி மேடம் என்று சண்முகத்திடம் போனவள் சார், சில்லரை இல்லேன்னு நெல்லிக்காய் கொடுத்தாங்க என்றாள்.

சண்முகம் சட்டென்று புருவம் சுருக்கினார். எவ்வளவு சாமார்ததியம் பாரு, ஒரு இலைக்கு சில்லரை இல்லேன்னு நெல்லிக்காயை தலையில கட்டுறதை பாரு, போ போய் நெல்லிக்காய் வேணாம்ன்னு கொடுத்துட்டு நாளைக்கு காசை வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டு வா, இதுங்கள ஆபிஸ் வாசல்ல வேபாரம் பண்ணவேவிடக்கூடாது. மெடிக்கல்ல தான் ஒர்ருபா இல்லேன்னா ஒரு சாக்லெட்டை தலையில கட்டிடறான் அதுக்குன்னு 2ருவா இலைக்கு எட்ருவா தண்டமா?

காமாட்சி இப்பொழுது குழைந்தாள். அது வந்து சார், நான் தான் நெல்லிக்கா என்ன வெலைன்னு கேட்டேன். அதனால கொடுத்தாங்க, திரும்ப போய் அவங்ககிட்ட கொடுக்கமுடியுமா?

அவ்ளோ ரோசமுள்ள பொம்பள எதுக்கு இங்க வந்து இப்படி சொல்ற நெல்லிக்கா நான் வாங்கிக்கிட்டேன்னு சொல்லவேண்டியது தான, அந்த காசு கூட என்னிதில்ல இந்த டேட்டா எண்ட்ரி பசங்க அவனுங்க கொடுத்தானுங்க, இலையும் அவனுங்களுக்குத்தான். நீ போ போய் கொடுத்துட்டு மிச்சத்தை நாளைக்கு வாங்கிக்கறேன்னு சொல்லு என்று முடித்துவிட்டார்.

காமாட்சி மெதுவாக சஹானாவிடம் வந்தாள். எலி ஒன்று அவள் குறுக்கே புகுந்து ஓடி கோப்புகளின் குவியலில் மறைந்தது. அய்யோ அம்மா என்று அலறியவள். பாருங்க மேடம் ஒரு எட்டுரூவா என்ன போறும், எப்படி பேசறார் பாத்திங்களா என்று புலம்பத் துவங்கினாள்.

சஹானா அவள் புலம்பலை கவனிக்காது வேலையில் கவனமானாள். ஒரு பெண் தன் முன்னுக்குப் பின்னான பேச்சால் அவள் தரத்தைக் குறைத்த்துக்கொள்கிறாளே என்ற வேதனை எழுந்த போதிலும், பேசும் வார்த்தைகளில் கவனமாய் இருக்க வேண்டும் என்று உறுதியாய் எண்ணமிட்டாள்.

காமாட்சியின் புலம்பல் வேறு திசை நோக்கி ஓடியது, மேடம் பாருங்க மேடம் வீட்டுக்கு அனுப்ப மாட்டேங்குறார். ஊருணி பொங்கல்ன்னா ஊரே போகும், நான் பர்மிஷன் கேட்டும் அவர் அனுப்பமாட்டேங்குறார். நல்லது பொல்லதுக்கு கூட அனுப்பலேன்னா என்ன மேடம் ஆபிஸ் இது, என்னால பொய் சொல்லவே முடியறதில்ல,  உள்ளத அப்படியே சொல்லிடறேன் என்று  புலம்பிவிட்டு,  சண்முகம் சாரிடம் போனவள் சார் வீட்டுக்குப் போகட்டுங்களா என்றாள். 

அவர் போய்ட்டுவாம்மா என்றது சஹானாவின் செவியில் விழுந்தது. இதுவரை அவள் புலம்பிய வார்த்தைகளை மீண்டும் அசைப்போட்டாள். அந்த ஆண்டவன் தான் அவருக்கு தண்டனைக்கொடுக்கனும் என்றது தான் காமாட்சியின் ஹைலைட் புலம்பல். அந்த ஆண்டவன் தண்டனை யாருக்கு என்று மனம் குழம்பியது

காமாட்சி தன் கட்டைப்பையை கக்கத்தில் இடுக்கிக்கொண்டாள் ஒரு நெல்லிக்காயை எடுத்து கறுக் கென்று கடித்தாள். ச்சே இப்படி கசக்குது இந்த நெல்லிக்காய்க்கு இத்தனை அக்கப்போரு என்று அந்த நெல்லிக்காயை தூரே எறிந்து வேக நடை நடக்கத் துவங்கினாள்.

1 comment:

  1. கதை போன்று இல்லை. கட்டற்ற காட்சிகளின் கோர்வையாக உள்ளது.

    ReplyDelete