என்னவன் கொண்டுச் சென்றான்

Posted by G J Thamilselvi On Tuesday, 10 May 2016 0 comments

தலைவாசல் முன்னின்று தலைசாய்த்து காத்திருந்தேன்
முற்றம் வழி தரை இறங்கி பின் வந்து அணைத்துக்கொண்டான்
பின் வந்து அணைத்தவனை உணர்ந்தும் காணாதிருந்தேன்
முன் வந்து நின்றவன் கன்னம் பற்றி முகம் பார்த்தான்

இத்தனை நாள் கடந்த பின்னும் மறக்கலியோ நினைவென்றேன்
மறந்த பின் எழுந்த நினைவொன்றில் வந்தேன் என்றான்
விழி நீர் திரையாக வலி உண்ட இதழினிலே 
உவர் நீர் சுவையாக தவிப்பினை அடக்கி வைத்தேன்

தவிப்பினை கண்ட அவன் முக  குறு நகை காணாது
காதலற்று போனவன் காண ஏன் வர வேண்டும்
ஊடல் கொண்ட நெஞ்சத்துடன் பேசிக்கொண்டேன் நானாக
குறிப்புணர்ந்த கள்வன் அவன் கண்சிமிட்டி உற்றுக் கண்டான்

எழில் கொண்ட நிலவன் அவன் ஊடல் கொள்ள சித்தம் கொண்டு
மதிக்கெட்ட பேதைப் பெண்ணே, நினைவற்றுப் போவேனோ என்றான்
கன்னம் கை துறக்க, கண்ணில் பொய் கனல் பறக்க
கடிதின் ஏகிச்சென்றான் மேகம் அது முகம் மறைக்க

மறைந்த பின் உணர்வுகொண்டு, அவன் காதல் உணர்ந்தவள் நான்
மதிக்கெட்ட அக் கணத்தை நினைந்துருகி சோகம் கொண்டேன்
என் சோகம் தாளாது விண் துறந்து வந்தவனோ
நெஞ்சத்தில் சிறைப்பிடித்து என்னை உடன் கொண்டுச் சென்றான்

0 comments:

Post a Comment