முனுசாமி என்கிற சின்னத்தம்பி!

Posted by G J Thamilselvi On Thursday, 3 September 2015 0 comments

யக்கோவ் குப்பேத்தாக்கோவ் என்கிற கூவலில் விடிந்தது 02.09.2015 ற்கான விடியல். குப்பை சேகரிக்கும் மூதாட்டியின் குரல். முன்பொருமுறை அவளோடு பேச்சுக்கொடுத்திருக்கிறேன்.

எத்தனை தெருவுக்கு போவீங்க?

மேலப்பாளையம், துக்காப்பேட்டை, சகாயமாதாதெரு அப்படியே திரும்பவும் குப்பை பிரிக்கிறாங்களே அங்க போய்டுவோம் என்றவள் தலையில் சாயம் போன வெளுத்தத் துண்டைக் கட்டியிருந்தாள்.

டீக்குடிக்க காசு குடேன் என்று உடன் இருந்தவள் கேட்க, த்த சும்மா கெட அதே எப்படி இருக்கு அதுக்கிட்ட போய் காசு கேட்டுக்கினு

உனக்கின்னாமே தெரியும் அது தாலுக்காபீஸ்ல வேல செய்யுது இல்ல மேடம் என்று இரண்டாமள் இழுக்க! சிரித்துக்கொண்டேன்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை செய்வது மாபெரும் மரியாதை தான், அம்மரியாதைக்குப் பின் ஏச்சும் இருக்கும்.

இந்த வரட்டு மரியாதையை ஒரு போதும் விரும்பியதில்லை நான். அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.  தெருவில் இருக்கும் குப்பையை அள்ளுவதும் சாக்கடையைத் தூர் வாருவதும் மிகவும் கஷ்டமான வேலை. கால்வாய் ஓரம் நிற்கும் போதே முச்சை உள்ளடக்கி சுவாசத்திற்கு தடைப் போட வேண்டியதாய் இருக்கிறது.

அன்று அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். நான் அலுவலகத்திற்கு சென்ற போது, வட்டாட்சியரின் ஜீப் வாயிலை அடைத்தபடி நின்றிருந்தது. வட்டாட்சியர் தபேதாரிடம் என்ன அண்ணா இன்னைக்கு ஆபீஸ் இருக்கா எனக்கு என்றேன்.

நான் அரசாங்க ஊழியர் இல்லை.

அரசாங்கத்திடமிருந்து ஒரு நிறுவனம் டெண்டர் எடுத்திருக்க அந்நிறுவனத்திடம் நான் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.

எல்லாருக்கும் ஆப்சென்ட் போட்டுட்டாங்க நீ வேலை பாத்து என்ன பண்ணப்போற என்றார் அவர்.

இந்த நாளை என்ன செய்வது?

ஒரு யு டேர்ன் அடித்து,  ஹார்ட் பீட் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு வந்தேன். சட்டென்று ஒரு யோசனை,  சொர்ப்பனந்தல் அலுவலகத்திற்கு சென்றால் என்ன? கொஞ்சம் அல்ல அதிகான துணிச்சலோடே! என்இளையத் தம்பிக்கு தொலைப்பேசி செய்தேன்.

நான் சொர்ப்பனந்தல் போறேன் நீ வரியா இல்லையா?

அவன் வருகிறேன் காத்திரு என்றான்.

அலுவலக வாசலிலேயே காத்திருந்த போது தான் அந்த நபரை சந்தித்தேன்.

மிக நெருக்கமானவர் அல்ல.

நான் சகாயமாதா தெருவில் குடியிருந்த போது மூன்று வீடுகள் தள்ளி அவர்கள் வீடு.

மின் வாரியத் துறையில் பணியாற்றி ரிட்டையர்ட் ஆனவர்.

அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள் பற்றி ஒன்றிரண்டு முறை பேசியிருக்கிறோம். போகும் போதும வரும் போதும் புன்னகைப்பதோடு சரி.

புன்னகை வார்த்தைகளின் பயன்பாடே இல்லாமல் ஒரு நெருக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி விடுகிறது.

அருகில் வந்தவரிடம்

எப்படி இருக்கீங்க என்றேன்

எங்கம்மா நல்லா இருக்குறது, அந்த பையன் இப்படி பண்ணிட்டானேம்மா,

ம் நானும் கேள்விப் பட்டேன் பெயில் எடுத்துட்டிங்களா?

ஒரே பையன் ஜெயிலுக்கு போகக் கூடாதுன்னு ஜட்ஜ் முன்னாடி பொய் சொன்னேன்.
அவங்க பொண்ணுக்கு பத்து பவுன் போட்டாங்க 4 லட்சம் ரொக்கமா கொடுத்தாங்க பாத்திரம் பண்டம் எதுவும் தரல, கல்யாண மண்டபத்துல ஐஸ்கிரீம் பார்லர் வைக்கனும்ன்னு சொன்னாங்க மெனக்கெட்டு போய் திருவண்ணாமலையில இருந்து எடுத்துட்டு வந்து வச்சேன்,

இப்ப எல்லாம் நஷ்டம், பொண்ணு வீட்ல கொடுத்ததை எல்லாம் கொடுத்துட்டோம் அவரின் குரல் கம்மியது.

அவன் பேர்ல என் வீட்டை எழுதி வச்சுட்டேன். ஜட்ஜ் முன்னாடி சொல்றான், எங்கப்பா அம்மா கண்டிப்பு அதான் மண்டபத்துல இருந்து போய்ட்டேன்.

0 comments:

Post a Comment