விடியலை நோக்கி.......!

Posted by G J Thamilselvi On Tuesday, 31 December 2013 5 comments

     ஒடுக்கப்பட்ட இனத்திற்கே உண்டான மூர்க்கம், இடுங்கி துளைக்கும் அவள் கண்களில் வழிந்தது. கரேல் என்று அண்டங்காக்கையின் கருப்பில் அவள் தேகம். சாராசரிக்கும் குள்ளமான, வினயம் பிடித்தவள் என்று பிறர் சாடும் ஒல்லி குச்சி உடம்புக்காரி. சுருண்டு அடர்ந்த கார்கூந்தல், தேங்காய் எண்ணெயின் வாசமே இல்லாமல் பரட்டையாகியிருந்தது. அவள் முகத்தில் பசியின் அடையாளம் சோர்வாய் படர்ந்திருந்தது. வறண்டிருந்த பூமியின் சுடு மண்ணுக்குள் பாதங்கள் புதைய வெம்மையின் தகிக்கும் தணல் பாதங்களை தாக்கியபோதும், பழக்கமோ அல்லது உரம் ஏறிய மனதின் திட்பமோ என்று உணரமுடியா வேகத்தோடு பாதங்களை மாற்றி அவள் இலக்கை நோக்கி நடைபயின்றாள். அவள் தலையின் சீமாட்டு துணிக்கு மேலாக விறகு சுமை. வலது கரம் சுமையை பற்றியிருக்க இடதுகரம் வீசி, இடை இருபுறமும் அசைய நடன மாதின் இடையசைவு நளினத்தை ஒத்தார் போன்றிருந்தது.


     விடு விடு வென்ற நடை வெகுவிரைவில் அவள் குடிசை என்னும் இலக்கை அடையச்செய்தது. சாணம் தெளித்த வாசலின் பச்சை தசையில் தொப்பென்று விழுந்தது சுமை.

     சுமை விழுந்த சப்ததில் குடிசைக்குள் இருந்து அரையும் குறையுமாய் எழுந்து ஓடினாள் அந்த பெண்.

     நின்றிருந்தளின் மீது ஒரு இடி வேறு, பனை ஓலை குடிசையின் தாழ்ந்த வாயிலில் குனிந்து உள் நுழைந்தவள் வேட்டி விலகியது தெரியாமல் கிடந்தவனை கடந்து, தூளியிலிருந்த குழந்தையை எடுத்து மடியில் கிடத்திக்கொண்டாள்.

ஜாக்கெட்டின் கொக்கியை கழட்டி ஒரு முளைகாம்பை குழந்தை வாயினுள் திணித்தாள்.

குழந்தை முகத்தை மார்பில் தேய்த்து பின் காம்பைப்பற்றிக்கொண்டது... இருந்திருந்து பார்த்தாலும் குழந்தையின் வயது மூன்று மாதமே. நாவரண்டதோ, வயிறு காய்ந்ததோ, அழுத்தமாய் சப்பியது தாயின் வலி உணராமல்.

தள்ளாடிய படி எழுந்தான் அவன், அவளின் தோளைப்பற்றி தரையில் கிடத்த எத்தனித்தவனின் கைகளை எத்தி தள்ளி விட்டாள்.

“த போ தூர“

“ஏ வா என்றவன் நிதானம் இன்றி தரையில் விழுந்தான்.

குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே வரவும் முனியம்மா கிழவி வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

“எங்கடி உம் ஆம்படையான்

தூங்குறாங்க ஆயா

அடி பொசக்கட்டவளே, குத்துக்கல்லாட்டம் நீ இருக்கவே எதுத்து வுட்டுக்காரிக்கிட்ட போறான் ன்னா எதுன்னு கேக்காம இப்படி தூங்கறான்னு வெள்ளந்தியாய் நிக்கிறியே...

“அதுல்லாம் ஒண்ணுல்ல ஆயா, எதையோ தூக்கும் போது சுளுக்கிடுச்சாங் அந்த அக்காளுக்கு நான் தான் ஒலக்க வச்சு உருட்ன என்றவளை கிழவி முகவாயில் கை வைத்தபடி பார்த்தாள்.

ன்னா பொம்மனாட்டி இவ, முழுசா பூசணக்காய சோத்துல மறைக்குறா....என்று புளம்பிய படி தள்ளாடி நடந்தாள்.

கலைந்து விரிந்திருந்த கூந்தலை அள்ளி முடிந்தாள் அவள்.

கோபமாய் வந்தது, யார் மேல் தெரியவில்லை. பச்சிளங்குழந்தையாய் விட்டு விட்டு நோயில் இறந்து போன முகமறியா ஆத்தாளை நினைத்துக்கொண்டாள்.

நீ இருந்திருந்த இப்படி நடக்குமா, இந்த குடிக்காரங்கிட்ட மாட்டிட்டு முழிக்க வேண்டியதா இருக்கே யம்மா“

இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது. அதுவும் இமைகளின் விளிம்பில் நின்று கண்களுக்குள்ளாகவே கரைந்தும் போனது.

குடிக்காரனுக்குண்டான தோரணையி்ல் ஹேய் என்று குரல் எழுப்பினான்.

குழவிக்கல்லை தூக்கி தலையை நசுக்கிவிடவேண்டும் போல் ஆத்திரம்...அவன் பண்ணிய செயலை தான் செய்திருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று ஒரு கணம் எண்ணியவள்...தே....பையன் என்று வாய்குள்ளாக முனகிக்கொண்டாள்.

கணவன் என்ற ஈர்ப்பு சுத்தமாய் அவளை விட்டு அகன்றிருந்தது. அவளின் முகம் பாராங்கல்லின் இறுக்கத்தோடு விகாரித்து விகசித்தது.

சுரீர்ர் என்ற வெயிலையும் பொருட்படுத்தாமல், சாணம் மெழுகிய பச்சைத்தரையில் சம்மணம் இட்டு அவர்ந்தவள், முந்தியால் குழந்தையை மூடிக்கொண்டாள்.

குழந்தை பெத்து மூணு மாசமாகல அதுக்குள்ள ஆத்தமாட்டாம அடுத்தவன் பொண்டாட்டிக்கிட்ட போய்ட்டு வர்றவன் ஆம்பிளையா...தெனவெடுத்த கம்மணாட்டி, மனம் ஆங்கரித்தது.

ஏதோ யோசித்தவளாய் எழுந்தாள். ஒரு அழுக்கு மஞ்சள் பையில் இரண்டு சேலைகளை எடுத்து திணித்துக்கொண்டாள். மஞ்சள் கைப்பையின் கைபிடியை இடுப்பில் சொருகிக்கொள்ள அது துருத்திக்கொண்டு ஒரு பக்கம் நின்றது.

குழந்தை மறு இடுப்பில்....கொஞ்சம் தூரம் நடந்தவள் திரும்ப வந்து குடிசையின் வாயிற் கதவில் கட்டப்பட்டிருந்து நாய் குட்டியை எடுத்து மறு கையில் வைத்துக்கொண்டாள்.

நீ இங்க இருந்த சோறு போடாம ஒண்ணையும் கொன்னுடுவான், எ உழப்புல தின்னுட்டு என்ன உதைக்குறதுக்கு இன்னாத்துக்கு ஊட்டுக்காரன், படுத்துக்குறது பெரிசா...படுத்தத கழுவுறதுக்கு ஒரு சோப்பு துண்டாவது வாங்கிதரவேணாம். வக்கத்த விதி அத்த நாயி...ன்னா ஒண்ணு சொறி நாயிக்கு பயிந்துகினு வெளிய போன கண்ட வெறிநாயிங்க நாக்க போட்டுகிட்டு அலையும்.

அவள் நடை சீராய் இருந்தது. அவள் மனதின் தெளிவு முகத்தின் அங்கமாகியது.

புதுவாழ்வின் விடியலை நோக்கிச்செல்லும் அவளை வியந்துப் பார்க்கிறது காலம்.

5 comments:

 1. நம்பிக்கை தெரிகிறது...

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. பாசிடிவ் ஆக கதையை முடித்திருந்தது நன்றாக இருக்கிறது. இனிய புத்தாண்டில் இன்னும் பல உயரங்களைத் தொட இறைவன் அருள் நிறையட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள், தமிழ் செல்வி

  ReplyDelete
 3. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வலையுலகில் தங்களது சேவை தொடரட்டும்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. அக்கா தங்களுக்கு எனதன்பின் பகிர்தல் ஒன்று என்தளத்தில் இருக்கிறது.
  http://veesuthendral.blogspot.in/2014/09/blog-post_23.html

  ReplyDelete