உன்னைத் தேடுகிறேன்...!

Posted by G J Thamilselvi On Wednesday, 9 October 2013 16 comments
குமிழ்ந்து தரை விழுந்த
நீர்க் குமிழி பாதையின் குறுக்காக
சர சர வெனக் கடந்த போது,
வேகச் சீற்றத்துடன் தலை குத்தி
வழிந்த போது,

சாரல் மறைத்த பார்வையில்
சாலை தெரியாக் குருடியாய்
பயணித்த நொடி
எங்கிருந்தோ வந்து
இதயத்தைக் கீறிச் சென்றது உன்
நினைவுகளின் உயிர் !

குடை தாங்கி நீளும்
உன் கரங்கள் தரும்
பாதுகாப்பின் உயிரலைகள்
காற்றில் கரைந்துக் கொண்டிருக்கிறது
நினைவுப் படுகையில்.

நனைந்து விழும் கூந்தல்
நீர்ச் சொட்டுகள் ஏந்த
விரைந்து வரும்
உன் மண் வாசத் துண்டுக்கா
ஏங்கித் தவிக்கிறது
என் கூந்தல் மயிர்கள் !

உன் கைலியைத் தூளியாக்கி
விளையாடிய நாட்களில்
நினைவலைகளைப் பத்திரப்படுத்த
வகை தேடுகிறது
நிரந்தரமற்றுக் கடந்து போகும்
எண்ணத் துளிகள்.

நான் இல்லம் சேரும் வரை
வாசற் படியில் படுத்துக்கிடக்கும்
உன் விழிகள் இல்லா வெறுமை
சுடுகிறது இடி மின்னல்களின்
மொழிதல் வழி !

இருளில் தனித்து நின்ற போதுதான்
தவித்து உணர்கிறேன்
அப்பா நீ இல்லாத வெறுமையை
புழுதி கரைந்த உன் வேர்வை
வாசத்திற்காக நாசி சுழித்த
பொழுதுகள் இன்று திட்டித் தீர்க்கிறது
எனக்கு உள்ளாகவே.

நீ போதித்த கதைகள்
எழுத்தின் சிகரம் நோக்கிப்
பயணப்படும் என் வாழ்க்கை
இப்போது புரிகிறேன் உன்னை,
எழுத்தின் விதையை,
எனக்குள் ஊன்றி சென்றவன் நீ
தர்க்கிப்பிலும் கண்டிப்பிலும்

என் ஆழ்மன ஆண்மனச் சிநேகிதன் நீ !
என்னைக் கையில் ஏந்தி
உச்சி முகர்ந்த முதல் ஆடவன் நீ
ஆண்கள் இல்லாத உலகம் வெறுமை தான்
கயவர்கள் என்று புறந்தள்ள இயலா
இலகு மனம் கொண்ட நட்புறவுகள்.

தரை ஓடும் நீரோடு
உன் பெயர் எழுதிப் பார்க்கிறேன்
முன்பொரு மழைப் பொழுதில்
மழைவிழா குடையாக
உன் உடல் குறுகிக் காத்த காட்சி
மழை ஈரத்தில் கண்கள் கரைந்து
காணாமல் போகிறது.

ஒவ்வொரு முகத்துளிகளிலும்
தாயுமானவனாக ஒளிந்து நிற்கும்
என் தகப்பனே உன்னைத் தேடுகிறேன்
இப்பிரபஞ்ச பெருவெளியில்
ஒவ்வொரு தகப்பனுக் குள்ளும்
ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒரு தாயுமானவனை.

16 comments:

 1. அருமை.... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 2. வணக்கம்
  சாரல் மறைத்தப் பார்வையில்
  சாலை தெரியா குருடியாய்
  பயணித்த நொடி
  எங்கிருந்தோ வந்து
  இதயத்தை கீறிச்சென்றது உன்
  நினைவுகளின் உயிர்

  கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. உயிர் கொடுத்த இறைவனுக்கு
  நிதர்சனமான வரிகள்...

  ReplyDelete
 4. "ஒவ்வொரு தகப்பனுக்குள்ளும்// ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு தாயுமானவனை//" தேடிக் கண்டுபிடிக்கும் பிள்ளைகள் கிடைப்பது ஒரு வரமே! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்)

  ReplyDelete
 5. காலை வணக்கம் அக்கா. இன்று வலைச்சரத்தில் இந்த பகிர்வை அறிமுகம் செய்திருக்கேன். நேரம் இருப்பின் வாங்க அக்கா.

  ReplyDelete
 6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 7. //என் தகப்பனே ! உன்னைத் தேடுகிறேன்
  இப்பிரபஞ்ச பெருவெளியில்
  ஒவ்வொரு தகப்பனுக் குள்ளும்
  ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒரு தாயுமானவனை.// வார்த்தைகளில்லை தோழி!

  ReplyDelete
 8. அப்பாவின் அருமையை அனுபவித்த மகள் நான். உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியும் என் தந்தையை, தாயுமானவனை நினைவூட்டியது, தமிழ் செல்வி.
  ஒவ்வொரு பெண்ணும், தனக்கு வரும் கணவன் தன் அப்பாவைப்போல இருக்க வேண்டும் என்றே விரும்புவாளாம். அதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். ' என் ஆழ்மன ஆண்மகன் நீ' என்ற வரிகளில். பாராட்டுக்கள்!
  வலைச்சர அறிமுகத்திற்கு இன்னொரு சிறப்புப் பாராட்டு!

  ReplyDelete
 9. வணக்கம்!.. வலைச்சரத்தில் உங்கள் அறிமுகம் கண்டு வந்தேன்!
  வாழ்த்துக்கள்!...

  அடடா.. தாயுமானவர் கவிதை வரிகள் மனம் நிறைத்துவிட்டது!

  வாழ்த்துக்கள்! தொடருகிறேன்.....

  ReplyDelete
 10. கவிதை வரிகள் நெஞ்சை நெருடுகிறது. பெற்றோரை மறவாமல் மதிக்கும் இப்படியொரு பிள்ளைகளால் தான் இவ்வுலகம் பொய்த்து போகாமல் உள்ளது. சிறப்பான பதிவு.
  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 11. வணக்கம்

  இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 12. என் தகப்பனே ! உன்னைத் தேடுகிறேன்
  இப்பிரபஞ்ச பெருவெளியில்

  வலைச்சரம் வழியாக வந்தேன்.
  என் மனமும் கனக்கின்றது!.. தந்தையை நினைத்து!..

  ReplyDelete
 13. வலைச்சரம் வழியே வந்தேன்.
  என் மனமும் கனக்கின்றது. தந்தையை நினைத்து..

  ReplyDelete
 14. அற்புதமான வரிகள்.... வலைச்சரம் மூலம் அறிந்துகொண்டேன்..

  ReplyDelete
 15. தந்தைக்கோர் அழகான சமர்ப்பணம்!
  (வலைச்சரம் மூலமாக வந்தேன்.)

  ReplyDelete
 16. ஒரு தந்தையாய் நெகிழ்கிறேன்!..

  ReplyDelete