புத்தா ! என்னோடு வாசம் செய்.

Posted by G J Thamilselvi On Tuesday, 1 October 2013 2 comments
புத்தா…!
சில காலம் என்​​ ​
இதயக் கோவிலில்
வாசம் செய்
உன் மன அடையாளங்களைப்
பெறும் மட்டும்
​.​
வெளிப்படும் கோபத்தில் – பிறர்
மாற்றத்தை உறுதி செய்யட்டும்
அல்லவென்றால்
மன இயல்பங்கு வெளிப்படட்டும்
அதுவரையில் இதயக் கோவிலில்
குடிகொள்.
கோபப் பெருந்தீயில் – பிறர்
நம்பிக்கை கொழுந்து கருகாமல்
பார்த்துக்கொள்
​.​
உன்னை போல் சாந்தமுடையவள் அல்ல
பார்வைத் தணலில்  - பிறர்
பொசுங்காமல் பார்த்துக்கொள்
பார்வையில் கனிவில்லை.

ஏ புத்தனே…!
ஆசை வெறுத்தோனே !
ஆசை வேண்டாமென ஆசைப்பட்ட
கோமகனே…!
உன் ஆழ் உணர்வுகள்
என்னில் வெளிப்படும் மட்டும்
இந்த வன்பாலை நிலத்தைப் பொறுத்தருள்
உணர்வுகள் வரண்டு பாலைகளை
உற்பவிக்கிறது
பேச்சோ கோபத்தை சுமந்து
திரிகிறது.
ஒன்று கோழையாய் அழுது திரிகிறேன்
அல்லவென்றால்
இறுகி இரும்பாகிறேன்
இரண்டும் இரவு பகலாக
மாறி வருவதால்
இயல்பும் மாறுகிறதல்லவா…?

ஏ புத்தனே !
மாறாமை என்னுள் நிலை பெறட்டும்
அதுவரையிலும்
என்னுடன் வாசம் செய்
இதய இருட்டறையில் அன்புக் கம்பளத்தால்
போர்த்தி விடுகிறேன் -
சற்று இளைபாறு
ஆனாலும் சொல்கிறேன், நீ
என்னோடு வாசம் செய்
உன்னை என்னில் உலகவர் காணும் வரை
உலகவர் என்னை உள்ளத்தில்
இறுத்தும் வரை வாசம் செய் ​என்னோடு​
உள்ளத்துள் உற்றவனே…!

திண்ணை இணைய இதழில் வெளியான எனது கவிதை.

2 comments: