உள்ளத்து வாசம் செய்

Posted by G J Thamilselvi On Tuesday, 1 October 2013 0 comments

அதீதம் இணைய இதழில் வெளியான எனது கவிதை.


உள்ளத்து வாசம் செய் 

அதிகாலை நேரத்தில் நடு வான கதிரோனாய்budha
புத்தனே உன் முகம் கண்டேன்
அறிவு ஒளி வெளிச்சத்தில் அமைதியின் தரிசனத்தில்
கமல உருவெடுத்தே காதல் கொண்டேன்
இதயத்தை நேசத்தால் நிரப்பி வைத்தேன்
உனக்கொரு ஆலயம் எழுப்பி வைத்தேன்
உன்னை என்னில் தரித்துக்கொண்டேன்
நீயே நானாய் நிலைத்து நின்றேன்.
ஆசையை அழித்திட ஆசைக்கொண்டாய்
என் ஆசையாய் என்முன் நீயே நின்றாய்
மனஇதயத்தை உனக்கென்று எழுதிவைத்தேன்
விளக்கென வந்திட ஏக்கம் வைத்தேன்
கண்விழி மூடியும் என்னை பார்த்தாய்
அந்த பார்வைக்குள் அன்பின் மலர் வார்த்தாய்
சித்திர பதுமையில் உயிர் சேர்த்தாய்
உன் கருணை நிழலால் என்னை வடிவமைத்தாய்
அதிர்கின்ற கடல் அலை போலே உந்தன்
அன்பலை தனை கொண்டு உரம் சேர்த்தாய்
மரணத்தை வென்றிட்ட மனவன்பனே
அந்த வெற்றியை எனக்கென்று கொடை கொடுத்தாய்
காருண்யம் எதுவென்று மொழிபெயர்த்தாய்
இரக்கத்தினால் என்னை இசைய செய்தாய்
இதம் சேர்க்கும் வார்த்தைகள் நாவில் வைத்தாய்
இதயவனே நீ என்னில் நிலைத்தாய்
நிரந்தரம் எனக்கிங்கு நீயே என்பேன்
நிரூபனம் எந்தன் அன்பே என்பேன்
இனியவா எந்தன் உள்ளத்திற்குள்
நிறையனாய் என்றென்றும் வாசம் செய்

0 comments:

Post a Comment