யார் நீ?

Posted by G J Thamilselvi On Sunday, 29 September 2013 4 comments


வானத்தின் கடையாந்திரத்திலும்
பூமியின் நிகழ் புள்ளி ஏதோ ஒன்றிலும்
நீ இருப்பாயானால் உன் முகம் காட்டு எனக்கு
இன்னமும் மிச்சமிருக்கிற நம்பிக்கைக்கு
ஒரு வேளை உயிர் வரக்கூடும் அப்போது


கடவுள் என்பது உன் பொது பெயரா?
எத்தனை முகங்கள் உனக்கு?
இரகசியமாக என் காதில் சொல்லி போ
எனக்கு உதவி செய்யும் அத்தனை முகங்களிலும்
உன்னை காண்பது கொஞ்சம் மட்டுப்படும்
உதவியவர்களுக்கென்று ஒரு போதும்
நன்றி பகன்றதில்லை நான்
முன் வராத உனக்கு நன்றிகள் எதற்கு?

அழகையும் அசிங்கத்தையும் உன்னால்
எப்படி வர்ணம் தீட்ட முடிகிறது
ஒரு கதை ஆசிரியனை போல
பொய்யுடனே வாழும் கவிஞனை போல
ஒரு ஒவியனை போல அட்சரசுத்தமாக
கிறுக்கிப்போடும் கதாபாத்திரங்கள் கூட
உயிர் ஓவியமாக வடிக்கும்படும்
விந்தையை எங்கே கற்றாய்
என்னை நவீன ஒவியமாக்கி
கொஞ்சம் கிறுக்கி அழகு படுத்துகிறேன்
என்று சொல்லி வர்ணம் கொட்டியபோது
மது அருந்தினாயா?
இல்லை இல்லை உன் காதல் நாயகியின்
இதழ் சுழிப்பில் நெகிழ்ந்து மயங்கினாயா?

நீ வடிக்கும் முரண்பாடுகளில்
மானிடம் தவித்து போவதை என்றேனும்
கருத்தில் கொண்டிருப்பாயா?
முதலில் நீ மனிதன் போன்றவனா?
உனக்கு பசிக்குமா?
பசியுணர்வின் வலி அறிந்தவனானால்
உலகத்தை கைபந்தாக்கி உன் விளையாட்டிற்காக
ஒதுக்கி வைத்திருப்பாய்
உயிர் ஜனிக்க செய்து கீறி கொண்டிருக்க போவதில்லை
நீ யாரோ உன்னிடம் எனக்கென்ன
உன் முரண்பாட்டு தோற்றங்களை நிறுத்து
நீ இருக்கிறாயா இல்லையா இரகசியமாக சொல்
நான் ஒலிபெருக்கியில் பரப்பி விடுகிறேன்
இந்த மானிடத்திற்கு
அப்போதாவது விடியல் பயங்களின்றி விடியட்டும்.
இல்லை இல்லை இல்லாதவனே
இருப்பவனாகவே இரு நின் பயத்தில்
வக்கிரங்கள் மட்டுப்படட்டும்.

4 comments:

 1. அழகையும் அசிங்கத்தையும் உன்னால்
  எப்படி வர்ணம் தீட்ட முடிகிறது..... மிக அருமையான வரிகள்

  ReplyDelete
 2. "இல்லாதவனே
  இருப்பவனாகவே இரு நின் பயத்தில்
  வக்கிரங்கள் மட்டுப்படட்டும்." நியாயமான வேண்டுதல்தான்

  ReplyDelete
 3. மிக மிக அற்புதமான கருத்துக்களை எழுதியிருக்கும் கவிதை... கடவுளிடம் தனிப்பட்ட மனத்தாங்கலில் கேள்வி கேட்கப்படுவதுபோல் எழுதி... இறுதியாய் கடவுள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் மீதான பயத்தில் சமூக அவலங்களாவது குறையட்டும் என்று கவிதையை முடித்திருப்பது மிக மிக அருமை... பாராட்ட வார்த்தைகள் போதாது... மிகவும் கவர்ந்த கவிதை...

  தனபாலன் சாரை தொடர்பு கொண்டு உங்கள் தளத்தை blogspot.in லிருந்து blogspot.comக்கு மாற்றிக்கொள்ளுங்கள்...

  ReplyDelete