வெற்றியின் விதை

Posted by G J Thamilselvi On Thursday, 26 September 2013 3 comments
வன்மத்தின் வாசலின் வார்த்தைகள் தொக்கி நிற்கிறது
யாரையேனும் குத்தி கிழித்தற் பொருட்டு
கீறல்களில் வழியும் இரத்தத்தை ருசிக்கவென
மாமிச பட்சிணிகள் வெறித்த பார்வையில் கவனத்தோடு
யாரேனும் தவறக்கூடும் தேள் கொடுக்கால் கொட்டி
உயிருக்கு ஒன்றுமில்லை கொஞ்சம் வலிதான்
சிரித்தபடி சொல்லி நகரலாம்


வாழ்க்கையின் பயணத்தில் படிகள் பல கடந்த பின்பே
பரிசீலிக்கப்படுகிறது முதல் படியின் தப்பும் தவறும்
ஒடுங்கி நிற்கவா என்று எண்ணிய கணம்
தூக்கிப்போடு முன்னேறு அடுத்த படி உன் இலக்கு
முரசுக்கொட்டி துரத்துகிறது உள்ளுணர்வு
நகர்வாயோ நடப்பாயோ பறப்பாயோ
முறைகள் அல்ல தொடர் இயக்கம் தான் வாழ்வு

திகைத்து தான் நிற்கிறேன் அனுபவ ஆசான் முன்
பேசும் மொழி புரிதலற்றவளாக
புரிபடா அதட்டல்களும் கண்டிப்புகளும்
தாய்மொழியில் மழலை பேசும் போது
தூக்கி எறிகிறேன் வலிகளை துச்சங்கள் என
இதோ அடுத்த வாசலின் வழி
வலிகளின் உயிர்ப்பில் ஒளிர்கிறது வெற்றியின் விதை


3 comments:

 1. அருமை.... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. வாழ்க்கையின் பயணத்தில் படிகள் பல கடந்த பின்பே
  பரிசீலிக்கப்படுகிறது முதல் படியின் தப்பும் தவறு///
  எவ்வளவு நிதர்சனமான வரிகள்... எவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட்டீர்கள்... வரிக்கு வரி வாழ்வியலின் யதார்த்தத்தை எடுத்துரைத்த மிக அருமையான கவிதை

  ReplyDelete
 3. //தாய்மொழியில் மழலை பேசும் போது
  தூக்கி எறிகிறேன் வலிகளை துச்சங்கள் என/

  வாழ்வில் எல்லா விஷயங்களையும் சகித்துக் கொள்ள அது உங்களுக்கு உதவும்..

  ReplyDelete