தாய்மை

Posted by G J Thamilselvi On Friday, 6 September 2013 3 comments
தேசாந்திரியை போல, பாதசாரியை போல

வந்துவிடுகிறது அந்த மென் உணர்வு

அழையா விருதாளியாய் வந்து

அழிச்சாட்டியம் செய்யவென.





விடியலில் சிறகடிக்கும்

மலைக்கூடு பறவைபோல

அழுத்தமாக உணர்த்திச் செல்கிறது

அதன் இருப்பை உறுதி செய்யவென



பாறை கண்புகா இடைவெளியில்

கசிந்தோடும் நீர் போல

இதயத்தை வருடிச் செல்ல

வருகிறது அந்த மெய் உணர்வு



எண்ணில் அடங்கா துளிகளிலே

ஒரு துளியாய் உள் நுழைந்து

உறவாடும் அணு பொருளில்

உயிர்க்கிறது பெண் உணர்வு



மகரந்த சேர்க்கையிலே

மலர்விடும் அரும்பாக

தளிர்நடை பயின்று

மணக்கிறது அந்த சேய் உணர்வு



உதிரத்தை உணவாக்கி

உள்ளுணர்வை மொழியாக்கி

வளர்த்தெடுக்கும் வார்ப்பினிலே

உதிக்கிறது தாய் உணர்வு



பிரிந்தோடும் கிளை போல

விலகியோடும் உறவாக

நெகிழ்ந்தோடி போயிடினும்

வேர் பற்று அம்மாவின் அன்புணர்வு



தேசாந்திரியை போல, பாதசாரியை போல

வந்துவிடுகிறது அந்த மென் உணர்வு

எல்லாமே அதுவாக வியாபிக்கும்

தாய்மையின் சேய் உணர்வு.

3 comments:

 1. சிறப்பிற்கு மேலும் சிறப்பு... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. “உதிரத்தை உணவாக்கி//உள்ளுணர்வை மொழியாக்கி//வளர்த்தெடுக்கும் வார்ப்பினிலே//உதிக்கிறது தாய் உணர்வு” என்னமாய் எழுதுகிறீர்கள்!

  ReplyDelete
 3. தாய்மை ஒரு பூரணத்துவம். நிறைகுடம். தியாக பூமி. செல்லப்பா சொல்வது சரி தான்.
  இன்னம்பூரான்

  ReplyDelete