நேசத்தின் ஆழ்கிணற்றில்...!

Posted by G J Thamilselvi On Friday, 6 September 2013 3 comments

கரு நிலா முற்றத்தில்
கரு மை பூசிய சாலையில்
ஒளி நிலவாய் அவன் நின்றான்
அண்டவெளி வீரன் அவன் 


அந்த பரட்டைத் தலைக்குள்
எத்தனை குருவிகளோ ?
உள்ளுரையும் மூளைக்குள்
எத்தனை கதறல்களோ ?

என்று இசை மொழிந்தான்
என்று ராகமிட்டான்
அந்த ஓலத்தில் நாய் ஒன்று இணைந்தது
வாலை ஆட்டிய படி பாசப்பிழம்பென

பரிகசித்து நகரவோ பயந்து அலறவோ
ஒரு மனிதமும் இல்லை
கரு நிலா மை பூசிய முற்றத்து இரவில்
முற்றுப்பெறாமல் இசைக்கப்படுகிறது
ஒரு அபஸ்வர ராகம்

கால் அகற்றி அமர்ந்து எழுகையில்
நடராச பாவனையில்
நடுங்கித் தான் போகிறது
ஒளி இழந்த நடு இரவு

நட்சத்திரங்கள் நடுங்கி
மேக சீலைக்குள் முகம் புதைக்க
ஆக்ரோஷித்து சிரிக்கிறான்
அவன் பைத்தியக்காரன்

ஆடை கலைந்ததுணரா நிர்வாணன்
மழலை போல் துள்ளி ஓட
விளையாட்டு பாவனையில்
நடம் புரிகிறான் பைரவ மூர்த்தி

வீதி கொஞ்சும் மங்கிய விளக்கொளியில்
இரவு தேநீர் கடை ஒன்றில்
கை ஏந்துகிறான் கவலையற்ற கடவுளவன்
கொட்டப்பட்ட தேநீரில் சரிபாதி பங்கு வைத்து
எறியப்பட்ட ரொட்டித்  துணுக்கை
படையலாக்குகிறான் பைரவனுக்கு

உண்ட களைப்பு உறங்க மறுத்த விழிகள்
சுருண்டு கொண்ட பைரவனுக்கு
தாலாட்டு வைபவம் தான்
இசைக்கப்படுகிறது ஒரு அபஸ்வரம்
நேசத்தின் ஆழ்கிணற்றில்.


3 comments:

  1. நேசத்தின் ஆழ்கிணற்றில்..

    முழுவதும் விளங்க இயலவில்லை

    ReplyDelete

  2. சமயத்தில் பயப்படுத்திவிடுகிறீர்களே!

    ReplyDelete