சிநேகிதி

Posted by G J Thamilselvi On Wednesday, 18 September 2013 4 comments
இன்று விடியாமல் இருந்திருக்காலம். இது என்ன வாழ்வின் எதார்த்தமான மகிழ்ச்சியை மணலில் போட்டு பிசைந்துண்பது போன்றதொரு உணர்வு. அவளை பார்க்காமலாவது இருந்திருக்கலாம். இரண்டும் நடக்கவில்லை, அவளை பார்த்துவிட்டேன். வட்டாட்சியர் அலுவலகத்தின் வாசலில், ஒல்லியாய் ஈர்க்குச்சி உடம்போடு, மூன்று பிள்ளைகளை கையில் அரவணைத்தும் ஒன்றை இடுப்பிலும் சுமந்தபடி...! நினைவடுக்குகளின் வாசலை கடந்து கிடுகிடுவென பின் ஒடுகிறது நினைவு. அவள்...நெற்றியை சுருக்கி நினைவுப்படுத்த முனைகிறேன். எப்படியும் பாத்து 20 வருடம் ஒடி போய் இருக்கும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த பிறகு, பள்ளியில் நாங்கள் குழும்மாக நட்ட மரக்கன்றடியில் நின்று பிரியபோகிறோமே என்று அழுத ஞாபகம்.


அந்த மரக்கன்று தான் நாங்கள் உணவு உண்ணும் இடம். காக்கா கடிகள் அங்கு அநேகம். ச்சீ எச்சில் என்று யாரும் சொன்னதில்லை. இப்போது நினைவு வந்திருந்த்து. ஏய் தனம் என்று அழைத்த போது முகத்தை திருப்பி எங்கோ வேடிக்கை பார்த்தாள். அருகில் போய் பற்றி திருப்பினேன், யார் நீங்க என்று வினா எழுப்பினாள்.

நான் திகைத்து போனேன். தனமா? என்னையா யார் என்று கேட்கிறாள்? நினைவு மீண்டும் பின் ஓடியது. எல்லாம் மறந்து போவீங்க இல்லடி என்று இழுத்த போது ஆயுசு முடியும் போது வந்து நின்னாக்கூட மறக்கமாட்டேன்டி என்றவள். டீச்சர் தங்கச்சி எங்க என்று விடிந்த்தும் வந்து நிற்பவள். இப்பொழுது யார் என்கிறாள்.

கண்களில் கருவளையம், உதடுகளில் உள்ளிருந்து வெளிபுறமாக செம்மை படர்ந்திருந்த்து. முகம் கருத்து சிறுத்து இருந்தாலும் உருண்டு திரியும் விழிகள் மட்டும் அப்படியே...!

சுண்ட புளியாங்கா, மாவடு, தக்காளி, கூட்டாஞ்சோறு, ராஜக்கல்லு சுனைகுளியல்...பனைவண்டி பயணம், ஆற்றோர மாரியம்மன் என்று எத்தனையோ நினைவில் நின்றது.

அவளுக்கு மட்டும் என் நினைவே இல்லை. அந்த முகம் விரோதித்து நின்றது. ஏன்....?

யார்ம்மா அது தனலட்சுமி – அலுவலக பணியாளர் அழைத்த போது குறுகி தலைகவிழ்ந்து சென்றாள்.

எங்கயாச்சும் போய் நோவ தொத்திக்க வேண்டியது, பிறகு இங்க வந்து ஒப்பாரி, குடும்பத்த பாக்க வழியில்ல, வேல செய்ய முடியலன்னு, இதுங்க வியாதிய வேற சொல்லக்கூடாதாம்...இதுங்களுக்கு 1000 ரூபாய் தண்டம்.

செல்வண்ணே... வாய மூடிட்டு சும்மா இருக்க மாட்டீங்க

நீயா நீ இருக்குறது தெரியாம பேசிட்டேம்மா என்று முணு முணுத்தபடி நகர்ந்தார் அந்த மனிதர்.

இவள் கையில் ஆர்டர் காஃபி?, எச்ஐவி நோயாளிகளுக்கு அரசு தரும் 1000 ரூபாய் உதவித்தொகைக்கானது.

எனக்கு அழுகையாக வந்தது. நான் அவளை பார்க்காதிருந்திருக்கலாம். அல்லது இன்று எனக்கு விடியாமலே கூட இருந்திருக்கலாம்.

நான் எதுவும் பேசவில்லை. பாத்த்தருகே மண்டியிட்டு அமர்ந்து அழத்தொடங்கினாள். அவள் முகத்தை பற்றி நிமிர்த்த முயன்றேன். என்னை தொடாதடீ தமிழு என்ற போது. நான் உடைந்து போய் இருந்தேன். வாய்க்கா வரப்பு, காடு மேடு என்று தங்கச்சி தங்கச்சின்னு தூக்கிக்கிட்டு சிரிஞ்சவ,   
அவளுக்கான செம்பருத்தியை என் தலையில் சூடி அழகு பார்த்தவள் நட்பென்ற சுகமான அடுக்குகளில் கவிதையாய் என்னுள் உயிர்த்து நின்றவள், இன்று என்னை தொடாதடீ என்று அழுத போது மனதின் வேர் வரை வலித்த்து.

எப்படி ஏன் என்று நான் கேட்கவில்லை, அவளாகவே சொல்வாள் என்றொரு எதிர்பார்ப்பு. அவள் சொல்லவில்லை...அம்மாக்கு டாட்டா சொல்லிடு போலாம்னு, என் பதிலை எதிர்பார்க்காமலேயே கடந்து போகிறாள்.

என்ன தமிழு இப்பதான் வந்தியா? என்ற கேள்விக்கு நிமிர்கிறேன். அங்கு செல்வராஜ் அண்ணா எயிட்ஸ் நோயாளிகளுக்கு கவுன்ஸ்லிங் தருபவர். உங்கிட்ட முன்ன ஒருமுற சொல்லல, பொண்டாட்டிக்கு எயிட்ஸ் இல்ல புருஷனுக்கு வந்துடுச்சு, தெரிஞ்சு பொண்டாட்டி வரமாட்டேங்குறான்னு காண்டம் முனைல ஊசியில குத்தி அதப்போட்டுட்டு படுத்திருக்கான் கம்மனாட்டி...பெரிய பையனுக்கு மட்டும் தான் இல்ல....மத்த குழந்தைகளுக்கும் இருக்குன்னு சொன்னபோது, விக்கித்து நின்றேன்.

நமக்குதான் இப்படி மனைவி நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாத மிருகம். இது என்ன விதமான தாம்பத்தியம் ........?
தமிழர் பண்பாடு இறந்து போனதை ஆணி அடித்து உணர்த்தியது இந்த நிகழ்ச்சி, ஒழுக்கமில்லா சந்த்திகளை உற்பவித்துக்கொண்டிருக்கிறோம் என்ற மன அயற்ச்சி ஒரு புறம், சந்த்திகளுக்கென்று நோய்களை சொத்தாக்குகிறோம் என்ற வலி மறுபுறம். இந்த நாள் எனக்கு விடியாமலேயே இருந்திருக்காலாம் என்று தோன்றியது.

4 comments:

  1. எத்தனை வலிகள் நிறைந்த வாழ்க்கையது ... தவறே செய்யாமல் தன் வாழ்வு சூனியமானால் என்ன மன நிலையில் இருப்பேன் என்று யூகிக்கவே முடியலை ... நெஞ்சில் பாரம் சுமத்திய எழுத்து ...

    ReplyDelete
  2. உங்கிட்ட முன்ன ஒருமுற சொல்லல, பொண்டாட்டிக்கு எயிட்ஸ் இல்ல புருஷனுக்கு வந்துடுச்சு, தெரிஞ்சு பொண்டாட்டி வரமாட்டேங்குறான்னு காண்டம் முனைல ஊசியில குத்தி அதப்போட்டுட்டு படுத்திருக்கான் கம்மனாட்டி...பெரிய பையனுக்கு மட்டும் தான் இல்ல....மத்த குழந்தைகளுக்கும் இருக்குன்னு சொன்னபோது, விக்கித்து நின்றேன்.// இந்த மிருகத்தை என்ன செய்ய? வலி நிறைந்த பதிவு!

    ReplyDelete
  3. நான் படிக்காமலே இருந்திருக்கலாம் இந்த எழுத்தை!...என்னவோ செய்கிறது.

    ReplyDelete