முத்தமிட்டு செல்

Posted by G J Thamilselvi On Monday, 5 August 2013 2 comments
காதல் என்னும் மாயாதேவிதான்
நம்மை பிணைத்திருக்கிறாள் இன்றுவரை
உணர்வு கரங்களால்
வடிவற்ற  உடல் பெருவெளியில்


உள்ளொரு வானம் விரிகிறது
அதன் நீலமும் நிறமாற்றமும்
காதல் முத்தரிப்புகளின் சித்திரம் தீட்டுகிறது
நீண்டதொரு பயண தொடர்ச்சியாக...!

இன்னும் எத்தனை தூரமோ
பாதம் ஒன்றில் குத்தப்பட்ட முள் நிமித்தம்
மீண்டு வருகிறேன் நான்
புறவெளிகளின் வெம்மை தாங்கவென

கசிந்து வரும் குருதியில் ஆ வென்று
அரற்றுகிறது பேதை மனம்
அடி அசடே அங்கே பார் என்கிறாய் நீ
இரத்த வெள்ளத்தில் மூழ்கி கிடந்த தாயவளை காண்பித்து

சிறுமைப்பட்டேன் அன்று
பொட்டாய் வந்த செங்குருதிக்காக அரற்றும் என்னை
போர்முனையில் நிறுத்துகிறாய்
அன்பெனும் ஆயுதம் தந்து

என்ன செய்ய நான்
துணிவற்று துவளும் இதயத்தை சீராக்க
துணிச்சலாய் ஒரு முத்தமிட்டு செல்
உனக்கானவள் நான் என்று

சிதறிச் செல்லும் சிந்தனையை குவிக்க
அதுபோதுமானதாக இருக்கும்
நீளும் இந்த பாதையில்
இணைந்து பயணிக்க ஏங்கும் மனதை
ஆறுதல் படுத்தவென...!

2 comments:

 1. அழகான கவிதை,,,

  துணிச்சலாய் ஒரு முத்தமிட்டு செல்
  உனக்கானவள் நான் என்று,

  சூப்பர்...

  ReplyDelete
 2. கொஞ்சம் அதீதமான கற்பனை. எவ்வளவு பேருக்குப் புரியுமோ! படம் வேறு அச்சுறுத்துகிறது!– நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

  ReplyDelete