சேதி சொல்லி வா...!

Posted by G J Thamilselvi On Tuesday, 27 August 2013 1 comments
தேன் சிட்டு குருவியே ஒரு சேதி ஒண்ணு சொல்லவா
அவன் இல்லாம நான் தவிக்குறேனே அந்த கதை சொல்லவா

பட்டுடுத்த ஆசையில்லை சொக்கத்தங்கம் தேவையில்லை
அவன் கொண்டு தரும் காதலுக்கு அண்டங்களும் நிகருமில்லை
நிருத்து பார்ப்பதற்கு காதல் ஒரு பொருளுமில்லை
நிர்ணயித்து வைப்பதற்கு தரம் பார்த்து வருவதில்லை
அவன் நேசம் ஒரு வார்த்தையாலே என்னை சேர்ந்தது
அவன் தோளில் சாயும் ஆசையினை அன்றே நெய்தது

உடலின் சீவன் அவன் உயிரின் தேடல் அவன்
நினைவின் கீதம் அவன் நிழல் தரும் தேகம் அவன்
விலக்கமே இல்லாத ஈர்ப்பின் விசையும் அவன்
விழிக்கு பாவை தரும் பார்வை பொருளும் அவன்
அவன் தோளில் சாயும் போது நானே குழந்தையும் ஆனேன்
அவன் மடியில் தாங்கும் நாளில் தாய் உருவானேன்

தேன் சிட்டு குருவியே ஒரு சேதி ஒண்ணு சொல்லவா
அவன் இல்லாம நான் தவிக்குறேனே அந்த கதை சொல்லவா
மேகத்தை தூதுவிட்டு அழுத கதை சொல்லவா
அவன் முன் வந்து நின்ற போது மலர்ந்த கதை சொல்லவா
காலமில்லை நேரமில்லை அவன் நினைவாலே
காய்ந்த மனம் துளிர்விட்டது அவன் உறவாலே
தேகத்தை கடந்து சென்றோம் ஓர்மையினாலே
இதயத்தின் இயக்கமானோம் உயர் பரிவாலே

அவன் இல்லாம நான் தவிக்குறேனே அவன் நினைவாலே
நான் இல்லாமா அவன் தவிக்கவேண்டாம் என் நிலைவாலே
இந்த சேதியை மட்டும் நீ சொல்லி வா தேன்சிட்டு குருவி
என் கண்ணீரை மட்டும் மறைத்து வை என்னவன் நலன் கருதி.

1 comment:

  1. ஒரு பெண்ணின் காதல் ஏக்கம்கொண்ட மனநிலையை அப்படியே கவிதையாக வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்..!!!

    ReplyDelete