எந்திரத்தனம்

Posted by G J Thamilselvi On Sunday, 18 August 2013 3 comments
இந்த வாழ்க்கையின் எந்திரதனத்தை எங்கே தொலைப்பது?

அது வந்து ஒட்டிக்கொள்கிற வேலம்பிசினை போல, வந்திருந்தவனை பார்த்தேன். பல நாள் எண்ணெய் காணாத தலை. மண்ணின் கைங்காரியத்தில் பழுப்பேறிய உடை. மலையை வாழிடமாக பெற்றவன்.
“என் வேலைய முடிச்சுடு உனக்கு சீதாபழம்கொண்டார்ரேன்“ என்றான் தலையை சொரிந்தபடி. இது எங்கூட்டு வேலைக்காரி…என்று நிழற்படம் நீட்டும் போதே 32 பல்லும் சிரித்தது. சொன்னபோதே அவனிடத்தில் வெளிப்பட்டது என்ன? என்று வினா எழுப்பிக்கொண்டேன் நான்.


பாமரத்தானின் அன்பு மனைவியை நினைத்த மாத்திரத்தில் தோன்றிய நெகிழ்வு.

“இந்த வேலக்காரியில்லினா நா எங்க காலில கஞ்சி வைக்கிறதுல இருந்து இராக்கால வைக்கும் வேலதான் போ“ என்றான்.

“எத்தனை பசங்க உங்களுக்கு“ ?

“ரெண்டு ரெண்டும் பையனே“

“என்ன பண்றாங்க“?

“திர்ணாமல காலேசுக்கு போறான் ஒருத்தன், ஒருத்தன் இன்னொருத்தன் எங்கூட காட்டுக்கு வர்றான் ஒத்தாசைக்கி, இத யம்மா என்த செத்த எழுது, மேலுக்கு போற பஸ் போச்சுன்னா ராவாயிடும் அவ மட்டும் தவிச்சுகினு இருப்பா..“

அந்த முக பாவனை அவன் மனைவியை பற்றி பேசும் போதெல்லாம் அழகூட்டி சிரித்தது..

“பலா பழம் எத்துகினு வந்து தர்றேன் இந்த வாட்டி ஓட்டு போடனும் நாங்க, இத ஒருக்கா லிஸ்ட் வருது மறுக்கா வரல“

நான் எழுதிக்கொண்டு தான் இருந்தேன். அவனுடைய விண்ணப்பதை நிரப்பிய பேனாவின் ஓட்டத்தை பார்த்தவன்.

“நா இன்னா சொல்றன் நீ இன்னா எழுதுற, சீத்தாபழம் வேணான்னா பலா பழம் கொண்டார்ரேன்“ என்றான்.

எனக்கு சிரிப்பு கலந்த கவலை வந்தது. அவனுக்குரிய விண்ணப்பம் தான் என்று தெரியா அளவிற்கு அவன் பக்குவப்படாத பாமரத்தான்.

“எதுவும் வேண்டாம். இந்த பார்ஃம் உங்களுடையது தான்.“

ம்ம்ம்ம் என்று வியப்பில் இழுத்தான்.

“வேற இன்னா வேணும் சொல்லு, சாம, புனகு நெய், விளாம்பழம் எதுனா வேணுமா?“

“எதுவும் வேண்டாம்“

“இங்க ஒரு கையெழுத்து போடுங்க“

தலையை சொறிந்து யோசித்தான்.

“எம் பேரு சேம எழுதிகுடு பாத்து போடறேன் “

கீழ் இருந்த காகிதம் ஒன்றிலிருந்து தேர்ந்து சேமன் என்று எழுதிகொடுத்தேன். அதை பார்த்து காப்பி அடித்தான் அவன். பிறகு அந்த காகிதத்தை மடித்தபடி நான் வச்சுக்கட்டுமா என்றான். ம் என்று தலையசைத்தேன் நான்.

“நான் போவட்டுமா“?

ம் என்று தலையசைத்தேன்

போனபடி திரும்பினான்

“என்ன“

தலையை சொறிந்த படி கசங்கிய இருபது ரூபாய் தாள் ஒன்றை நீட்டினான். “டீயாவது குடிப்ப இல்ல“

“வேண்டாம் போய்ட்டு“ வாங்க என்றேன் வேலையில் மூழ்கினேன்.


எப்போதும் கணணி பார்ப்பது என்பது தலைவலி, இந்த எந்திரத்தனத்தில் இருந்து எப்படி விடுபடுவது? இப்போது டீ அருந்த தோன்றியது.. செல்போன் எடுத்தேன் ஒரு டீ தருவிக்கலாம் என்று, முன் வந்து நின்றான் சேமன், கண்ணாடி டம்ளரில் நிரப்பப்பட்ட தேனீரோடு அவன் கனிவும் நிரம்பி வழிந்தது. அந்த நெகிழ்வில் வாழ்வின் எந்திரத்தனம் விடுபடுவதாக பாசாங்கு செய்தது.

3 comments:

 1. எந்திரத்தனம் என்பது நம் வாழ்வில்
  இயல்பாகிப் போனது...
  அகற்றுவது கடினமே...
  அருமையான கதை மூலம்
  சொல்லியிருக்கும் விதம் அழகு.

  ReplyDelete
 2. இன்றும் பாசாங்கற்ற அன்பு ஆங்காங்கே நெகிழத்தான் செய்கிறது....

  ReplyDelete
 3. this is such a nice and useful information for us...i appreciate urs word Free Blogger premium Themes

  ReplyDelete