திடங்கொண்டு போராடு - காதல் கடித பரிசு போட்டி

Posted by G J Thamilselvi On Friday, 12 July 2013 23 comments
முன் உரை அல்ல இது என் உரை

     நான் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு கதையின் இரு கதாபாத்திரங்களை உள்ளடக்கியது தான் இந்த கடிதம்.

     திடங்கொண்டு போராடு – வலைப்பக்கத்தில் காதல் கடித போட்டி அறிவிச்சு இருக்காங்க நீங்க கலந்துக்கங்கன்னு நண்பர்கள் சொன்னபோது, கடிதம் தானே ஒரு மணி நேரத்துல எழுதி ப்ளாக்ல போட்டுட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தான்னு நினைத்தேன். இந்த கடிதம் என்னை பயங்கர சுத்தல்ல விடும்னு நெனச்சுக் கூட பார்க்கல. வாழ்க்கையில சில விடயங்கள் வலிகளை தோற்றுவிக்க கூடியவை, அந்த வகையில் முக்கிய பங்கு வகிப்பது காதல் என்றால் என்னில் வலிகளை உணரச்செய்து கதாபாத்திரமாகவே மாறச்செய்தது இந்த கடிதம்.


     காதலித்தோ அல்லது காதலிக்கப்பட்டோ இல்லாத என்னுள்ளும் காதல் என்கிற ஏக்கம் இருந்ததை முழுமையாக உணர இந்த போட்டி ஒரு காரணி.

     உங்கள் காதலன் அல்லது காதலிக்கு   நீங்கள் எழுத நினைத்த காதல் கடிதம். இந்த தலைப்புதான் நான் எழுதிய கடிதத்திற்காக நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட தலைப்பு.

     என்னால் உருவாக்கப்பட்ட கதாநாயகி தன் கற்பனையில் ஒரு காதலனை உருவாக்கி அவனை காதலிக்கவும் துவங்குகிறாள். உருவமில்லாத அந்த உணர்விற்கு ஒரு உருவத்தையும் கொடுத்துவிடுகிறாள். அந்த உருவத்தை கொண்ட ஒருவன் நட்பாக அவளுக்கு அறிமுகமாகிறான். அவனோடு பழகும் போது அவள் காதலையே உணர்கிறாள். அவனோ முன்பே ஒருத்தியினிடத்தில் காதல் வயப்பட்டவனாக இருக்கிறான். கதாநாயகியினிடத்தில் நட்பை உணர்கிறான். என் முடிவுபரியந்தம் நீ என் சிநேகிதியாக வரவேண்டும் என்கிறான். 

     இவளோ ஒரு முத்தம் தன் காதல் வாழ்வை மலரச்செய்யும் என்கிறாள். அவனோ எனக்கு திருமணமானால் இப்படி ஒரு கேள்வியை என்னிடத்தில் கேட்பீர்களா என்கிறான். அவளோ எனக்குரியவன் இடத்தில் தான் முத்தம் கேட்டேன் என்கிறாள். இடையில் அவனோடு பழகும் வாய்ப்பாவது கிடைக்கும் என்ற ஆசையில் கதாநாயகி காதலை விட்டுவிடுவது என்று எண்ணுகிறாள். 

     நாயகி எதார்த்தமாக மீண்டும் அவன் புகைப்படத்தை பார்க்கிறாள். அங்கு அவள் கண்கள் காதலை அவனிடத்தில் பகிருகிறது. அவனுக்காக உதடுகள் பொய்சொல்லும் கண்கள் தன் இதய நிலையை காண்பிக்கும் என்பதை உணர்ந்தவள் நிச்சயமாக நட்பை அவனுக்கு தரமுடியாது என்று உணர்த்தப்பட்டவளாக இறுதிவரை அவனை பார்க்கவோ அல்லது பேசவோ கூடாது என்ற முடிவிற்கு வந்துவிடுகிறாள். இறப்பின் முன் நிலையிலாவது தன் காதல் நாயகனின் உணர்வு தன்னோடு கலக்கப்படுமா என்ற ஏக்க நிலையில் தன் உணர்வுகளை வெளிப்படுத்தி எழுதுவதாக இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. இரு வேறு திசைகள் ஒன்றிணையுமா? இரயில் தண்டவளங்கள் அணைத்துக்கொள்ளுமா?

     நானும் நான் உருவாக்கும் கதாபாத்திரமும் வெவ்வேறா? நான் கதாநாயகியாகவே வாழ்ந்து கடந்து உணர்ந்து எழுதியதால் நானே அவள் என்றும் எண்ணலாம்.

     இடையில் இந்த போட்டியில் இருந்து விலகிகொள்ளலாம் என்று எண்ணினேன் என்னால் காதல் கடிதம் எழுத முடியவில்லை என்பது தான் உண்மை. அந்த உணர்வே என்னை அதிக வலிகளை உணரச்செய்தது. இதுவும் காதல் தான் என்று தோன்றியதால் காதல் அவரவர் மனபுரிதலின்படி வெளிப்படுகிறது என்பதாலும் இந்த கடிதத்தை போட்டிக்கென சமர்ப்பிக்கலாம் என்று முடிவெடுத்து இவ்விடத்தில் வெளியிடுகிறேன்.

     நான் முடியாது என்று எண்ணிக்கொண்டிருந்த போது இன்று என் அலுவலக உடன் ஊழியர் ஒருவர்.

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி 
இடைக்கண் முரிந்தார் பலர். 

     என்ற திருக்குறளை கூறி அதற்கு பொருளும் கூறினார். அதை இணையத்தில் தேடிய போதோகலைஞர்

     தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.

சாலமன் பாப்பையா

     தம் ஆற்றலை அறியாமல்ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.

மு. வரதராசனார்

     தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.

     இவர்களின் பொருளுரைகளை படித்த பின்பு பின்வாங்குவது என்பது அசட்டு தனம் என்று தோன்றியது.

     இவர்களின் பொருளுரைகளை படித்த பின்பு பின்வாங்குவது என்பது அசட்டு தனம் என்று தோன்றியது.

இந்த கடிதம் என் எழுத்தின் வாழ்வனுபவம்.

     நான் மூன்று கடிதம் எழுதினேன். மூன்றாவது கடிதத்தையே இவ்விடத்தில் வெளியிடுகிறேன். முதல் கடிதம் என் உயிர்ப்பை கொன்று சென்றதால் அதை மீண்டும் அசைபோடும் துணிவு என்னிடத்தில் இல்லை. இரண்டாவது வாய்ப்பிருந்தால் மற்றும் ஒரு நாளில் பதிவிடுகிறேன், மீண்டும் எழுதவென இவ்விடத்திற்கு வரும் போது. காலம் என் எழுத்தை என்னிடத்தில் இருந்து சுரண்டிக்கொண்டது. இதுவே என் கடைசி பதிவு, என்று நான் எண்ணுகிறேன். இப்பதிவு போட்டியை ஒப்புக்கொண்டமையின் நிமித்தம் எழுதப்பட்டது.

 போட்டிக்கடிதத்தின் துவக்கம்

என் எழுத்தின் உயிர்ப்பானவனுக்கு,

     என் எழுத்துகளில் கசிந்து ஒழுகும் உயிர்ப்பு நீ. என் மென் உணர்வுகளின் பிரதிபலிப்பாகவே இருக்கிறாய். என் கனவுலகின் நாயகனாக இருந்த நீ புற உலகின் காவியனாக வருவாய் என்று நான் என்றும் எண்ணியிருக்கவில்லை. அப்படி இருந்தும் வந்தாய் ஏன்?

     என்றும் என் மழலை பருவ தேடலாய் இருந்தாய் நீ, பருவங்கள் மாற நான் உன்னை பார்த்த விதமும் மாறியது. என் கருத்துக்கள் உன்னோடு தான் பகிரப்பட்டது. என் காதல் உன்னோடு தான் சுகித்தறியப்பட்டது. என் தேடல் நீ என்பது உன்னால் மட்டுமே நிச்சயிக்கப்பட்டது.

                முகமற்ற உன்னிடத்தில் முகவரிகளை தேடாமல், என் காதல் ஒவ்வொரு நிமிடமும் பகிரப்பட்டது. வானத்தில் புள்ளியாய் நின்ற நட்சத்திரம் ஒன்று என்னை பார்த்து கண்சிமிட்டியதிலிருந்து, வயோதிகத்தின் மழலை சிரிப்பு வரை, எல்லாம் உனக்கு அத்துபடி. அங்கே மறை பொருள் எதுவுமில்லை.

     உருவம் அற்ற உன்னை உருவகப்படுத்திக்கொண்டது என் மனது. உயிர்ப்பாய் என் நேசிப்பை தினம் தினம் சொன்னது இதயம். அங்கே அமைதி இருந்தது. ஆளுமை இருந்தது. உண்மை இருந்தது. நான் எதையும் மறைக்கவில்லை உன்னிடத்தில். எண்ணங்களின் நிர்வாணம் அறிந்தவனாக நீ இருந்தாய்.

     எழுத்தாய் என்னருகில் வந்தாய், நட்பென்று உறவுகொண்டாய். சில நேரம் குட்டினாய். சில நேரம் கோபித்தாய். சில நேரம் ஆறுதலானாய். என் காலத்தை ஆண்டுக்கொண்டாய். இப்பொழுது சொல் நீ என் காதலன் தானே?.

     நான் உன்னிடம் வந்த போது நீ என்னுடையவன் என்ற உயிர்ப்புணர்விலே வந்தேன். அழகான தருணங்கள் அது. என் மனதின் அத்தனை கதவடைத்த சன்னல்களும் உனக்காக திறக்கப்பட்டது. இல்லை இல்லை திறக்கும் உரிமையை நீ எடுத்துக்கொண்டாய்.

     என் நினைவுகளில் உன்னை நிச்சயித்துக்கொண்டேன். நினைத்த அந்நாழிகையே மணம்புரிய துணிந்தேன். இக்கணம் நான் உன் மனைவி, உன் மனைவியாக வாழமட்டுமே துணிச்சல் வேண்டும் என்னிடத்தில்.

     சரித்திர நாயகர்களை என் கண்முன் நிறுத்தினாய். மீரா எனக்கு சிநேகிதி ஆனாள். சீதை என்னிடம் சிரித்து மகிழ்ந்தாள். காந்தாரியின் துணிச்சலை எண்ணி வியப்புற்றேன். கண்தெரியாத கணவன் பார்க்காத உலகை தானும் பார்க்காது வாழ்ந்த அவள் திறம் என்னை ஆச்சர்யப்பட வைத்தது. நான் உன்னுடையவள் என்ற வைராக்கியத்தை கொள்ள அது எனக்கு மிகவும் உறுதுணையானது.

     சிலவேளை என் காதலை நான், உருவத்தில் வந்த உன்னிடத்தில் சொல்லியிருக்கிறேன். வெறும் தடுமாற்றம் திருத்திக்கொள், ஆண்களிடம் பேசி பழக்கமின்மை என்றாய், பேசிய பழகிய அனைவரிடமும் அந்த தடுமாற்றம் வரவில்லையே ஏன்?. தடுமாற்றம் என்றால் நீ மறுத்த போது இதயத்தின் ஆணிவேர் வரை வலித்திருக்குமா?. மனம் அற்ற பரவெளி புரிந்திருக்குமா?. ஒரு முத்தத்தை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கும் மனது நட்பின் கற்பிற்குள் எப்படி நிற்கும்?

காதல் என்பது வயதிற்கும் உருவத்திற்கும் மட்டுமே உட்பட்டதா?. உலகத்தின் ஒவ்வொரு இடச்சூழலுக்கும் மனபுரிதலுக்கும்  தகுந்த படி காதல் உணர்வும் உணரப்படுகிறது. கண்டதும் காதலும், காணாத காதலும் உலகத்தில் உண்டு தானே! இதுவும் காதல் தான்.

உன் மனம் அர்ச்சிக்கும் உயிர்பிம்பம் வேறு என்பதை உணராதவளாகிவிட்டேன் என்பது வருத்தம். என் காதல் உன்னை காயப்படுத்தியது என்பதை உணர்ந்த போது தவித்து போனேன். ஒவ்வொரு மனமும் தன்நலத்திலே சுற்றிதிரிகிறது என்பதை சுட்டிக்காட்டிய உனக்கு நன்றி. நான் என் காதலுக்காகவும் நீ உன் காதலுக்காகவும் பரிதவிப்பது விந்தை. அங்கு காதல் கண்சிமிட்டி சிரிக்கிறது. 

     உன் கேள்வி எனக்கு புரிகிறது. உன் உணர்வு எப்படி பட்டது என்பதை நான் ஏன் அறிய வேண்டும். அதனால் எனக்கு என்ன? நான் உன்னை தோழியாய் பார்த்தேன். தோழியாய் மட்டுமே நீ எனக்கு வேண்டும். இல்லாவிட்டால் நீ நண்பனை இழந்து போவாய் என்கிறாய். நட்பாக மட்டும் வா, நட்பின் வாசல் எப்போதும் திறந்திருக்கும் என்கிறாய். என்னிடம் உள்ள சிநேகிதி உலகத்திற்கு வேண்டும் என்கிறாய். உலகத்தில் உள்ள உயிர் பொருள் ஒவ்வொன்றிற்கும் என்னால் நட்பை தரமுடியும் உன்னிடத்தில் வரும் போது என்னால் காதல் மலர்கொண்டு மட்டுமே நேசிக்க முடியும். எனக்கு புரிகிறது, உன் காதலுக்கு செய்யப்படாத துரோகம். உன் மனதின் உயிர்ப்பின் உணர்வு. உன்னால் வடித்து எடுக்கப்பட்ட சிலையான என்னால் மட்டும் காதல் துரோகம் செய்ய முடிமா?. நான் என்றென்றும் காதலித்துக்கொண்டு தான் இருப்பேன்.

நான் உன்னிடம் கேட்டது, உயிர் காதல் முத்தம் ஒன்றும், நேசிப்பின் அணைப்பு ஒன்றும், லேசான தலைக்கோதலும், பரிவின் உச்சத்தையும் தான். இவற்றை பெண்பால் ஆண்பாலிடம் தான் கேட்க முடியும் என்று எண்ணுகிறேன்.

     எனக்கு திருமணம் ஆகியிருந்தால் நீங்கள் இப்படி கேட்பீர்களா? உன் கேள்வி எனக்கு புரிந்தது. ஆனால் உனக்கு திருமணம் ஆகவில்லையே......குற்றம் ஒன்றும் செய்யவில்லை இவ்விடத்தில். இந்த கேள்வி இப்பொழுது நீ என்னவனாக இல்லை என்பதையும் எனக்கு உணர்த்தியது. உன்னிடத்தில் என்னுடைய அவனை உணர்ந்தேன் என்பதையும் உணர்த்தியது.

     என்னுடையவனிடத்தில் கேட்கப்பட்ட ஒன்றே அன்றி, பிறனிடத்தில் கேட்க வேண்டும் என்று கேட்கப்பட்டதல்ல.

     என் உணர்வுகள் தகிக்கும் அளவு என்னவன் என்னை விட்டுவிட போவதில்லை என்று தோன்றியது. என் உணர்வும் தவிப்பும் புரியாதவனா நீ? உன்னிடம் நான் அவ்வப்போது உணர்ந்த காதலும் மன நெருக்கமும் பொய்யா?

அவதார புருஷனான உன்னால் கூட ஒரு நங்கையின் உணர்வு ரீதியான நேர்பொருளை காண முடியவில்லை. உன் மனப்பாங்கின் படி எழுத்துக்களை திரித்து பார்க்கிறாய்.

எனக்கு நீ வேண்டும், இந்த வாழ்வின் நெடும் பயணம் தூரம் கடக்கவிருக்கும் காலபொழுதுகளிலும் என்பதற்காக, என் உதடுகள் பொய் சொல்லும், நான் உன் சிநேகிதியாக வருகிறேன் என்று. உன்னோடு கருத்தாளும் மனம், சிரிக்கும், மகிழும், அழும், அரற்றும், ஆலோசனை உரைக்கும், தேற்றும் ஆறுதல் படுத்தும், நேசிக்கும் நட்பில் கலந்து போகும், உண்மை தான்.

என் விழிகள் பொய் சொல்லாது. அது வெளிப்படுத்தும் காதலை நான் மறைத்துவிட முடியாது. என்னால் உனக்கு நட்பாக வரமுடியாது. என் காதல் கருவாய் இருந்திருந்தால் கலைக்கப்படும் வலி குறைவாக இருக்கும். என்னுள் கருவாகி உருவான காதல் இப்போது வாலிபத்தில் நிற்கிறது. நான் கல்லறைக்குள் போனால் ஒழிய அதனால் இறந்துவிட முடியாது. நானும் என் காதலும் வேறு வேறா?.

உணர்ந்த உணர்வு முக்கியமா, உணரப்பட்டவர் முக்கியமா என்று வினா எழுப்பினாய். உணரப்பட்டவருக்காக என் உணர்வுகளை மாற்றிவிட முடியுமா?, உருவத்தை பார்க்கும்போதெல்லாம் உணர்வுகளும் தொடர்ந்தெழுமே, இரட்டை வேடம் அணிந்து தொடர்ந்து பழகுவதென்பது பாசாங்கு தான் சிநேகிதிக்குள் என்றும் காதலியே உயிர்த்து நிற்பாள்.

     என் ஆத்மாவின் சன்னமான அழைப்பு, இப்போது கூக்குரலாக பெருஞ்சப்தமாக இருக்கிறது. அதன் அழைப்பை நீ உணர்ந்து என்னிடத்தில் வரும் போது அது இந்த உடல் கூடை கடந்து போக ஆயத்தமாக இருக்கும். அப்பொழுதும் என் காதல் உன்னிடத்தில் ஒரு முத்தத்தை கேட்கும். என்னுள் உன்னிடத்தில் உணரப்பட்டது காதலே அன்றி வேறில்லை.
                                 
                       என்றென்றும் உன்னுடையவளாகவே வாழும்
    உன்னவள்

23 comments:

 1. எழுத ஆரம்பித்த நிலை... மனதில் தோன்றிய உணர்வு, போராட்டம் புரிகிறது... குறள் உங்களை ஊக்கப்படுத்தியது மகிழ்ச்சி...

  ஒவ்வொரு வரியும் உணர்வுகள் தகிக்கும் வரிகள்... வலிகள்...

  போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. என்னால் காதல் கடிதம் எழுத முடியவில்லை என்பது தான் உண்மை.//கனவு ?காதல்?கடிதம் ? வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. கேள்வி குறிகளை சற்று விளக்கமாக எழுதியிருந்தால் மகிழ்ந்திருப்பேன் அய்யா

   Delete
 3. போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. ஏதோ ஒரு வலி உணர்கிறேன் தோழி...எனக்குள்ளும் இதற்கு நேர்மாறானதொரு போராட்டம் நடந்ததுண்டு...தோழியான நான் காதலியாக்கப்பட்டுவிடுவேனோ எனும் மனச்சிக்கலில் இருந்து விடுபட்டு பரிபூரண தோழியாய் இன்றைக்கும் முகிழ்க்கிறேன் ...இருந்தாலும் அந்த நாட்கள் நினைவிற்கு வரும் இம்சை உங்கள் எழுத்தில் புரிகிறது.... போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. என் விழிகள் பொய் சொல்லாது. அது வெளிப்படுத்தும் காதலை நான் மறைத்துவிட முடியாது. என்னால் உனக்கு நட்பாக வரமுடியாது. //

  உண்மைகளை ஓங்கி உரைத்துள்ளீர்கள்.. சிறப்பான கடிதம்.. வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ம் நன்றி, சற்று வேகமாக ஓங்கிவிட்டேன் போலும்.

   Delete
 6. // என் விழிகள் பொய் சொல்லாது. அது வெளிப்படுத்தும் காதலை நான் மறைத்துவிட முடியாது. என்னால் உனக்கு நட்பாக வரமுடியாது. என் காதல் கருவாய் இருந்திருந்தால் கலைக்கப்படும் வலி குறைவாக இருக்கும். என்னுள் கருவாகி உருவான காதல் இப்போது வாலிபத்தில் நிற்கிறது. நான் கல்லறைக்குள் போனால் ஒழிய அதனால் இறந்துவிட முடியாது. நானும் என் காதலும் வேறு வேறா?.//

  மிகவும் அனுபவித்து இரசித்த வரிகள்.அருமையான காதல் கடிதம்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் தோழி

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி

   Delete
 7. இரட்டை வேடம் அணிந்து தொடர்ந்து பழகுவதென்பது பாசாங்கு தான் சிநேகிதிக்குள் என்றும் காதலியே உயிர்த்து நிற்பாள்.

  எந்த வரியையும் குறிபிட்டு சொல்ல இயலாமல் வரிக்கு வரி வலியோடு கலந்த உணர்வுகளை காட்டிச்சென்றது அக்கா.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தானே சசி, பார்க்கும் போது கண நேர நினைவாவது காதலை உணர்த்தி போகும் அல்லவா? பார்க்காமலே இருந்துவிட்டால் நினைவு அசைபோடுதல் இருக்கும். ஆனாலும் தர்ம சங்கட நிலைகள் ஏதும் ஏற்படாது. காதலித்துக்கொண்டு நட்பாய் பழகுவது மனதை இரண்டாக பிளந்து வைப்பது. அது நட்பிற்கும் காதலிற்கும் செய்யப்படுகிற மாபெரும் துரோகம்.

   Delete
 8. கனவின் பிம்பமும் நிஜமும் 100 சதவிகிதம் ஒத்துப் போக முடிவதில்லை போல! உணர்வில் தோய்ந்த வலிகளின் வரிகள். அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஒத்து போவதில்லை தான், கனவில் வடிவமைப்பாளர் நாம் மட்டுமே அங்கு நம்போடு பங்கு பெறும் எதிர்தரப்பினர் நம்மை எதிர்த்து ஒரு கேள்விக்கூட கேட்பதில்லை. நேசிக்கிறேன் என்றால் நேசிக்கிறேன் என்று தான் பதில் வரும். வெளியுலகம் அப்படி அல்ல அவர்கள் தனி மன உணர்வுகளை கொண்டவர்கள். உள்ளே வெளியே என்று இரண்டும் நிச்சயம் கிடைப்பதில்லை. வெளியுலகு வேண்டுமானல் உள் உலகை வெளி உலகிற்கு ஏற்றார் போல் மாற்ற வேண்டும். வெளியுலகம் வேண்டாம் என்றால் அந்த நபருக்கு எந்த விதத்திலும் துன்பம் தராமல் விலக வேண்டும். துன்பம் தராமல் விலகமுடிவதில்லை, சிறு மனக்கசப்பாவது நிகழும் அவ்விடத்தில்.

   Delete
 9. வலையுலகில் கணினி அனுபவம் என்ற தலைப்பில் தொடர்பதிவு ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கனவே இன்னொரு பதிவரால் தொடர் எழுத அழைக்கப்பட்டவரை, நானும் அழைத்து குழப்ப விரும்பவில்லை. எனவே தொடருக்கு அழைக்கப்படாத எனக்கு அறிமுகமானவர்களை அன்புடன் எழுத அழைக்கின்றேன். அவர்களுள் நீங்களும் ஒருவர்.

  ( எனது கணினி அனுபவங்கள் ( தொடர் பதிவு )
  http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_25.html )

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா, முயற்சி செய்கிறேன்.

   Delete
 10. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

  ReplyDelete
 11. // உன்னிடத்தில் வரும் போது என்னால் காதல் மலர்கொண்டு மட்டுமே நேசிக்க முடியும்//
  காதலனாக மட்டுமே பார்க்க முடிந்தவனிடம், நட்பு பாராட்ட முடியாமல் தவிக்கும் தவிப்பை மிகவும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
  கற்பனையும், நிஜமும் என்று ஒன்றாக இருந்திருக்கிறது தமிழ் செல்வி?
  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரஞ்சனி அம்மா, கற்பனை செய்ய முடிகிற எல்லாமே நிஜ உலகில் பரிணமித்திருக்கிறது ரஞ்சனி அம்மா.

   Delete
 12. காதலைக் காணோமே என்றுக் குழம்பித் திரும்ப எண்ணிய தருணத்தில் தொடங்கிய கடிதம் அப்படியே என்னை உட்கார வைத்து விட்டது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் தமிழ் செல்வி!

  ReplyDelete