அருந்ததியனை தேடுகிறேன்...?

Posted by G J Thamilselvi On Wednesday, 5 June 2013 4 comments
எங்கும் இருள்...மின்சாரம் அற்ற இரா பொழுது அது. சில்வண்டுங்களின் க்ரீச் க்ரீச் மெல்லிய ஒலிக்கூட இரவின் பயங்கரத்தை எழுப்பி உள் கூட்டு மையங்களில் பய ரேகைகளை உற்பத்தி செய்து மனதின் தைரியத்தை அசைத்து பார்க்க முற்படும் நாழிகைகளில்....மின்சாரம் தொபுக்கடீர் என்று எங்கிருந்தோ சாத்தனை போல் குதித்து...அறை முழுவதும் மின்சாரத்தை பாய்ச்சி இருட்டை ஓடென்று விரட்டியது.


கண்களின் கூச்சத்தை இமைமூடி சமநிலைப்படுத்திக்கொண்டேன். அதிக நாட்கள் இரவில் தனித்திருக்க வேண்டியுள்ளது. சில நாளின் தனிமை என்பது இருளை ஆராயக்கூடியதாகவும்... பல நாளில் இராபொழுது தனிமை என்பது ஆழ்மனதின் ஆழங்கள் வரை பயங்களை ஸ்தாபிக்க கூடியதாகவும் இருக்கிறது. கண்களை மூடி மன ஆழங்களை தேடி பயணிக்கின்ற பயணமானது, கிணற்றில் மூழ்கி தன் உயிரை தப்புவிக்க எண்ணும் நீச்சல் அறியா ஒருவனின் தத்தளிப்பை போன்றது. மனம் உள்ளுக்கும் ... வெளிக்குமாக மூழ்கி தவிக்கிறது. அது மதில் பூனையின் பாவனை ஒத்ததாக தன் நிலையை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.

தலையணையும் போர்வையும் மனதிற்கு துணையென்று படுவதில்லை. மனிதச ஞ்சாரங்களை தேடி ஓடுகிறது. செயற்கையாகவேணும் அருகில் இல்லாத ஒரு மனிதம் தன் அருகாமையில் இருக்க வேண்டும் என்று.

தனிமையை எதிர்க்கொள்ள பயந்து, தொலைபேசியில் சில நேரம் கதை பேசலாம்...எதுவரை...? நிர்மாணிக்கப்பட்ட நேர எல்லைகள் வரை. அங்கு விடைபெறுதல்கள் உண்டு. இனிய இரவுகள் சொல்லி உறங்க சொல்லும் நண்பர்களை, நான் தனித்து இருக்கிறேன், என்னோடு பேசிக்கொண்டிருங்கள்  என்பது ஒரு நிர்பந்த்த்தை உருவாக்கி பந்தத்தை முறிக்க கூடும். அது தேவை அற்றதும் கூட. இங்கே ஒரு தனி உயிரின் சுயநலம் அல்லவா அகோர தாண்டவம் ஆடுகிறது.

இந்த தனிமை தொலைக்க மற்றும் ஒரு வழி உண்டு, கண்கள் சோர்ந்து போகும் வரை படிப்பது. அது சொக்கி என்னை விட்டுவிடு என்று இமைகள் பிணைந்துக்கொள்ளும் போது புத்தகம் கைகளின் பற்றுதலை தொலைக்கும் போது இந்த தனிமையும் இல்லை என்ற பொய்  தோற்றத்தை மட்டுமே நம்மிடத்தில் விட்டு பதுங்கிக்கொள்ளும்.

இந்த மனதால் தொடர்ந்து ஒரே செயலில் நிலைத்துவிட முடியும் என்றால், அவன் தான் ஞானி. படிப்பதும் சில நேரங்களில் போரடித்து போகும். அட இருக்கவே இருக்கிறது பேஸ்புக்...அங்கு தனிமைக்கு கல்லறை கட்டலாம், அதில் பாதகங்களும் உண்டு ஒப்புக்கொள்வேன். அங்கிருப்பவர்கள் யாரும் நண்பர்கள் அல்ல, நண்பர்களை போன்றவர்கள். அந்த சமூக பெருவெளியில் நண்பர்களை தேடுவது அபத்தம். நிஜங்களை தேட போய் கானலில் மாட்டி தாகம் தீராமல் தடுமாறக்கூடும். அங்கு பொய் முகங்கள் அதிகம். அந்த பொய் முகநெருக்கடியின் கூட்டமைப்பில் நிஜம் எங்கேனும் ஒரு தூசியாய் ஒட்டியிருக்கலாம். அந்த நிஜமுக தூசியை தேடுவதில் இனிமையான ஒரு தேடல் அனுபவம் இருக்கிறது.

அங்கு பல பேரின் எண்ணங்களின் அந்தரங்கங்கள் நாய்களின் கோர பற்களையும் அதன் பெருமூச்சுகளின் ஒப்புமை உடையதாகவும் தன் ஆக்ரோஷத்தை கொட்டி தீர்க்க முனைகிறது. அந்த பெருவெளியில் இரவின் காமலீலைகளின் உன்மத்த பேச்சுகளின் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அங்கே ஜனித்திருக்கும் பின்புலங்களில் ஒளிந்திருப்பது ஆண்பாலா பெண்பால அதுவும் இல்லாமல் ஆவின் பாலா என்றே அடையாளப்படுத்திக் கொள்ளப்படாத நிலை.

அப்படி ஒரு சூழல் பெருவெளியின் தனிமையில் தான் அவனை சந்தித்தேன். அவன் யார் என்று தெரியாது. அவளா என்பது கூட தெரியாது. அவனும் அவளும் கலந்த பெருங்கலவையா என்பதும் தெரியாது. அடையாளப்படுத்தப்பட்ட அந்த நிழலுக்குள் ஒளிந்திருப்பது யார் என்று தெரியாது.

“நீ யாரென்று தெரியாமல் பேசுகிறாய், நான் ஒரு அருந்ததியன், தீண்டத்தகாதவன், சென்னை கடற்கரையின் தென்றல் வீசும் இராபொழுதுகளில் சந்தித்தாலும் நான் தீண்டாமல் பேசுவேன்“ என்று...

அவனின் வார்த்தைகள் என்னை சுட்டது. “நான் விவஸ்த்தைகெட்டவன்“ என்றான். அந்த வார்த்தைக்கு எத்தனை அர்த்தங்கள் இருக்கும் என்று மூளை அவசரமாக தேடியது. பேச விரும்பாத ஒருவரிடம் வலிய பேசுவது நாகரீக கொலை. தன்னிடத்தில் தன் இறக்கைகளை சுருக்கிக்கொள்ளும் பறவையினிடத்தில், எனக்காக உன் இறக்கைகளை அகல விரி அந்த வெறுப்பில் நான் நிழல் காய்கிறேன் என்பது அபத்தம். ஆனாலும் உமிழ்ந்த அந்த அனல் வார்த்தைகளின் பிண்ணனியில் இழையோடுகிற சிறு நட்பை, அக்கறையை உணர்ந்த மனம் அவனை அறிய முற்படுகிறது. அதனை செல்லமாக அதட்டி யாராக இருந்தால் உனக்கென்ன உன் வேலையை பார் என்று திசை திருப்ப பட்ட பாடு ஒரு நீண்ட அனுபவ கதை.

அதன் பிறகு அருந்த்தியன் எல்லா திசைகளில் இருந்தும் புண்(ன்) நகை புரிகிறான். வார் அருந்த செருப்போடு எத்தி நடந்த அந்த பாதகைகளை தைத்து தந்த அந்த முதியவனிடத்தில்...

பயணம் ஒன்றின் போது பேருந்து நிலையத்தில் அருகாமையில் சிறுநீர் கழிக்க இடம் தேடி அலைந்த தருணத்தில் வா அதற்கான இடம் இங்கே என்று அடையாளம் காட்டிய அந்த பெண் மணியின் முகத்தில்...
சட்டையற்ற கிழிச்சல் கால் சாராயுடன், புடைத்த வயிறும் சூம்பிய கால் கைகளுடன் நின்ற அவள் மழலை செல்வத்தின் ஏக்க முகத்தில்...


செப்டிக் டேங்க் அடைப்பு நீக்கவென வெற்றிலை மென்றபடி, ஆல்கஹால் நெடியோடு வந்த அந்த இளைஞனின் முகத்தில்...
“குடிச்சிருக்கியா“ என்ற என் கோபப் பார்வையில், ஏளனமாக நோக்கியபடி குடிக்கலினா இந்த கப்பை யார் தூர் வார்றதாம்..., குடிக்கலினா அதெல்லாம் செய்ய முடியாது என்று இடுப்பில் சொருகப்பட்டிருந்த பாட்டிலை எடுத்து வாயில் சரித்து ப்பா என்று சப்புக்கொட்டி, தலையை விநோதமாக அசைத்து நகர்ந்த அந்த இளைஞனின் வார்த்தைகளில்... அருந்த்தியன் புண்(புன்) நகை புரிகிறான்.

நான் அவனிடத்தில் சொல்ல நினைத்தது, அவனிடம் சொல்ல முடியவில்லை. ஆனால் இங்கு சொல்ல தோன்றியது. எல்லைகள் அற்ற அந்த பெருவெளியின் இராப்பொழுதில்...நான் ஒரு மனிதனையோ...காதலனையோ...அந்தரங்க நாயகனையோ தேடி வரவில்லை...ஏன் நண்பனையும் தேடவில்லை...நட்பை பட்டுமே பகிர வந்தேன்...அது ஆணோ, பெண்ணோ, இரண்டும் சேர்ந்த கலவையோ...அக்றிணையோ...உயிரற்ற பொருளோ...நான் தேடியது நட்பை மட்டும் தான்...அங்கு தீண்டுதலும், தழுவுதலும் இல்லை. புரிதல் மட்டும் தான்.

பின்குறிப்பு
சக்கிலியர் மற்றும் அருந்ததியர் பெயர்க் காரணம்
தமிழக வேளிர் பிரிவினருள் அதியர் என்ற பிரிவினரும் உண்டு. இவர்கள் தகடூர் பகுதியை (இன்றைய தருமபுரி) ஆட்சி செய்தனர். இப்பகுதி வடுக நாடு என்றழைக்கப்பட்டது. இந்த அதியர் வழியில் வந்தவர்கள்தான் அருந்ததியர். அதியர் என்ற பெயர்தான் மருவி அருந்ததியர் என்ற பெயரானது. அதியர் குலத்து சிறந்த மன்னனை மா+அதியர் = மாதியர் என்றழைத்தனர். மாதியர் என்பது அருந்ததியருக்கு கொடுக்கப்பட்ட மற்றொரு பெயராகும்.

விஸ்வநாத நாயக்கர் (1529-1564 ஆட்சியாண்டு) காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் மதுரைப் பகுதியில் வந்து குடியேறினர். இவர்களுடன் அருந்ததியர்களும் வந்திருக்கலாம்.குறிப்பும் கிடைக்கிறது.

      இவர்களின் முக்கியத் தொழிலான துப்புரவுப்பணியாளர்கள் காரணமாகதலித்துக்களின் உடைகளைக் கழுவும் சாதியினரோடு சேர்த்து மிகவும் தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவில் அடக்கப்படுகின்றனர். வரலாற்றின் ஒருகாலப்பகுதியில்இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு மக்கள் குழுவினர் பலவந்தமாகவும்சமயக்கட்டுப்பாடுகள் மூலமாகவும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் அருந்ததியருக்கு(சக்கிலியர்) இணையான சாதிகளைக் காணலாம். வட இந்தியாவின் சண்டாலா, பாங்கி போன்றவை உதாரணங்களாகும்.

இவர்களின் முக்கிய தொழில் துப்புரவுப்பணியாளர்கள் அகற்றல் என்றபடியால்தலித்துகள் உட்பட ஏனைய சாதியினர் இவர்களுடன் சேர்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இவர்கள் துப்புரவுப்பணி தொழிலுக்கு மேலதிகமாக மேற்கு மற்றும் வட தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளிகளாகவும் ஈடுபடு்த்தப்படுகின்றனர்.இவர்கள் இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் வசிப்பது வழக்கமாகும்.

அருந்ததியர் மக்களின் தொழில் அன்று கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்தவிவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவதுபோர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பதுவிவசாயப் பணிகளில் ஈடுபடுவதுசெருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல்பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள்மின்சாரம்- பம்புசெட்- பிளாஸ்டிக்- ரப்பர்- என்று உருவான மாற்றங்களால்தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இழந்து துப்புரவுப் பணியாளர்களாக சீரழிக்கப்பட்டுள்ளார்கள்.

சக்கிலியர்கள் அருந்ததியர்கள்  இவர்கள் 2009ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு வழங்கிய 3சதவீகித உள் ஒதுக்கிட்டின் படி அரசு கல்வி நிறுவனங்களிலும் மற்றும் வேலை வாய்ப்பிலும்இடம் கிடைக்கப்பட்டாலும்,தனியார் கல்வி நிறுவனங்களில் இவர்கள் கட்டணம் செலுத்தி படிக்க முடியா சூழ்நிலையில் உள்ளனர். ஒரு சிலர் தனியார் நிறுவனங்களில் சேர்ந்தாலும் அவர்களின் குடும்பம் கடன் சுமையில் சிக்கி மிகவும் அவதிபடுகின்றனர். தனியார் நிறுவனங்கள் இவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில் தயக்கம் கட்டி மறுக்க படுகின்றனர். இதன் காரணமாக பட்ட படிப்பு முடித்தவர்கள் கூட தொழிலாளிகளாகவே இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

நன்றி விக்கிபீடியா
மேலதிக தகவல்களுக்கு
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D


4 comments:

 1. இவர்களின் நிலை மாற வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் அய்யா

   Delete
 2. அறியாதன அறிந்து கொண்டேன் அய்யா. இவர்களின் நிலை மாற வேண்டும்

  ReplyDelete