துணிந்து நில்

Posted by G J Thamilselvi On Sunday, 5 May 2013 2 comments

மூச்சை இழுத்து விடு
உன்னை நிதானப்படுத்திக்கொள்
உன் முன்பு யாரேனும் இருந்தால்
உன் உணர்வுகள் அவர்களுக்கு மறைக்கப்படட்டும்


உன் மகிழ்ச்சியோ துன்பமோ
உன் கோபமோ தாபமோ
நா வரட்டும் தண்ணீர் தாகமோ
உணர்வு மறைத்து
போலியாய் புன்னகைத்து
முகமூடி தரித்து பவனி வா

இதை செய்யாவிட்டால்
நீ அன்னியப்படுவாய் இந்த
உலக போலிகளிடமிருந்து
இதை மறந்தாயானால்
ஒதுக்கப்படுவாய்
வாழ்தல் உனக்கானதல்லவென்று

பொய் முகம் தரித்து
அரிதாரம் பூசி இதய அழுக்குகளை
ஒப்பனைக்குள் புதைக்கிறது உலகம்
உன் முன் புன்னகைக்கும் உதடுகள்
உன் பின் புறம் பேசும் மாயை
நீ அறியாத ஒன்று

உலகம் பேசும் முரண்மொழிகள்
உன் செவி தீண்டினால்
துவண்டு போவாயோ...?

நான் சொல்கிறேன்
மூச்சை இழுத்து விடு
உன்னை நிதானப்படுத்து
உன் கோபத்தை முழுபெலனோடு
உற்பவித்து கொட்டு

மகிழ்ந்து களிகூறு உனக்கான
எல்லா உணர்வுகளின் வெளிப்பாடும்
கொட்டி தீர்க்கட்டும் அங்கே

முகமூடியை களைந்து போடு
துணிந்து நில்
உன்னை வெளிப்படுத்து
உன்னை நீயாகவே
எந்த ஒப்பனைகளும் இல்லாமல்
நீயே இவ்வுலகி்ன் லட்சிய மனிதன்

2 comments:

  1. /// உன்னை வெளிப்படுத்து
    உன்னை நீயாகவே
    எந்த ஒப்பனைகளும் இல்லாமல் ///

    அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete