பாராமல் செல்வதேனடா...?

Posted by G J Thamilselvi On Thursday, 16 May 2013 4 comments

ஏனோ சிந்தனையில் மாற்றம்
செம்பழ தீயாய் கொல்கின்றது
பார்வை உன்னை தொட்டு தொட்டு
எனை விட்டுவிட சொல்கின்றது

நீயோ எனை காணாமல்
முன் பார்க்க வேண்டும்
நானோ உன் முகம் நோக்க
விழிப் பதிவாக வேண்டும்


மெல்ல நீ எங்கோ திரும்பும் போது
உள்ளம் உண்டாக்கும் அதிர்வுமேகம்
எந்தன் பார்வை திசை அலையும் போது
குறிச்சொல் உண்டாக்கும் உந்தன் தேகம்

வானம் அது நமை தாங்க
நிலம் ஆக வேண்டும்  அதன்
தேகம் எங்கும் விண்மீன்கள்
மலர் பரப்பாக வேண்டும்

நீயோ எனை தீண்டும்
இளஞ்சூடு தென்றலாக வேண்டும்
நானோ பனி நீராக -  உன்
வெம்மை தாங்க வேண்டும்

கண்கள் துயில் கொள்ள கெஞ்சும்போது
இமை அணைக்க மறுத்திங்கு துஞ்சும்
உந்தன் மடி என்னை தாங்கவென்று
பெண்மை மழலை வடிவாகும்

ஏனடா எனை பாராமல்
குளிர்நீராய் உருகி செல்கின்றாய்
தீயென எனை எரிக்காமல்
மலர் இதழால் வருடி செல்கின்றாய்

4 comments:

 1. /// நீயோ எனை காணாமல்
  முன் பார்க்க வேண்டும்
  நானோ உன் முகம் நோக்க
  விழிப் பதிவாக வேண்டும் ///

  ரசித்தேன்...

  ReplyDelete
 2. செம்பழ தீ....
  இளஞ்சூடு தென்றல்
  உவமானங்கள் கவிதையை சிற்பமாக்குகின்றன...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. மிக மிக அருமை
  கவிதை அழகில் சொக்கிப்போனது மனது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. கொளுத்தும் கோடையில் குளிர் நிலவாய் ஒரு கவிதை!

  ReplyDelete