என் கனவுகள்

Posted by G J Thamilselvi On Sunday, 12 May 2013 1 comments

கனவு வருவது உண்டு
இரவின் இறுக்கத்தில்
காற்று கோபித்து
தழுவ மறுத்த தருணங்களில்
கனவு அர்த்தங்களை
விட்டு செல்லாமல்
கலைந்து போவதும் உண்டு


இமைகளின் உறக்கத்தை
திருடி தின்கிறது என் கனவு
கருணையை புறந்தள்ளி
எண்ணக் குத்தூசியால்
கீறி கொய்கிறது

நிறை உணவில்
உலக வயிறுகள் நிறையும்
நாள் பொழுதில்
ஒரு வேளை அது
தென்றல் இறகால்
வருடிச் செல்லலாம்

உணர்வு வெளிக்காட்டுதலில்
சீவன்கள் சாந்தி பெற்று
அமைதியின் மனதில்
துயிலுறும் நாள் அன்று
என் கனவு கீறல்கள் முற்றுபெறலாம்

வீடின்றி சாலையில்
குளிரும் வெயிலும் வாட்ட
துயிலுறும் அவனுக்கு
இல்லம் ஒன்று கிடைக்குங்கால்
அந்த ஒவ்வாமை
என்னை விட்டு அகன்று போகலாம்

நிறை மதி முழு நிலா போல்
எங்கும் நிறைவுகள் நிறைந்திருக்கும்
நிறை பொருள் நாள் ஒன்றில்
என் கனவுகள் நிரந்தரமாக
மீளா துயர் ஒன்றில் ஆழ்த்திபோகலாம்
மீண்டும் காணாதபடிக்கு1 comment:

  1. மீளா துயர் நீங்கி நனவாகட்டும்...

    ReplyDelete