தினம் என் பயணம் - 8 (மேல்செங்கத்தில் மான் வேட்டை)

Posted by G J Thamilselvi On Tuesday, 21 May 2013 2 comments

மனம் வின்னென்று ஒரு வலியை பரப்பி சென்றது நேற்று இரவு சன் தொலைக்காட்சியின் ஏழுமணி செய்தியை கேட்டபோது. மேல்செங்கம் வனப்பகுதியில் 5 மான்களை சுட்டுகொன்ற சம்பவத்தை பற்றி அந்த செய்தி பின்வருமாறு அறிவித்தது. 
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திற்கு உட்பட்டதான மேல்செங்கம் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய முன்னாள் துணை கமிஷனர் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். வேலியே பயிரை மேய்ந்த கதை இதுதான் போலும்.  சமூக பொறுப்பில் உள்ளவர்கள் தான் அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தகிறார்கள். (முன்னாள் துணை கமிஷனர் என்ற போதும் கூட மனசாட்சி உறுத்தவில்லையா அந்த மனிதருக்கு).

சேலம் மாவட்ட ஓய்வு பெற்ற துணை கமிஷனர் வீரமணி இத்தீயச்செயலுக்கு தலைமையாம். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்த மோகன், சேலம் அழகப்பனூரைச் சேர்ந்த பிரபாகரன், மகேந்திரன் ஆகிய கூட்டு களவாணிகள் சேர்ந்து ஏதுமறிய ஐந்து உயிரை கொலைசெய்திருக்கிறார்கள். மான்கள் கெட்டுபோய்விடக்கூடாது என்பதற்காக அதன் குடலை அகற்றியிருக்கிறார்கள். இதனை இண்டிகா காரில் கடத்தியும் இருக்கிறார்கள். இதன் பிறகு வனத்துறை அதிகாரிகளால் பிடிப்பட்டார்கள், ஜட்டியோடு உட்கார்ந்தபடி போஸ் கொடுக்கிறார்கள் என்பதல்ல சங்கதி (அதையும் ஏன் விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை.) (முன்னாள் அதிகாரி என்பதால் கழட்டாமல் விட்டுவிட்டார்கள் போலும் உடுப்பை – மரியாதை கெட்ட செயலுக்கு மரியாதையாம்) .

இதே மேல்செங்கம் பகுதியில் தான் சில நாட்களுக்கு முன்பு ஆனைக்கூட்டம் வந்து ரோந்து போனது. சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி அந்த கதையாக தன் பாட்டுக்கு போய்ட்டிருந்த ஆனைகுட்டி மேல கல்ல விட்டெரிஞ்சு செத்து ஒழிஞ்ச ஒன்னு ரெண்டு மனுஷங்களோட குடும்பம் பழிபோடுதறது என்னமோ ஆனை மேல தான். மனுஷன் எதுவுமே பண்ணாம யானை வந்து மிதிச்சுருச்சு (என்ன கொடுமை சார் இது).

ஒரு மாதத்தி்ற்கு முன்பு சாத்தனூர் அணைக்கு அருகாமை கிராமமான சொர்ப்பனந்தல் கிராமத்தில் மான் குட்டி ஒன்று தண்ணீர் தேடி வந்துவிட, வனத்துறையினரிடம் கிராமமக்களால் ஒப்படைக்கப்பட்டது. 

காட்டை அழிக்கிறது மனிதன். விலங்குகளின் இருப்பிடத்தை கொள்ளை அடித்துக்கொண்டது மனிதன். பழி போடுவது மட்டும் விலங்கினத்தின் மேல். 

கடந்துபோன விவசாய குறைத்தீர்வு கூட்டங்களில் பேசப்படுகிற கருத்துக்கள் என்னவென்றால், என் வீட்டருகே பன்றி குட்டையிருக்கிறது அதை அகற்ற வேண்டும். (அதிகாரி சொன்னார் பன்றி வந்து என்வீடருகே மனிதன் தொல்லை தருகிறான் என்று கம்ளைண்ட் பண்ண என்ன பண்றது...? நியாயமாக யோசிக்க வேண்டிய விடயம். பன்றியின் இடத்தை மனிதன் ஆக்கிரமித்துக்கொண்டு குரல் உயர்த்தி கூப்பாடு போடுகிறான். பன்றிகளை அகற்ற வேண்டும் என்று. 

வீதிகளில் மாடுகள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. மாடு ஒரு ஒரத்தில நின்ன அது பின்னாடி நின்னுகிட்டு பீய்ய்ய்ய்யய் காது கிழியறது போல ஹாரன் அடிக்கிறது. நடுரோட்டுல தள்ளுவண்டியில தக்காளிய வச்சிட்டு மாடு திங்க வந்த தடியை எடுத்து தலைமேல ஒரே போடு, மாட்டோட மேய்ச்சல் நிலங்களான மந்தவெளி புறம்போக்க அபகரிச்சு கட்டிடமா....காற்று வராம பொட்டி பொட்டியா அடைச்சு கட்டிட்டு உள்ள ஏசி போட்டு உட்கார்ந்துக்கிட்டா...? இடைஞ்சல் மாடா மனிதனா...? 

ஒரு பொறையோ....துளி தேநீரோ சிந்தாதா...என்று ஏக்கமாக பார்க்கும் நாயின் மீது கொதிக்கும் நீரை ஊற்றும் இரக்கம் கெட்ட இழிவு ஜென்மம் மனிதன். 
சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன். அதில் சிங்கம் ஒன்று மானின் அருகாமையில் இருந்த போதும் கூட அதற்கு பசி என்று வரும் வரையில் அந்த மானை ஏதும் செய்யவில்லை. 

ஆனால் மனிதன் பணம் என்ற ஒற்றை காகிதகுப்பையை குறிக்கோளாக்கொண்டு மனிதநேயத்தை கொன்று புதைக்கிறான்.
 இச்செயல்களை அசைப்போடும் பட்சத்தில் மனிதனை போன்று ஒரு இழி பிறவியை இதற்குமேல் இந்த பிரபஞ்சம் தோற்றுவிக்காது என்றே எனக்கு தோன்றுகிறது. 

மீண்டும்
பிரபஞ்சம் எழுதத்தூண்டும் ஏதோ ஒன்றோடு

2 comments:

  1. நல்ல பகிர்வு...தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் தவறு செய்தால்..

    ReplyDelete
  2. இவர்கள் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை...

    ReplyDelete