நானும் உடன் இருப்பேன்

Posted by G J Thamilselvi On Thursday, 18 April 2013 10 comments

மூல கிணறு வெட்டி
முப்போகம் நெல்லு நட்டு
வாரி தந்த எங் குல ராசா
எங்க தான் போனியலோ


சதுர கிணறு வெட்டி
சாமந்தி பூ நட்டு வச்சு
பாத்துதான் ரசிச்சவரே
பறந்துதான் போனியலோ

வச்ச தோட்டம் வாடிருச்சே
பெண்டு புள்ள சாஞ்சிருச்சே
நானிருக்கேன்னு சொல்லி
அணைச்சுக்க வருவியலோ

எந்தருமரே...! எம்மன ராமனே...!
காலங் கடைசி வர
கை பிடிச்சு வருவேன்னு
கைய புடிச்சவரே
ஒதறிதான் போனியலோ


மஞ்ச குளிக்கயில
மறஞ்சு நின்னு பாத்தவரே
பொட்டும் பூவும் வச்சு
ரதியேன்னு ரசிச்சவரே
எல்லாம் மறந்து புட்டு
எங்கதான் போனியலோ

நான் தொட்ட மகராசா
நெருப்பு தொடுமோ உன்ன
தொட்டு கரிக்கையில
பாத்துதான் நிப்பேனோ

உங்கூட நான் வருவேன்
உடன்கட்டை ஏறிடுவேன்
நெருப்பு தொடும் முன்னே
உம்பக்கத்துல நானிருப்பேன்

நீயே மறந்தாலும் 
துறந்தே பறந்தாலும்
பத்தினி சீத நானும்
உங்கூட எரிஞ்சு நிப்பேன்.

10 comments:

 1. ஆகா... அருமையான பாடல்...

  நம்ம சுப்புத் தாத்தா இப்பாடலை கண்டால் அவர் தளத்தில் பாடி விடுவார் என்று நினைக்கிறேன்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. படிக்கும் போதே ராகம் பிறக்கிறது...

  அழகு

  ReplyDelete
 3. சரியான கிராம பாடல்ங்க ரொம்ப அருமை

  ReplyDelete
  Replies
  1. ராகமும் வார்த்தைகளும் கிராமத்திற்கு தாங்க சொந்தம் அதை தக்கபடி கோர்த்தது என்னவோ தமிழ்செல்வி தான் இதை பாராட்டாக எடுத்துக்கலாமுங்களா...?

   Delete

 4. வணக்கம்!

  விண்முகில் தந்த வியன்பா! கிராமத்துப்
  பண்முகில் என்பேன் பணிந்து

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி அய்யா

   Delete
 5. எளிய நடையில் ஒரு காதல் கவிதை.. அருமை..

  ReplyDelete