என்னை நினைப்பாயோ...?

Posted by G J Thamilselvi On Monday, 15 April 2013 10 commentsநெஞ்சுக்குள் தோன்றும் ஆசையை
எனக்குள் மறைத்து நோகிறேன்
கண்களில் உயிர்த்து வெளிப்பட
என்னுடன் கதைகள் பேசினேன்
சாலை எங்கும் பூக்கும்
நெஞ்சில் உந்தன் தாக்கம்


விழிகள் நோகும் என்று நான்
நிலத்தில் பார்வை தாழ்த்தினேன்
உயிரை தீண்டும் பார்வையில்
உள்ளுக்குள் சிலிர்த்து வியர்க்கிறேன்
காதல் நெஞ்சில் சேர
மன போதை எல்லை மீற

கனவு என்னும் கீதையை
தினமும் புரட்டி பார்க்கிறேன்
சிரித்து எனக்குள் சிலிர்த்திட
உந்தன் பிம்பம் தேடினேன்
நீயும் என்னுள் வந்தாய்
தீயாய் தேகம் வென்றாய்

பாதை நீளும் சாலையில்
தொடரும் உந்தன் பாதங்கள்
நீண்டு வழியும் நிழலிலே
பதிந்து பிரியும் பார்வைகள்
மனமோ உன்னை நோக்க
விழிகள் எங்கோ பார்க்க

நிறங்கள் தேடி உடுத்தினேன்
மலராய் உன்னை சூடினேன்
முதலில் நீயே பார்த்திட
தவித்து உன்னை தேடினேன்
முகத்தை நீ பார்க்க
வியந்தேன் வெட்கம் பூக்க

உந்தன் கைகள் தீண்டிட
காணும் பொழுது ஏங்கினேன்
நெஞ்சில் சாய்ந்து துயின்றிட
யுகங்கள் பலவும் தாண்டினேன்
நீயும் என்னை தொட்டாய்
பறந்தேன் விண்ணில் சிட்டாய்

எங்கோ நீயும் மறைந்திட
விழிகள் தவித்து தேடினேன்
மாலை கூம்பும் மலர் என
மனது கூம்ப வாடினேன்
நீயும் தவிப்பாயோ...?
என்னை நினைப்பாயோ...?10 comments:

 1. அழகாய் இருக்கிறது உங்கள் கவிதை..தொடர்ந்து இது போல் எழுதுங்கள்
  வாருங்கள் வந்து இணையுங்கள் நாடி கவிதையில்

  ReplyDelete
 2. வரிகள் அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. நிச்சயம் நினைப்பார் உங்களுக்கு நிம்மதி கொடுப்பார்

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா....ஆனாலும் அது கற்பனை மட்டும் தான்

   Delete