வாழ்ந்து பார்க்கிறேன்

Posted by G J Thamilselvi On Saturday, 23 March 2013 2 comments
வார்த்தைகள் சப்திக்காத மௌனத்தில்
சிந்தனை கூட்டுக்குள் சிறகடிக்கும்
உன் நினைவுகளை மாத்திரமே
காதல் என்று எப்படி அர்த்தப்படுத்துவேன்

உன்னுடனான வாழ்வில் பகிர்ந்துக்கொள்ள
என் அன்பின் அரவணைப்பை தவிர
காணும் வாழ்வியல் ஆக ஒன்றுமில்லை


சில கணம் துடித்து போகிறேன்
உன் வார்த்தை அம்புகள்
என்னில் தகித்து கிழிக்கும் போது

தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியாமல்
குழப்பங்களை குத்தகைக்கு எடுத்து
காதல் என்று பயிரிடப்பார்க்கிறேன்
களையும் காளானுமாக விளைச்சல் இன்றி
நோய்த்து போகிறது என் காதல்

கொஞ்சம் தோள் சாய்
என் விரல்கள் உன் கேசம் கோதட்டும்
அல்லவெனில்.................................
நான் சாயவாவது அனுமதிக்கொடு
பெண்மை சற்றேனும் இளைபாரட்டும்

உன் அருகாமையில் கொஞ்சம் இடம் கொடு
உன்னை தழுவிச்செல்லும் காற்றாவது
என்னை வருடிச் செல்லட்டும்
மீண்டும் பிறப்பேனோ என்னவோ
இந்த நொடி வாழ்ந்து போகிறேன்

உன் விரல் இடுக்குகளில்
இளைத்து போன என் விரல்களுக்கு
உணவாகவாவது உன் ஸ்பரிசம் கொடு
உன் முகம் காணும் பாக்கியத்தில்

அணு துளியிலும் வாழ்ந்து பார்க்கிறேன்.

2 comments: