என்றென்றும் உன்னோடு - 1

Posted by G J Thamilselvi On Saturday, 2 March 2013 1 comments

முன்னுரையாக என் உரை

படுகை.காமில் என்றென்றும் உன்னோடு என்ற தலைப்பில் ஒரு தொடர்கதை எழுதினேன். அது எனக்கு புதுவித அனுபவத்தை கொடுத்த்து. சில இணைய நண்பர்கள் இந்த கதையின் மூலமாக எனக்கு அறிமுகமானார்கள். இதற்கு முன்பும் நான் கதைகள் எழுதியதுண்டு அவை இரண்டு பக்கங்களுக்கு மேல் தன் சிறகை விரிக்க் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்த்து. என்றென்றும் உன்னோடு கதை என்னை ஊக்கப்படுத்தவென்றே நண்பர்களில் ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கியது. கதையின் ஓட்டத்தோடு கருத்துரையிட்டவர்களும், கதைக்குள் கதாபாத்திரங்கள் ஆனார்கள். அவர்கள் கருத்துரைக்கு ஏற்பவே கதை நகர்ந்த்து. அந்த தொடர்கதையை நான் முடிக்கவில்லை. மீண்டும் அந்த கதைக்கு புதுவடிவு கொடுக்க முயற்சி செய்கிறேன், கதையை துவங்கும் போது அந்த கதையின் ஓட்டத்தை நான் எங்ஙனம் நிர்மாணித்திருந்தேனோ அவ்வண்ணமே.

முதல் பகுதி


ஹாய் டியர்ஸ்,


உங்களோடு என் வாழ்வின் நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ளவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். எம் பேரு.......... (கொஞ்சம் நிறுத்துங்கள், எம் பேரு மீனாகுமாரி என் ஊரு கன்னியாகுமாரி, என்று நீங்கள் சன்னமாய் முனுமுனுப்பது, என் செவிகளில் சன்னமாய் ஒலிக்கிறது.)


அய்யோ ! பாருங்கள் உங்கள் பாடல் என்னை திசை திருப்புகிறது.


சரி கொஞ்சம் அமைதியாய் இருந்தால் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.


நான் யாழினி, என் பெற்றோர் எனக்கு வைத்த அருமையான பெயர். யாழைப்போன்று இனிமையாக வாழ்வேன் என்ற எண்ணத்தோடு வைத்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.


யாழினி, 


என்னை நான் வர்ணித்திக்கொள்வதில் ஒரு கிக் இருக்கவே செய்கிறது. சராசரிக்கும் கொஞ்சம் குறைவான உயரம், கொஞ்சம் சாயலில் ஷாலினியை ஒத்த முகவெட்டு, நீண்டகருங்கூந்தல், சரி ஒருமுறைபார்க்கலாம் இன்று இளைஞர்களை திரும்ப வைக்கும் அழகு. (திரும்பி பார்த்தவர்கள் தூக்கம் வராமல் தவித்தால் அதற்கு பொறுப்பு நான் அல்ல).


நகரமும் அல்லாமல், கிராமமும் அல்லாமல், இரண்டும் சேர்ந்த கலவையான ஒரு நகரத்தில் வசிக்கிறேன் நான். அம்மா ரிட்டயர்ட் டீச்சர், அப்பா நோ மோர். நான் என் பெற்றோருக்கு ஒரே மகள். இப்படி உங்களோடு பேசிக்கொண்டே, குளித்து உடைமாற்றி, என் அலுவலகத்திற்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு சென்றுக்கொண்டிருக்கிறேன். மூன்றாவது தளத்தில் என் குடியிருப்பு, அம்மாவின் இருப்புகள் அப்பாவின் மருத்துவ செலவில் கரைந்து போனதால், சேமிப்பு ஒன்றும் அதிகமாக இல்லை. நான் அதைப்பற்றி வெகுவாக கவலைப்படுவதில்லை. நான் படிகளில் இரண்டாவது தளத்தைக்கடந்த போது, அம்மாவின் குரல் சன்னமாய் ஒலிக்கிறது. இந்த பொண்ணு சாப்பட்டை கொண்டுபோகமல் போகிறாளே, வயத்துக்கு அல்சர் வந்தா என்ன பண்றது, டீ யாழினி கொஞ்சம் நில்லேன், வயசாயிடுச்சில்லயா, நடக்கமுடியலடி...........


சற்று தாமதித்தேன், அவள் குரலுக்கு ஒரு வசீகரம் உண்டு, அந்த குரலில் தாய்மை வழிவதால், என்று எண்ணுகிறேன். சாப்பாடு டப்பாவை தந்தபடி, கொஞ்சம் யோசிடி ரங்கநாதன் மாமா தந்தாரே அந்த வரன் உனக்கு பொருந்தும் என்று எண்ணுகிறேன், போட்டோ பைல வச்சிருக்கேன், அப்புறமா பாரு, என்று கெஞ்சலும் கொஞ்சலுமாய் கூறினாள்.


சரிம்மா என்று தலையாட்டி வைத்னேன், இன்றும் சற்று நேரம் அவளோடு நின்றால், வயசான காலத்துல ஏன்டி இப்படி கஷ்டப்படுத்துற, காலாகாலத்துல கலியாணம் பண்ணி, ஒரு பேரனோ பேத்தியோ, பெத்துக்கொடுத்த அத கொஞ்சின சந்தோஷத்தோடு போய் சேருவேனில்ல........என்று அனுதின பல்லவி பாட ஆரம்பித்துவிடுவாள்.


தெருவை கடந்து, பிரதான சாலையில் கலந்து பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க துவங்கினேன். சர்ர்ர்ரக்கென்று கடந்து போகும் வாகனங்களின் ஹாரன் ஒலியும், காலைக்கே உரித்தான குளுமையும், மிதமான வெம்மையும் இதமான உணர்வை மனதிற்குள் விதைத்தது.


பேருந்தில் அவ்வளவாக கூட்டமில்லை. ஆனாலும் அலுவலகத்தை நெருங்குவதற்குள்ளாக வேர்த்து ஒழுகும். தீப்பெட்டிக்குள் அடுக்கிவைக்கப்படும் தீக்குச்சிப்போல ஏம்பா, உள்ளே போ, போ உள்ளே என்று அதட்டலோடு நடத்துனர்கள் அடுக்கப்படுவர்கள். உங்களுகே தெரியுமே நீங்கள் ஒன்றும் இது போன்ற நிகழ்விற்கு விதிவிலக்கு அல்லவே !


நாசியை தொட்டுபோன வியர்வை, சென்ட், பவுடர்பூச்சு, மெதுவடை மல்லிகை பூ, என்று கலவையான மணங்களை உள்வாங்கியபடி நகர்ந்து இருவர் அமரும் சன்னலோர இருக்கையில் அமர்ந்தேன்.


அக்கா மெதுவடை, அம்மா மெதுவடை, மெதுவடை மெதுவடை, என்ற வடை விற்கும் சிறுவனின் குரல் என்னை ஏனோ சங்கடப்படுத்தியது. படிக்கும் வயதில் அவனுக்கு என்ன கஷ்டமோ, ஆலோசனை சொல்வது கடினம், அதை செயல்படுத்துவது தான் கடினம். இந்த வேலையை விட்டு படி என்று சொல்ல எழுந்த ஆவலை எனக்குள்ளே அடக்கிக்கொண்டேன். தினமும் ஒரே பேருந்தில் பயணிப்பதால் அந்த சிறுவன் நன்கு பரிச்சயமானான். குட்மார்னிங் கா, என்று சிரித்தவனை பார்த்து கையசைத்தேன்.


அந்த கையசைப்பு எனக்கு முன்பு நின்றிருந்தவனின் தோளில் சாய்ந்திருந்த குழந்தையின் கவனத்தை என்பால் திருப்பியது. அழகாய் துரு துரு கண்களோடு, சிவந்த இதழ்கள் குவிந்தும் குவியாமல் சிரித்த குழந்தையின் முகம் மலர்ந்து என்பாற் தாவியது.


அப்பொழுதுதான் கவனித்தேன், ஒரு கையில் மாட்டிருந்த பேக்கின் கனமும் குழந்தையின் தாவலும், அவனை நிற்கவே தடுமாறச்செய்தது. என் பக்கத்து இருக்கை காலியாக இருந்தும் அவன் அமராமல் தள்ளி நின்றது, எனக்கு கொஞ்சம் விந்தையாக கூட இருந்தது. ஆண்களில் இப்படிப்பட்டவர்களும், இருக்கிறார்களா என்ற என் எண்ணத்தை அழித்து, ஒரு வேளை கவனிக்காதிருக்கக் கூடும் என்று எண்ணிக்கொண்டேன்.


சார், சார் , என்று இருமுறை அழைத்தும் திரும்பாததால், நான் முகத்தை திருப்பி ஜன்னல் பக்கமாய் வேடிக்கைப் பார்க்கலானேன். அந்த குழந்தை மழலை ஓசை எழுப்பி என்னை கவர முற்பட்டது. அந்த செயல் அம்மாவின் பேரன் பெயர்த்தி கூற்றை நினைவுப்படுத்தவே, நான் அந்த மணமகனின் புகைப்படத்தைப் பார்த்தால் என்ன” ? என்று எண்ணினேன்.
என் பார்வை அந்த குழந்தையின் மீது பதிந்த போது, குழந்தையை வைத்திருந்தவன் நிற்க முடியாமல் பேருந்தின் ஒட்டத்தில் தடுமாறிக்கொண்டிருந்தான். முன்புற இருக்கையில் அமர்ந்திருந்தவர்களிடம், “கொஞ்சம் அவர கூப்பிடுங்களேன்என்றுரைக்க, அவர் அழைக்கும் வேகம் காற்றின் சீற்றத்தில் கரைந்து போனதால், நானே எழுந்து அந்த குழந்தையை என் பாற் வாங்கவேண்டியதாயிற்று.


நான் குழந்தையை பிடுங்குவதாய் எண்ணியிருக்க வேண்டும். அவனின் பிடி குழந்தையை இறுக பற்ற, சற்று சிரமத்துடனேயே அவனிடமிருந்து குழந்தையை நான் வாங்க வேண்டியதாயிற்று. சார் அங்கே சீட் இருக்கு, குழந்தையை வச்சுக்கிட்டு சிரமப்படுறீங்களே வந்து உட்காருங்க, என்ற இருக்கை நோக்கி நகர்ந்தேன். குழந்தையை கொண்டு செல்ல அவன் அனுமதி எனக்கு தேவையாய் இருக்கவில்லை. அவனால் மறுக்கவும் முடியவில்லை, என் பின்னோடே குழந்தைக்காக வரவேண்டியிருந்தது.

முன்புறம் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்களில் யாரோ சீழ்கை ஒலி எழுப்பினார்கள்.

கொஞ்சம் சுமாரா, அழகா, தனியா, ஒரு ஆம்பிளை நடமாட முடியலடா சாமி............என்று கமெண்ட் வேறு.

(கிண்டலும் கேலியும் ரசிக்கும்படியாக இருந்தால் பரவாயில்லை தான், பிறரை காயப்படுத்துவதாக இருக்கக்கூடாதே)
அந்த கிண்டல் அவனை காயப்படுத்தியிருக்க வேண்டும், தேவையா? இருக்கை இல்லை என்று நான் உங்களை கேட்டேனா?. என்று வெதும்பினான்.

அவர்கள் கிண்டலடித்தது என்னவோ என்னைதான், இயல்பாய் எனக்கு தான் வருத்தம் ஏற்பட்டிருக்க வேண்டும். இவன் என்னவோ சலித்துக்கொள்கிறானே என்று தோன்றியது எனக்கு., சாரி சார், உங்களுக்கு இருக்கை வேண்டாம் என்றால் ஒரு பாதகமும் இல்லை. குழந்தையை மட்டும் நான் வைத்துக்கொள்கிறேன், இறங்கும் போது வாங்கிக்கொள்ளுங்கள்

அய்யோ என்ன பெண் நீங்கள், நம் இருவரையும் தான் அவர்கள் கிண்டல் அடிக்கிறார்கள்.

இருக்கட்டுமே, கிண்டலைவிட உங்கள் குழந்தையின் உயிர் விலைமதிப்பற்றதாய் உங்களுக்கு தோன்றவில்லையா? படி நேராய் நின்றிருந்தீர்கள், ஏதோ விபரீதம் நடப்பது போன்று பயம் ஏற்பட்டதால் எழுந்து வந்தேன், இதில் என்ன தவறை கண்டுவிட்டீர்கள், என்னவோ ஏதோ ஆகட்டும் என்றிருக்க, நான் ஒன்றும் விலங்கினம் இல்லவே, சற்று மனிதத்தன்மையோடு சிந்தியுங்களேளேளேளேன்.......................... இந்த இழுவைக்கு காரணம் பேருந்து ஓட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் தான்.

கல்லூரி மாணவர்களின் ஓஓஓஓ வென்ற கூச்சல்,பயணிகளின் சலசலப்பு இறைவேண்டுதல், அங்கு அசம்பாவித சூழலை நிச்சயப்படுத்தியது.

குழந்தையை அவனிடம் கொடுத்துவிட்டு எழுந்தேன், பேருந்து தாறுமாறாய் பயணித்தது. ஓட்டுநர் ஹேண்பாரின் மீது முன்புறமாக கவிழ்ந்திருந்தார்.

1 comment:

  1. உங்களின் நல்ல மனதை எப்படிஅவர்கள் எப்படி அறிவார்கள்

    ReplyDelete