என்றென்றும் உன்னோடு - 4

Posted by G J Thamilselvi On Sunday, 10 March 2013 0 comments

சற்று தொலைவில் நின்றிருந்த அவனை நோக்கி கௌதமனும் ரவியும் சென்றார்கள்,  நான் அவர்களை கவனித்துக்கொண்டிருந்த போதுதான் அந்த ஒலி என்னை திசை திருப்பியது.


சரக்............சரக்.............சரக்.............கென்று காலனி தரையுடன் உரசும் சப்தம். கௌதமனின் அண்ணா, என்னை நோக்கி அந்த நீண்ட காரிடரில் ஓடிவந்துக்கொண்டிருந்தார். எனக்குள் பயம் தன் உற்சவத்தை காண்பிக்க தொடங்கியது.

நான் மூவரையும் நோக்கினேன், அவர்களும் எங்கள் இருவரின் முகச்சாயலை கண்ணுற்றதினால், நடையை துரிதப்படுத்தினார்கள். நான் எழுந்தேன். என் கால் கட்டைவிரல் புடவையில் அழுந்த முன்புறமாக தடுமாறினேன். வந்தவன் என் இடுப்பில் கைகொடுத்து தாங்கி நிறுத்த, அதை ரசிக்கும் மன நிலையில் நான் இல்லை என்பதே உண்மை.

எதிர்பாராத விதமாக நான் யாரையேனும் தொடும்போதோ, அல்லது, யாரேனும் தொடும்போதோ, எனக்கு என்ன உணர்வுகள் ஏற்படுகிறது என்று உற்று நோக்குவது என்பது வாடிக்கைதான், தற்போதோவென்றால், ஆராய்ச்சி செய்யும் மனநிலையில், நான் இல்லை என்பதாலும், அதைவிட முக்கியமாக, ஓட்டுநருக்கு ஏதோ சம்பவிக்கப்போகிறதென்ற திகிலாலும், அவனிடமிருந்து துரிதாமாய் விலகி, மருத்துவரை நோக்கிச்செல்லத்துவங்கினேன்.

சரவணனோட பல்ஸ் இறங்கிக்கிட்டு இருக்கு, அவரோட குடும்பத்திற்கு தகவல் தரவில்லையா நீங்கள்? வினா பொதுவாகவே எழுந்தது.

இந்தவினாவிற்கான விடை எங்களிடத்தில் இல்லை, ஏனென்றால் சரவணின் குடும்ப விடயங்களை நாங்கள் யாரேனும் அறிந்திருக்கவில்லை. காலை எட்டு மணியிலிருந்து இதுவரையிலும் நிகழ்ந்த நிகழ்வுகள் எங்களுக்குள் ஒரு நட்பு பாலம் அமைத்திருப்பினும், சரவணின் குடும்பததிற்கு தகவல் தரவேண்டும் என்று எங்களில் யாருக்கும் எள்ளளவும் தோன்றவில்லை.மருத்துவத்திற்கான கட்டணத்தை கௌதமும், நெட்டையனுமே ஏற்றார்கள், என்றாலும் பணப்பற்றாக்குறை ஏற்படுமாயின் அதை ஈடுசெய்ய நானும் தயாராகவே இருந்தேன்.

நாடித்துடிப்பு அடங்குகிறது என்றால், இறக்கப்போகிறார் என்று தானே அர்த்தம், கடவுளுக்கு மனம் இரங்கவில்லை போலும், இவள் என்ன வாசகர்களை இந்த வாட்டு வாட்டுகிறாள், இவளை அழவைத்து பார்க்க வேண்டும் மென்று திட்டமிட்டுவிட்டார் என்று எண்ணுகிறேன்.

என் கண்களில் மீண்டும் கண்ணீர் மையமிடுகிறது. இம்முறை நான் மட்டுமல்ல, மூவருமே செய்வதறியாது திகைத்து இயலாமையினால் கண்ணீர் துளிகளை பதியனிடுகிறோம்.

நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணமும் நினைக்கின்றதா?, சிறந்தவன் நீ தான் என்று உன்னை கூட்டிச்செல்ல வந்து விட்டதா?. மனம் இசைக்க தொடங்கியது. (லிரிக்ஸ் தவறாக இருந்தால், சரியான லிரிக்ஸை உச்சரித்துக்கொள்ளலாம் வாசகர்கள்)

ஆனால் நெட்டையனின் இறுக்க முகம் என்னை திகைக்க வைத்த்து. அதில் எந்த சலனமும் இல்லை. சிறு வருத்த்த்தைக் கூட அம்முகம் வெளிப்படையாக காண்பிக்கவில்லை. 


அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, அந்த பெண் சற்றெ தலையை மட்டும் நீட்டி, விக்னேஷ் என்று விளித்தாள்.

விக்னேஷ்......... கௌதமனின் அண்ணார்தான், அவன் உள்ளே சென்ற பிறகு, கதவு சார்த்திக்கொண்டது.

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டவளாக, அந்த கண்ணாடி கதவின் வழியே உள்நோக்கினேன்.

சரவணனின் உடல் இருந்த நிலை என்னுள் அதீத பயத்தை உண்டு பண்ணியது. சுவாசிக்க ஆக்ஸிஜன் கொடுத்திருந்தார்கள், உயிர், உடலை பிரிய ஆசித்து போராட்டம் நடத்தியது, அதன் விளைவு, உடல் தூக்கி எரிய, அதனை இருவர் அடக்கி பிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள்.

அதை பார்த்த கௌதமன் பார்வையாளர்களுக்கென போடப்பட்டிருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்து முகத்தை கைகளில் பொத்தி கவிழ்ந்துக்கொண்டான். அவன் முதுகு லேசாக குலுங்கியது.
டேய் என்னடா இது குழந்தை போல, எதுவும் ஆகாது பயப்படாதடா என்று கௌதமனை தேற்ற முயன்றான் ரவி.
இவர்களை பார்த்த பிறகு எனக்கு துளிர்த்த தைரியமும் காணாமல் போய் இருந்த்து. அந்த அறைக்கு முன்பாக மாதா சிலை ஒன்று முதுகு காண்பித்துக்கொண்டிருந்த்து. அதை சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டிருந்த்து. கொஞ்சம் தூரத்திற்கு மணல் கொட்டியிருந்தார்கள். அது ஒரு வேண்டுதல் திடல். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் முழங்காற்படியில் சென்று மாதாவை வணங்குவார்கள்.
கருத்து தெரிந்த்திலிருந்து எதற்காகவும் கடவுளிடம் வேண்டாத நான் இன்று சரவணனிற்காக மாதாவிடம் மானசீகமாய் இறைஞ்சினேன். இந்த கண்ணீர்  எங்கிருந்து வருகிறது, இதயம் வலிக்கும் போதெல்லாம் ஆறுதல் படுத்த வந்துவிடுகிறது.


நான் எதிர்பாராத வேளையில், கதவு திறக்கப்பட்டது, விக்னேஷ் ஐ அழைத்தாள் அந்த “புதியவள், டாக்டர் லிண்டா உங்களை கூப்பிடறாங்க“ என்றபடி பேடில் வைக்கப்பட்டிருந்த தாள்களை என்னிடம் காண்பித்து நீங்க, சரவணா மனைவிதானே, இதில் ஒரு கையெழுத்து போடுங்கள் என்றாள்.

விக்னேஷ் கதவை தள்ளி உள்ளே மறைந்தான்


நான் சரவணாவின், மனைவி அல்லவென்று சொல்ல எத்தனித்த வாயை அடக்கிக்கொண்டேன். நான் செய்வது தவறா சரியா என்று யோசித்து முடிவெடுக்க நேரமில்லை. மனைவி என்று கையெடுத்திடுவதில் சிறு தயக்கமும் இருந்த்து. ஆபத்திற்கு பாவமில்லை என்று மனமும் கெஞ்சியது. இரண்டு மனக்குரல்களுக்கிடையில் மாட்டிக்கொண்டு தடுமாறினேன். கையெழுத்து போடுவதா வேண்டாமா..?சில நேரங்களில் சிந்தித்து நிதானமாய் முடிவெடுக்க நேரம் இருப்பதில்லை. அப்படி நிதானமாய் முடிவெடுப்போம் என்று நாம் ஒத்திவைத்தோமானால், சூழ்நிலை கொண்டு வந்து நிறுத்தும் முடிவை ஏற்க முடியாமல், மறுத்து மாற்றிக்கொள்ளவும் முடியாமல், நெருக்கடியான நிலையில் நிற்போம் என்பதை மறுத்துச் சொல்லவும் வாய்ப்பில்லை.

கையெழுத்திடுவதா, வேண்டாமா என்ற கண நேர போராட்டம் தான், சில நொடிகள் தாமதித்தாலும் சரவணனின் உயிர் பறந்து போக வாய்ப்பிருப்பதால் புதியவளின் கைகளில் இருந்து கையெழுத்து இடவேண்டிய தாள்களை வாங்கி கையெழுத்திட்டேன்.

ஜீவாவின் இறுக்க முகத்தில் சிறு சலனம். 


குழந்தை கௌதமனின் தோளில் தவழ்ந்திருந்தாள். சில நிகழ்வுகள் தூக்கம் பசி மகிழ்ச்சி இவற்றை திருடிக்கொள்ளும் போது மனநிலையில் ஏற்படும் மாற்றம் சுற்றியிருக்கும், சுற்றி நிகழும் செயல்பாடுகளில், உறவுகளில், மனதின் விருப்பங்களில் நாட்டமில்லாமல் போகும், அவ்வண்ணமே என் நினைவுளில் குழந்தை தற்காலிக மறதியை பெற்றிருந்தாள். விக்னேஷ் வெளியில் வந்து பொதுவாக பார்த்து, ......................... அந்த பார்வை மனதில் கலவரத்தை உண்டுபண்ணியது,

அவனிடத்தில் ஒரு ஆழ்ந்த பெருமூச்சு வேறு, சற்று நிதானத்திற்கு பிறகு, அவன் பேசினான்.

சரவணன் இன்னும் ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை, அவரது இதயத்தின் இரண்டு வால்வுகளும் முழுமையாக கொழுப்பினால் அடைக்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த இரவு கடந்து, இந்த இரவில் மீண்டும் மாரடைப்பு ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில், சரவணன் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது. நாளை அப்பல்லோவில் இருந்து இதயத்திற்கான தலைமை மருத்துவர் வருகிறார். அதிக செலவுகள் ஆகும். அவர் குடும்பத்திற்கு தகவல் சொல்லிவிட்டீர்கள் தானே?

இப்போது ஒரு இன்ஜக்ஷன் போடவேண்டும். அதன் விலை மூவாயிரம் ரூபாய், இது கடைசி முயற்சி போட்ட பிறகு எதுவும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்றான்.
அறையினின்று வெளிப்பட்ட லிண்டா 50வயதிற்குரிய தோற்றத்தை பெற்றிருந்தாள். ஆங்கில பெண் சந்தன நிற சுடிதாரின் மீது வெள்ளை கோட் அணிந்த படி. சாந்தமான முகம். ஏதோ ஆங்கிலத்தில் பேசினாள் விக்னேஷிடம். அவர்கள் உரையாடலில் ஜீவாவும் கலந்துக்கொண்டான். ஜீவா சரளமாக ஆங்கிலம் பேசினான். நான் அதிர்ந்து போய் அவன் வாயை பார்த்துக்கொண்டிருந்தேன். லிண்டாவிடம் விடைபெற்று விக்னேஷ் ம் ஜீவாவும் எங்களை நெருங்கினார்கள்.


ஏன் விக்கி கவலைப்படுகிறாய், சரவணனின் தர்மபத்தினி இதோ இருக்கிறாளே?.“

சீரியஸ்நெஸ் புரியாமல் விளையாடாதே கௌதம்என்று அடக்கினான் விக்னேஷ்

நான் யோசித்தேன், எடிஎம் கார்டு பேகில் தான் இருந்தது. பேக் இல்லை. பேக் பேருந்திலேயே பயணித்து டிப்போவில் யாரேனும் பாதுகாப்பாய் எடுத்து வைத்திருக்கலாம் அல்லவென்றால் சக பயணி யாரேனும் சுட்டபழம் என்று காபளிகரம் செய்திருக்கலாம்,


தீவிர சிந்தனையின் போது, கை தானாய் கழுத்து சங்கிலியின் முனை பிடித்து விளையாடும், அது குழந்தை பருவ பழக்கம் என்று எண்ணுகிறேன். தாய் முளை காம்பில் வாய் பதிந்திருக்க, தாலியை பற்றி விளையாடும் குழந்தை.

சங்கிலி........ ஹய் என்றேன்.

என்ன ஹய்“ – கௌதம்

விக்னேஷின் பார்வையில் கேள்வி தொக்கி நின்றது.

நெட்டையன் சற்றே எரிச்சலாய் என்னைப்பார்த்து என்ன என்றான்.

அப்பொழுதும் அவன் பார்வையில் தீக்குழம்பு கழன்றது, அது நிஜமா? அல்லது என் மனம் அவ்வாறு கற்பித்துக்கொள்கிறதா? என்றும் தெரியவில்லை.அவன் பார்வையை சந்திக்க திராணியற்றவளாய், விக்னேஷை பார்த்து, இது மூன்று பவுன் சங்கிலி, எப்படியும் வித்தா, 60,000தேறும், இப்போதைக்கு இது போதும் தானே?

என்னவோ சொன்னாயே அண்ணா, இதோ பார் தர்ம பத்தினி ங்குறத நிருபிக்குறா..““இது என்ன விளையாட்டு, இருக்குற நிலை தெரியாம“ என்றான். நெட்டையன்“இல்ல ஜீவா சார், எதுகெடுத்தாலும் முந்திரிக்கொட்டை போல முந்திக்குறா பாருங்களேன். நாம்பளும் இங்க தான இருக்கோம்.“அவன் பெயர் ஜீவா என்பதா? பெயரில் இருக்கும் ஜீவன் பார்வையில் இல்லையே, கண்கள் கஞ்சியில் தொய்த்து எடுத்ததை போன்று அது என்ன பார்வை.

ஏதோ யோசித்தவனாய், சரவணின் முழு மருத்துவ செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்றான் ஜீவா

நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே........என்று இழுத்தான் கௌதம்.

இப்படி யாழினி பாடவேண்டியது, அவளுக்குபதிலா நான் பாடுறேன் என்று முடித்தான்.

நான் கௌதமனை பார்த்தேன். சற்று முன்பு கசிந்து உருகிய நிலை அவனிடத்தில் இல்லை.


என்னை வம்புக்கு இழுக்கலேன்னா உனக்கு தூக்கம் வராதா?

வம்பிழுக்கிற மாதிரி நீ ஒருத்திதான் இருக்கிற

இந்த பேச்சை இதோட விட்டுடு, எனக்கு ரொம்ப பசிக்கு, ஜஸ்ட் ஒரு காஃபி கிடைக்குமா?

அப்போ நீ ஜீவா வ லவ் பண்ணல

நான் காஃபி கேட்டேன்டா

போய் மாமாகிட்ட கேளு அம்மணி

இவன் பேசியது அத்தனையும் அவன் காதில் விழுந்தாலும், அவன் மறுப்பேதும் சொல்லாமல் இருந்ததில், கௌதம் இப்படி பேசுவது அவனுக்கு விரும்பம் தானோ என்று எனக்குள், சந்தேகத்தை ஏற்படுத்தியது.

என்ன பேசுவதென்று தெரியவில்லை எனக்கு, காலையில் அம்மா ஊட்டிவிட அவசர அவசரமாய் உண்டது. வயிற்றில் பசி பெருங்குடல் சிறுங்குடலை தின்னதொடங்கியிருந்தது.

அட்லீஸ்ட் ஜஸ்ட் சைட்டாவது அடியேன், அம்மணி வெறும் கழுத்தாய் இருக்கக்கூடாது என்று மருத்துவ செலவை ஏற்கும் அந்த பாரிவள்ளலுக்காக

நான் முறைத்தேன்.

ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டிஎன்று ராகம் பாடினான்.

ஏய் என்னடா டி சொல்லறஇது ரவி

என் அக்காவ இப்படிதான் கூப்பிடுவேன்....இவளையும் அப்படிதான் கூப்பிடுவேன்.

என்ன மச்சான் இப்படி சொல்லிட்ட, பிகாசோ ஒவியம் னு சொன்ன” -ஜீவா

ஜஸ்ட் மிஸ், ரெண்டு வயசு பெரியவளா போய்ட்டாளே...

அடப்பாவிஎன்று வாயில் கைவைத்தேன். கௌதம் சிரித்தான் அவன் கண்களும் சேர்ந்து சிரித்தது.
என்னவிடுங்கப்பா, குழந்தைக்கு பசிக்குமில்ல”,

பாருடா நம்ம தாயுமானவள, குழந்தைக்கு பால் ஊட்டினது நானு, தூங்க வச்சது நானு,”

ஹேய் அவனா நீ........... என்று இடைபுகுந்தான் ரவி.

எனக்கு தான் கொஞ்சம் தர்ம சங்கடமானது.அப்போ நீங்க எல்லாம் காஃபி குடிச்சாச்சு

எஸ்இது ரவி

அப்போ நான் உங்க லிஸ்ட்ல இல்ல அப்படிதானே?“

நோ கண்மணி, உனக்கு சீரியல் நடிகைப்போல் அழவே நேரம் சரியா இருக்குஎன்று கிசுகிசுத்தான் ஜீவா

இது என்ன புதுகதை, இந்த துணிவு எப்படி வந்தது இவனுக்கு. நான் திரும்பி முறைக்கதான் எண்ணினேன்....... முடியாமல் இமைதாழ்ந்தது.

இமைகளில் ஒரு வானவில் விழிகளை தொட்டு பேசுதே, இது என்ன புது வானிலை மழை வெயில் தரும்............யாரோ ஹம் செய்வது போல் எனக்கொரு உணர்வு.

நாங்கள் யாருமே எதிர்ப்பார்க்காத சூழலில், எங்களின் மனதின் இதமான உணர்வை கெடுப்பது போன்று..........

அந்த மூதாட்டி சராசரிக்கும், அதிக பருமனுடையவலாய் இருந்தாள். வயோதிகம் நடையிலும், உடலிலும் தெரிந்தது. பெரிய தோடுகள் போட்டதாலோ என்னவோ காது அறுந்திருந்தது. வெற்றிலை காவி பற்களில். எண்ணெய் காணாத தலையை அள்ளி முடிந்திருந்தாள்,

சற்றே வேக நடை, நடையினூடே உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள் அனைவரையும் அவள் புறமாய் திருப்பியது.

அடி பாதகத்தி குடியை கெடுத்தவளே, நீ நல்லா இருப்பியோ நாண்டுகிட்டு சாவியோ..................ஒப்பாரி ராகத்தில் நீண்டது. நான் அவள் புறமாய் திரும்புவதற்கு முன்பாக அவள் கரம் கொத்தாய் என் தலைமுடியை பற்றியது.

நானா, யார் குடியையாவது கெடுப்பேனா?“

அவள் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா

0 comments:

Post a Comment