சட்டங்கள் நிறைவேறும்

Posted by G J Thamilselvi On Monday, 18 February 2013 1 comments


 தனித்த இரவுகள்
தண்மையாய் பேசுகிறது
விழித்தல் மொழியின்
மொழி பெயர்த்தலை


இதய கனவுகள்
அலங்கரிக்கப்பட்ட
உணர்வின் ஈர்ப்போடு
இயல்கிறது

நவில்தல் எல்லாம்
உன் பெயரும்
அதன் உச்சரிப்பும் தான்

வண்ணங்களின் தீட்டலோடு
வர்ண ஜாலங்களில்
இசை பேசுகிறது காதல்

எப்போதும் உன்
செல்ல குட்டுக்காகவே
தவறப்படுகிறது
ஒவ்வொரு நிகழ்வும்

வடித்தெடுக்கப்பட்ட
விதிகளுக்குள்
ஒடுங்கி போவதில்
விருப்பமில்லை எனக்கு

வா சொல்கிறேன்
என் கனவுகளை
உள்ளத்து ஆசைகளை

உன் செவி திறன்
என் பேச்சில்
கொஞ்சம் செலவழியட்டும்

நீயும் சொல்
உனக்கான தளத்தின்
உன்மத்து கருத்துக்களை

உடலுறவு ஒன்றில்
மட்டும் இணைந்து பிரியாமல்
உள்ளுணர்வின் உறுதிக்குள்
ஒன்றாக நிற்ப்போம்
எந்த நொடி பொழுதும்

சடங்கும் சம்பிரதாயமும்
வேர் அறுக்கப்பட்டு
புரிதலில் சட்டங்களற்ற
போதும் சட்டங்கள்
நிறைவேறும் அன்று

உன் ஒருவனுக்காக நானும்
என் ஒருத்திக்காக நீயும்
நமக்கானதாக இந்த உலகமும்
நேர்த்தியோடு.

1 comment: