தினம் என் பயணம் - 1

Posted by G J Thamilselvi On Wednesday, 20 February 2013 2 comments

இன்றைய விடியலின் விசித்திரம், மனவிழித்தலின் நிகழ்விலும் தொடர்ந்தது. நான் உறங்குவேன் என்று மூடிய விழிகளை வற்புறுத்தி விழிக்கச்செய்தேன். இன்று அலுவலகங்கள் முழுவதும் வேலை நிறுத்தமாம். நானும் போகவேண்டியதில்லை என்று முடிவெடுத்த போதுதான் சுப்பிரமணி தேர்தல் துணைவட்டாட்சியர் போன் செய்து தொலைத்தார். “ஆபிஸ் வந்து சேர் என்று. விழிகளின் சோம்பல் இதயத்தை ஒட்டிக்கொண்டால் என்னவாகும் என்று ஒரு எண்ணம் தோன்றி மறைய சிவலோக பதவிதான் என்று எனக்குள்ளாக சிரித்துக்கொண்டேன்.


     என் சிரிப்பை கண்ட அக்காவின் மகன் கேட்டான் “ என்ன சித்தி மெண்டல் ஆயிடலியே”  ச்சீ போடா என்று சிணுங்கிய போதுதான், பொட்டு வச்சிட்டு போறாளா பாரு என்று முனங்கினாள் அம்மா.

     அம்மாவிற்கு வயது 61, நான் மாற்று திறனாளி ஆனாபடியால் அவள் உதவியின்றி எதுவும் செய்துக்கொள்ள முடிவதில்லை என்னால். துணி துவைத்து அலசி வைத்தால் காயபோடுவதற்கு அவள் வேண்டும். முனகாமல் செய்த அம்மா...இப்போதெல்லாம் முறுமுறுக்கிறாள்...அந்த முறுமுறுப்பில் அவளின் வயோதிகம் ஓய்ந்திருக்க ஆசிப்பது தெரிந்தது எனக்கு. முன்பெல்லாம் எதுக்கு என்னை இப்படி பெத்தயாம், நீ தான் செய்யனும்னு வீம்பு பேசுற நான்...இப்பொழுதெல்லாம் என்ன திட்டினாலும் வாயை இறுக மூடிக்கொள்வதோடு சரி. அவள் இன்னும் கொஞ்ச நாள் வாழ விரும்புவது எனக்கு சேவை செய்ய என்பது எனக்கு புரிந்தே இருந்தது ஒரு காரணம்.

     இந்த சாலை பயணம் எனக்கு ஒரு சவால். நெரிசலான வாகனங்களுக்கு நடவில் நீந்தி கடக்க வேண்டியிருக்கிறது. தினமும்

என் மூன்று சக்கர வாகனத்தில் அமர்ந்து, பின் வாங்கி சாலையில் கலந்த போது, இளைய தம்பியின் 2 வயது மகன் அத்த என்று கையசைத்து சிரித்தான். பக்கத்து கடை பிக் பஜாரின் முதலாளி குண்டு ரமேஷ்...வணக்கம் என்று ஒற்றை கரம் தூக்கினான். தலையசைப்பில் வணக்கம் ஏற்று கடந்து செல்ல, தள்ளுவண்டியில் தக்காளி விற்கும் இலாலின் வணக்கத்திற்கு புன்னகைதான் பதில். சாலையில் பார்க்கிற அறிமுகங்களுக்கு எல்லாம் புன்னகை தான் என் வணங்குதல்.

சர்ர்ர்ர் என்று வீறி தூசி பரப்பிவிடும் வாகனங்களில் செயலில், நாசியில் நெடி ஏறி தும்மல் வந்து விழும் தொடராக.

பொதியிழுக்கும் எருது சிறுநீர் கோலமிடும், சிறுநீர் வலைந்து வலைந்து கோடுகாளாக விழ புவி முகம் சுளிப்பதாக தோன்றும் எனக்கு. பொத் பொத் பொத் சாணம் தரையில் விழ ஒன்றுமே நடவாதது போல் நடந்துக்கொண்டிருக்கும் எருது. ஹேய் ஹேய் ஹேய் என்று அதட்டியபடி அதை ஓட்டுபவன். அதை துரிதப்படுத்துவதாக எண்ணி வாலை முறுக்கி இழுக்க அது வலியில் வேகப்படுவது, என் இதயத்தை ஏதோ செய்யும்.

விழுந்த சாணத்தை ஒதுக்கிவிடவோ....அல்லது ஒதுங்கி போகவோ நேரமிருக்காது வாகன ஓட்டிகளுக்கு, சாணம் முழம் நீளத்திற்கு நீட்டப்பட்டு தட்டையாய் புது வடிவம் பெறும். அது மூன்று சாலைகள் கூடுமிடம் முக்கூட்டு ரோடு என்பார்கள் வழக்கமாக, ஞாயிறுகளில் திருஷ்டி கழிக்கிறேன் பேர்வழி என்று கற்பூரம் எரியும், கொட்டாங்குச்சி எரியும். எனக்கு அவ்விடத்தை கடக்கும் போது பூதகியின் உயிர்மையத்தில் பயணிக்கும் உணர்வு ஏற்பட்டுப் போகும். மனம் இயல்பாய் மன்னிப்பு கேட்கும், இருமருங்கிலும் காகிதங்கள் பரம்பி குப்பையும் கூளமுமாக. நம்மிடத்தை தூய்மையாய் வைத்துக்கொள்ளும் ஞானம் கூட இல்லையே என்று வேதனை மிஞ்சும் எனக்குள்.

கோழிஇறைச்சி கடைகளில் தொங்கும் தோல் உரித்த கோழிகளி்ன் மேல் மொய்க்கும் ஈக்கள் நோய்களின் கூட்டமைப்பு என்பதை உணராமல் அதை வாங்கி சமைத்துண்ணும் மக்கள்.

பெருச்சாளி ஒன்று எப்படியோ இறந்து போயிருக்க டயர்களில் தேய்ந்து சிவப்பும் கருப்புமாக நைந்து போயிருக்க, அதை கொத்தும் காகம். அதை தூக்கி போடக்கூட மனதில்லாமல் ஒதுங்கி கடந்து போகும் மனிதர்கள்.

அதற்கு முன்பிருக்கும் கடை முதலாளி, தொழிலாளி யாருக்கும் கூடவா தோணவில்லை...?

     வெற்றிலை எச்சில், சளி துப்பல்கள் தரையில் மண்ணோடு சுருண்டு.

     மனைவியின் மேல் துப்பினால், கணவன் மேல் துப்பினால், நண்பன் மேல் துப்பினால், உறவுகள் மேல் துப்பினால் என்னவாகும்....?

மனைவி மேல் துப்பினால்.....இராத்திரி பட்னிடா மகனே நீ....டைவர்ஸ்தான் ............கணவன் மேல் துப்பினால் அடி துவைத்தல் நிகழும். நண்பன் மேல் துப்பினால்...........நண்பேன்டா....என்ற வசனங்கள் மறக்கப்பட்டு இரத்த ஆறு ஓடும்.

புவியின் மேல் துப்பும் போது உறுத்தவில்லையா ஒருவருக்கும்.

     வாடிய முகங்கள் கடந்துபோகும். காலை மலராக வண்ணச்சீருடையில் பள்ளி மாணவர்கள். சாலைவிதி தெரியுமா என்பதே கேள்வி குறிதான். நான் இடதுபுறம் சென்றால் அவர்களும் நேர் எதிரில் இடதுபுறமாக வருவார்கள் (அவர்களின் வலது புறத்தில்) ஏன் இப்படி...? ஒரு சில நாட்கள் நான் சொல்வது உண்டு சாலைவிதிகளை குறித்து அப்பொழுதெல்லாம் அவர்கள் பார்வையில் சிநேகம் தெரிவதில்லை. ஒருவித அலட்சியமே காணப்படும். நெரிசலால் அவதானித்து போகும் வாகனங்கள். இல்லையென்றால்.....................நம் இந்தியா இவர்களின் கைகளில் தான் ஒளிரபோகிறது.

     சாலை ஓரங்களில் விவேகானந்தரையும், முதல்வரையும் தாங்கிய பதாகைகள். மத நல்லிணக்க கூட்டம், பாரத முதல்வராக்க உறுதி எடுப்பு போன்ற வாசகங்கள்

     வட்டாட்சியர் அலுவலக சுற்று சுவரில் கோபமாக விஸ்வரூபம் கமல். அரைகுறை ஆடையில் ஏதோ ஒரு நடிகையின் ஆபாச பட போஸ்டர். சிதிலமடைந்த பழைய காவல் நிலையம்.

     கழிவு நீர் ஓடுவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்த கால்வாயின் மேல் நிறுத்தப்பட்ட தள்ளுவண்டிகளில் பழக்கடை, காய்கறி கடை, வேர்கடலை கடை, மலர் விற்பனை கடை....எலந்தை பழம், விளாங்கா, கொய்யாக்கா என்று நீளும் பட்டியல்.

     கால்வாயில் ஓடும் கருத்த நீர் இத்தனை கருமையாய் கடவுள் சிலைகள் கூட இருக்க வாய்ப்பில்லை.நாற்றமெடுக்கும் அவ்விடத்தில் மனிதர்கள் அமர்ந்து விற்பனை செய்வது எங்ஙனம். அவ்விடத்தை கடக்கும் போது இயல்பாய் கை மூக்கை பொத்தும். நாசி சுளித்து ஒவ்வாமையை வெளிப்படுத்தும்.

வட்டாட்சியர் அலுவலகம்

     முன் நின்று வரவேற்பது அசோக ஸ்தூபிதான். பின் காந்தி சிலையாக வரவேற்பார். எது எப்படியோ காந்திக்கு இரும்பு குடைபோன்று வடிவமைத்திருப்பதால் காக எச்சம் காந்தி தலையில் இல்லை.

மரங்களில் வாழும் பறவைகளின் எச்சமும், வாகனபுகைகளின் கூட்டமைப்புமாக ஆரோக்கியமற்ற வாடை குடிக்கொண்டிருக்கும் அவ்விடத்தில்.

     தரைவிழும் இலைகளை ஒதுக்கி தள்ள கூட பணியாளர் இல்லாத அலுவலகம் இது. அலுவலகம் பெருக்க வரும் அன்னக்கிளிக்கு ஊதியம் போதவில்லை என்ற கவலை. நொல்ல முப்பது ரூவாய்க்கு இம்மாம் பெரிய ஆபிச பெருக்கனுமா....கேள்வியும் புலம்பலுமாக உயர் அதிகாரி யாரேனும் வருவதென்றால் மட்டும் துரிதகதியில் விளையாடும் விளக்குமாறு அவள் கைகளில்.

     தினம் என் அலுவலக பயணத்தில் என்னை காயப்படுத்தும் சில காட்சிகள் மட்டுமே இவை.

வருங்காலத்தில் என் உலக குழந்தைகள் புவியின் உயிர் உணர்வை மதித்து தூய்மை காத்து செயல் பட வேண்டும் என்பது என் மனதின் ஆவல்.

அப்படி நிகழ்ந்து கொண்டிருப்பதான பாவனையில் என் கனவுகள் நிச்சயம் உறுதிபெறும். அதை நான் காணலாம் அல்லது என் உடல் கூடு மண்ணில் புதைந்து போகலாம். என் பதிவுகள் கதை பேசும் ஒவ்வொரு மனங்களிடமும்.

விடைபெறுகிறேன் மீண்டும் பிரபஞ்சம் எழுதத் தூண்டும் ஏதோ ஒன்றோடு சந்திப்போம்.

2 comments:

  1. சவால் நிறைந்த வாழ்க்கையிலும் சாதித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு சல்யூட்..!

    ReplyDelete
  2. I have seen your blog only today. Quite interesting. Will post comments in Tamil tomorrow. Language flow is simple and touches the heart. Wish ou all the best.

    ReplyDelete