என் காதலன்

Posted by G J Thamilselvi On Thursday, 21 February 2013 3 comments

விழுதுகாளால் தாங்கி நிற்கிறது இந்த ஆலம்
எவ்வளவு காலமோ இதன் பிறப்பு
விதைகளை யார் ஊன்றினாரோ
நீர் வார்த்து யார் ஊட்டினாரோ


வேர் பற்றி எட்டி பார்க்கிறேன்
தூரத்து மாடியில் நீ தெரிகிறாயா என்று
என் விடியலின் சூரியன் நீ தான்
உன் முகத்தில் மலர்கிறது
எனக்கான அன்றைய தினம்

நீ பார்ப்பதாக எண்ணிதான்
ஒவ்வொரு நாளிலும் என் கையசைப்பு
ஒரு போதும் நீ கையசைத்ததில்லை
இல்லை இல்லை நீ அசைத்திருப்பாய்
தூரம் தான் அதை எனக்கு அறிவிக்கவில்லை

ஆயிரம் வேண்டுதல் இருக்கிறது எனக்கு
உன்னை காண்பதே முதல் வேண்டுதல்
பக்தி முக்தியாகி குங்கும தீற்று நெற்றியில்
நீ கிறித்து பெண் தானே.....
கேள்வியோடு பிடிபடும் வரை
உன்னை யார் மாரி கோயிலுக்கு
மறுபக்கம் குடியிருக்க சொன்னது

இன்று என் பயணம்
இன்றோடு முடிந்தது என் படிப்பும்
இனி உனக்கென கையசைப்பு இல்லை
விழுது பிடித்து எக்க தேவையில்லை


அழுகிறேன் அரற்றுகிறேன்
ஏனடி என்கிறாள் தோழி
ஆலம் நண்பன் ஊட்டி வளர்த்த
என் காதல் கதை சொன்னதும்
தலையிலடித்து சிரிக்கிறாள்
வேப்பமரத்தையா காதலித்தாய் என்று

அவளுக்கு என்ன தெரியும்
ஆயிரம் கதைகள் உன் மீது
சாய்ந்தே பேசினேன் என்று
அத்தனை தனிமையும் உன் மடியில்
தொலைத்தேன் என்று
காதல் அலங்கரிக்கப்பட்ட
கவிதைகள் அத்தனையும்
உன் குளிர் நிழல் வருடலில்
உருவானது என்று

3 comments:

 1. சிறப்பான கவிதை! அருமையான உணர்வுகளை வெளிப்படுத்தியது! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. ஓவ்ஒரு கிளையும் கதை சொல்லுமோ?

  ReplyDelete
 3. எல்லோருக்கும் காதலனாக இருந்தால் நன்றாக இருக்கும்...

  ரசிக்க வைக்கும் வரிகள்... பாராட்டுக்கள்...

  ReplyDelete