அன்றொரு நாள்

Posted by G J Thamilselvi On Saturday, 23 February 2013 0 comments

நீண்ட தார் சாலையில்
படுத்திருந்து வானம் பார்த்தோம்
வாகனம் வருமென்ற பயத்திற்கு
மெல்ல நகைத்து சிரித்தாய்
இது போக்குவரத்து சாலை அல்லவென்று


குளிர்ந்த காற்றில் ஆடிய வண்ணமலர்கள்
சொட்டிய நீரின் சப்தத்தின் இசையொலி
இரவு காவளாளியின் காலடி ஓசை
சுவர் கோழியின் சீழ்க்கை ஒலி
பசித்திருந்த நம் வயிற்றின் சமிக்கை ஒலி
எல்லாம் தான் ரசித்தோம் இருவராக

முடிந்து போன மாத இருப்பை
இன்னும் ஒரு நாள் வந்திருக்கலாம்
என்ற ஏக்கத்தோடு அசைபோட்டபடி
குளிர்ந்த நீரில் இரவு பசியாறினோம்
இதுவும் இருவராக தான்

எதிர்கால ஏக்கங்களில் கனவுகளில்
லயித்திருந்தோம்
உன் காதலி பற்றி சொன்னாய்
என் காதலை பற்றி சொன்னபோதோ
நகைத்தாய் அத்தனையும் பொய் என்று

பொய்யல்ல கற்பனை என்றேன்
ஒரு வடிவும் வரும் என்றேன்
மூன்று மணி நேரச் சினிமாவிற்குள்
ஒடுங்கி போகாது வாழ்க்கை என்றாய்

உன்னோடு கழித்த நொடி ஏதும்
உரு குலையவில்லை நினைவடுக்குளில்
பசுமை கோர்த்து சிரிக்கிறது
உயிர்தன்மையின் சிநேகத்தில்

ஒட்டாத உடல்களுக்குள்
தினம் ஒட்டி மீளும் மன சைகைகளை
அசைபோடுகிறேன்
இது என்ன..............?

0 comments:

Post a Comment