காதல் தேவதை

Posted by G J Thamilselvi On Tuesday, 19 February 2013 2 comments

விடியலுடன் விசை படுகிறாள்
அம்பின் முனைவோடு
காதல் தேவதைஅவளுக்கு
இது ஒன்று தான்
வேலை போலும்

என்னில் உன்னை
உற்பவித்து கொடுப்பதே
உலக நயமாக
நகைத்து நகர்கிறாள்

கூந்தல் கலைக்கின்ற
காற்றிற்கு
உன் விரல் பிம்பம்
தருகிறாள்

நடக்கின்ற பொழுதில்
பின் நின்று அணைப்பதாக
நினைவொன்று தந்து
துடிப்பு அதை
ரசிக்கிறாள்

ஆவாரம் மலர்களின்
மஞ்சளுக்குள் உனை ஒட்டி
என் நெஞ்சணைக்க
செய்கிறாள்

செம் மண்ணிறத்தில்
உன் செவ்விதழ்
உணரச் செய்து
மண் திங்க வைக்கிறாள்

கூழாங் கல் பொறுக்கி
பாவாடையில் நிரப்பி
உனக்கென்று தர
உன் பார்வை போன
தடம் கண்டு
வெட்க சுமை தருகிறாள்

உடல் ஒன்றுதலில்
மனம் செயலிழக்க
ஓருயிர் ஆகு என்று
மந்திரம் படிக்கிறாள்

செவிக்கு அருகில் நின்று
காதல் கற்று தந்து
படைக்கிறாள் புதுகவிதை
அவள் ஒரு காதல் தேவதை

2 comments:

 1. ///காதல் கற்று தந்து
  படைக்கிறாள் புதுகவிதை
  அவள் ஒரு காதல் தேவதை///

  அழகிய கவிதை படைத்த அந்த தேவதை நீங்கள் தானோ?

  ReplyDelete
 2. தேவதையின் குதூகலம் அருமை!

  ReplyDelete