தினம் என் பயணம் - 2

Posted by G J Thamilselvi On Friday, 22 February 2013 12 comments
இன்று நான் ஒரு புதிய ஆங்கில வார்த்தையை கற்றுக்கொண்டேன்.fantasy – கற்பனை  என்பது தான் அது. இந்த வார்த்தையை கூகுள் தான் எனக்கு கற்றுகொடுத்தது. ஆனால் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் எண்ணம் என்னுள் எழுந்ததினால் மட்டுமே இது நிகழ்ந்தது.

அனுதினமும் புதிய விடயங்களை கற்றுக்கொண்டால் புத்துணர்ச்சியோடு இருப்போம் என்று என் நண்பர் சொல்வார். இதை நான் உணர்ந்ததும் உண்டு நாம் கற்றுக்கொள்ள தலைப்படும் போது நம் கவலைகளுக்காக கவலைப்பட நேரம் இருக்காது. மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள இதுவும் ஒரு வழி என்று தோன்றியது எனக்கு.

அலுவலகத்தில் அமர்ந்து வந்து நிற்கும் ஒவ்வொரு பொதுமக்களுக்கும் பதில் சொல்லும்போது தோன்றியது ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு புத்தகம் என்று. சக மனிதர்களை கவனித்தலிலும் கற்றுக்கொள்ள முடியும் என்று தோன்றும் எனக்கு.

என் மகள் என்னிடம் ஒரு முறை சொன்னாள், உனக்கு பிடித்த பாடலை முணு முணுத்துக்கொள் கவலை நிச்சயமாக உன்னை அண்டவே அண்டாது என்று அதுவும் கூட நல்ல விடயமாக இருக்கிறதே என்று எண்ணினேன். பிறகு அலுவலக பயணத்தின் போது சிறுவர்களை சாலையில் காணும் படி நேரிட்டது. அவர்கள் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி ஒரு கால் மாற்றி மாற்றி துள்ளலோடு நடந்து சென்றார்கள். இந்த செயல் குழந்தைத்தனமானது சிரித்துக்கொண்டேன். குழந்தைகளை காணும்போதே மனம் இலகு தன்மை அடைவது ஆச்சர்யம் தான்.

பயணிக்கும் போது சில ஆச்சர்யங்கள் தோணுவது உண்டு, அவ்வாறான ஆச்சர்கயங்களில் ஒருவன் தான் டீக்கடை பாலு...வெகுநாட்களாக அவன் பெயரே தெரியாது எனக்கு. என் மூன்று சக்கர வாகனத்தின் வேகம் குறையபோகிறது. என்கைகள் சோர்கிறது என்று எப்படி தெரியுமோ அவனுக்கு, கேன் ஐ ஹெல்ப் யூ என்றபடி பதிலை எதிர்பார்க்காமல் தள்ளி வருவான். உங்க ஓனர் திட்டபோறார் நீ போடா என்று சொன்னாலும் சிரிப்பு மட்டும் தான் பதிலாக இருக்கும் அவனிடத்தில். அந்த சிரிப்பு என் இதழ்களிலும் நிரந்தரமாக வேண்டும் என்று நான் ஆசிப்பேன் அவனை காணும் போதெல்லாம் உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்வதை உணர்ந்திருக்கிறேன். ஒரு போட்டோ எடுத்துக்குறேன் டா என்றால் மட்டும் முகம் மறைத்து ஓடிவிடுவான்.

குழந்தை பருவம் எப்போதும் மகிழ்ச்சியை அள்ளித்தெளிக்கும் போலும்... என் குழந்தை பருவத்தில் மகிழ்ச்சி என்பது வறண்ட பாலைவனம்.

பேண்டசி என்ற வார்த்தைக்கு கூகுளில் படங்களை தேடினேன். சில இதமாக வருடியது. பல பயமுறுத்தியது. வருடிய புகைப்படங்களில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.


மாலை மயங்கும் நேரம், அலுவலகத்தை விட்டு வெளி வந்த போது பட்சிகளின் கீச் கீச் கீச் கீச் கீச் தான் என்னை வரவேற்றது. என் மனநிலையை பொறுத்து அந்த ஓசை உற்சாக கூச்சலாகவும், ஒப்பாரியின் சோகமாகவும் இசைக்கும்.

சில பைக்குகளை கடந்து, ஒரு மிதி வண்டியில் லேசாய் உரச போய் நின்று நிதானித்து, மிதி வண்டிக்காரரை நகர வேண்டி, அலுவலக முகப்பு வாசல் கடந்து , சாலையின் மறுப்புறம் கடக்க வேண்டி காத்திருப்பு தருணத்தில் என் கைபேசி அழும். அதை சமாதானப்படுத்தும் மனநிலை எனக்கு இருப்பதில்லை. என் கவனம் சாலையில் தான் இருக்கும். சற்று நான் தாமதித்தாலோ...காக எச்சம் என் தலைமேலோ அல்லது தோளிலோ பொத்தென்று விழுந்து வெள்ளையாய் வழியும்.

சமயத்தை பொறுத்து சில பேருந்துக்களோ அல்லது கார்களோ கடந்து செல்ல காத்திருந்தால் நிச்சயம் காக எச்ச அபிஷேகம் தான் அன்று. சற்று அசட்டு தைரியத்தில் குறுக்காக புகுந்து கடந்தால் இருப் பக்க வாகனங்களும் ஸ்தம்பிக்கும். சில நேரங்களில் இரட்சத கண்டெனர்களையோ, சுமை ஏற்றப்பட்ட லாரிகளை சந்திக்க நேரிடும். அருகாமையில் அவை வீறிடும் போது மனம் திடும் என்று அதிர்ந்து பிறகு அசுவாசப்படும். இத்தனையிலும் நான் மதியம் உணவருந்த தவறினால் உடலின் சோர்வு உள்ளத்தை ஊடுருவி இறுக்கமாக உட்கார்ந்து கொல்லும்.

முக்கூட்டு ரோட்டில் வீட்டுச்சாலையின் திசை திரும்பும்போதே...அத்தை என்று கத்திக்கொண்டு வருவாள் குட்டி தேவதை திவ்யா. கொஞ்சம் கொஞ்சி சில முத்தங்கள் வழங்கிய பின் கேட்க படும் முதல் கேள்வி க்ரீம் பிஸ்கேட்டு அத்த என்பது தான். பொறுப்பாக வாங்கி சென்றுவிட்டேன் என்றால் தப்பித்தேன். கவனக்குறைவாகச் சென்றிருந்தேன் என்றால் அவள் அழுகை ரசிக்கும் படியாக இருக்காது. அவளுக்கு மட்டுமே வாங்கி சென்றுவிட்டு மேலும் இருக்கும் இரண்டு வாண்டுகளிடம் மாட்டினேன் என்றால் செத்தேன் என்று வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் இந்த அவஸ்தைகளுக்கு பயந்தே நான் அவர்களுக்கானதை வாங்கிச் செல்ல மறப்பதில்லை. இவர்களோடு போட்டி போடும் என் மகளை பார்க்கும் போது இந்த பருவம் இப்படியே நின்று விடாதா என்று தோன்றும். இளமை கடந்து முதுமை வரும், உடன் தனிமையும் இயலாமையும் ஒட்டிக்கொள்ளும் என்று எண்ணும் போது வரும் கசப்புணர்வை கலைந்து முதுமையை எப்படி எதிர்கொள்வது, என் வசதிக்கேற்றார் போல் வீடு, உதவிக்கு ஆட்கள், விரிந்து வருடும் எழுத்து என்று கற்பனை நீண்டு விடும்.

இளமையில் துணிச்சலில் தனித்து இருப்பது சாத்தியப்படும் தான். முதுமையில் தான் துணை அத்தியாவசியமாகிறது. காமம் கரைந்து போய் தூய அன்பிற்காக ஏங்கும் மீண்டும் வரும் மழலைப்பருவம் முதுமை.

சில மாதங்களுக்கு முன்பாக ஒரு நண்பரோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு. அவர் தன்னை மனநல மருத்துவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அவரின் எழுத்துக்கள் என்னை கவர்ந்திருந்தது. அவரோடு பேசியதில் சில விடயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது.

அவர் என்னிடத்தில் கேட்ட சில கேள்விகளுக்கு, நான் பதில் தர விரும்பவில்லை. அதில் ஒன்று உங்கள் காமத்தை எப்படி தீர்த்துக்கொள்கிறீர்கள் என்பது தான். நான் சொன்னேன் இந்த விடயத்தை உங்களிடம் பகிரவேண்டிய அவசியமில்லை. ஒரு நண்பனிடம் பகிரக்கூடிய விடயம் இதுவுமில்லை என்று.

அதன் பிறகு அவர் அவருடைய தளமும் என்னுடைய தளமும் வெவ்வேறானது என்றும், எங்கள் இருவரால் நட்பாக இருக்க முடியாது என்றும் கூறி விலகிவிட்டார்.

இது போன்ற சில நிகழ்ச்சிகள் என்னை பண்படுத்தியது. நான் ஒரு பெண், பெண்ணுக்குரிய இயல்பு குணங்களை மறந்து சந்தித்த முதல் நாளில் அந்த கேள்வியை கேட்க துணிந்தார் என்று எனக்கு தெரியவில்லை. அதை நான் ஏன் அவரிடம் பகிர வேண்டும். காமம் என்பது ஆதீத விருப்பம். அதை ஏன் உடலுறவோடு தொடர்புப்படுத்துகிறார்கள் எனக்கு தெரியவில்லை.

பெண்ணை அனுபவிக்கும் போகப் பொருளாகவே பார்ப்பதை விடுத்து, ஏன் சக உயிரினமாக பார்க்க தவறுகிறார்கள் என்று தான் தெரியவில்லை.

என் உடலுறவு ஆசைகள் என் கணவரோடு மட்டுமே பகிர்ந்துக்கொள்ள வேண்டியவைகள். அப்படி ஒரு உறவு இல்லாத பட்சத்தில் அதை வேறு ஒரு ஆணிடம் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை. உடலுறவு எனக்கு முக்கியமான, அத்தியாவசிய தேவையாக தோன்றியதில்லை. இயற்கை ஒரு உயிரை படைக்க எல்லா உயிரினங்களிலும் அந்த உந்துதலை ஏற்படுத்திவிடுகிறது.
அது இயற்கை. அதிலும் நியதி உண்டல்லாவா...?

அலுவலகத்தி்ல் சக பெண்களிடமே இந்த கேள்வி என்னிடம் கேட்கப்படுகிறது. உன்னால் எப்படி இருக்க முடிகிறது. அல்லது உனக்கு கஷ்டமாக இருக்குமே என்ன செய்வாய்...? பாவம் நீ என்று விதத்தில் ஒன்றாக...இன்னும் சற்று அதிகமாக போய் நீ மரக்கட்டையா....என்ற வினவல் உயிரோட்டத்தின் அடி ஆழத்தை அதட்டி பார்க்கும்.


நான் மரக்கட்டை அல்ல, உயிரோட்டம் நிறைந்தவள் என்பது சில வேளைகளில் எனக்கு புரியவே செய்தது. பெண்ணாக ஒரு ஆண் துணை தேவைப்பட்ட எனக்கு ஒரு தாயாக ஆணை தள்ளி நிறுத்தவே தோன்றியது. அந்தரங்க நெருக்கமாக எந்த ஆணையும் ஏற்றல் என்பது என் மன நிலையின் ஆழத்திற்கு ஒவ்வாத காரியம் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன் என்பது தான் உண்மை.

அடுத்து அவர் என்னிடம் கேட்ட கேள்வி சுய இன்பம் பற்றியதானது. சுய இன்பத்தை பற்றியதான அறிவு எனக்கு இருக்கவில்லை. அவர் அவ்வண்ணம் கேட்ட பிறகு நெட்டில் தேடி தெரிந்துக்கொண்டேன். இதுவும் ஒன்றுமில்லை என்று தான் எனக்கு தோன்றியது. அப்படியான தீர்த்துக்கொள்ள வேண்டிய எந்த உந்துதலும் எனக்கு ஏற்பட்டதில்லை.

அதிக வேலை பளுவும் ஓயாத செயல்பாடுகளும் உடலுறவு எண்ணங்களை முடக்கி போட்டது என்பது தான் உண்மை. சிந்திக்கவும் செயல்படவும் அதிக காரியங்கள் உண்டு என்னிடத்தில்.

சமீபத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்றில் கலந்துக்கொள்ள நேரிட்டது. எல்லா குடும்ப சச்சரவுகளுக்கும் உடலுறவுதான் மையக்காரணம் என்று கூறினார் சகோ. செல்வராஜ் அவர்கள். கணவன் மனைவியை ஒரு தனியறையில் பூட்டி வைத்தால் சில மணிநேரங்களில் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று. ஆனால் அதுவும் கூட சச்சரவுகள் தீர காரணமாக இருக்க முடியாது என்று தோன்றியது எனக்கு.

பேஸ்புக்கிலும் கூட, செல்லம், அம்மு, என்று கொஞ்சி கொஞ்சி சில செய்திகள் வருவதுண்டு. மிகவும் குழந்தை தனமாக, ஒரு தம்பி இப்படி குறுஞ்செய்தி அனுப்புகிறார். “ஏய் எருமை எனக்கு மெசெஜ் பண்ணாம அங்க என்ன பண்ற“ திட்டவோ அல்லது பதில் தரவோ எனக்கு நேரமில்லை. அவர்களாகவே புரிந்துக்கொள்வார்கள் அனுபவத்தின் பாதையில். எது தவறு, எது சரி என்று தீர்ப்பிடலுக்கு முன்பாக நடுநிலை வகிப்போம் என்றால்...........................................................வார்த்தைகள் மௌனித்து நிசப்தமே பதிலாகிறது.

மீண்டும் வருவேன்.

12 comments:

 1. //காமம் கரைந்து போய் தூய அன்பிற்காக ஏங்கும் மீண்டும் வரும் மழலைப்பருவம் முதுமை.//

  அருமை சகோ

  ReplyDelete
 2. ஒரு ஆங்கிலச்சொல்லைப்பற்றி தெரிந்த்தை எழுதியிருப்பீர்கள் என்று நுழைந்தால் அச்சொல்லையே மறந்து எதையெதையெல்லாமோ எழுதியிருக்கிறீர்களே!

  சொற்களுக்குப் பொருள்களை கூகுலில் பார்த்தால் தவறாகத்தான் புரிவீர்கள்.

  ஃபென்டாசி என்றால்,

  நாம் விரும்புவது நம் வாழ்க்கையில் நடக்காததாக இருக்கலாம், அல்லது அவை தற்சமயம் நடக்க முடியாதவையாக இருக்கலாம், அதைப்பற்றி நாம் செய்யும் கற்பனகளே ஃபெண்டாசிகள் எனப்படும்.

  எடுத்துக்காட்டாக, ஒரு மணவயதுக்கு வரும் பெண்ணுக்கு வீட்டில் மாப்பிள்ளை தேட ஆரம்பிக்கிறார்கள். அம்மாப்பிள்ளை இப்படி யிருப்பான் என அவள் கனவு கண்டு மகிழ்வது ஃபெண்டாசியாகும் இங்கே இக்கனவு ஒருவேளை பலிக்கலாம். இல்லாமலும் போகலாம்.

  ஒரு அலுவலகத்தில் வேலைசெய்யும் சக ஆண்களைப்பற்றி பெண்களும் அல்லது பெண்களைப்பற்றி ஆண்களும், அல்லது சினிமா நடிகர்களை, நடிகைகளைப்பற்றி கானும் உடலுறுவுக்கனவுகள் நடக்கவியலா. எனவே அவை நடக்கவியலா ஃபெண்டாசிகள். இவை செக்சுவல் பெண்டாசிகள் என உளவியலார் வகைப்படுத்துவர்.

  ஆங்கிலம் கற்றல் என்பது நூலைப்புரட்டியோ, அல்லது கூகுலைப்பார்த்தோ நடக்காது. ஆங்கிலம் கற்றல் என்பது புரிதல் ஆகும். அதற்கு கொஞ்சம் மெனக்கிடவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான், அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை உங்கள் மூலமாகவும் கற்றுக்கொண்டேன் அல்லவா....எதுவாக இருந்தாலும் என் பதிவு தான் உங்களையும் இங்கு கொண்டு வந்து சேர்த்தது. ஒரு வார்த்தைக்கு தெளிவான விளக்கத்தை கொடுத்த தங்களுக்கு என் நன்றிகள். என் மனதிற்கு தோன்றியதை எழுதியிருக்கிறேன்

   Delete
  2. Anonymous - பெயரில்லாத - உங்கள் கருத்துரையின் மூலமாகவும் ஒரு புதிய வார்த்தை கற்றுக்கொண்டேன் நன்றி.

   Delete
 3. முதுமையில் தான் துணை அத்தியாவசியமாகிறது. காமம் கரைந்து போய் தூய அன்பிற்காக ஏங்கும் மீண்டும் வரும் மழலைப்பருவம் முதுமை.
  ஆஹா அற்புதமான உண்மை வயது ஏறஏற இதைதான் என்ன தோன்றும் உண்மையான ஆதங்கம்

  ReplyDelete
 4. நியாமான கோபங்கள் உங்களுடையது. நான் எனக்கு அவ்வப்போது சொல்லிக் கொள்வதை உங்களுக்கும் சொல்கிறேன்.. "சொசைட்டி அப்படிங்கறது அடுத்தவனை எப்படி காயப் படுத்தலாம்னு யோசிக்கரதுல தான் குறியா இருக்கும். உதவி செய்ய வராட்டியும் ஏதாவது விதத்தில் உபத்திரவம் செய்ய மட்டுமே இருக்கும்.. தங்களுக்கு தேவையில்லாத அடுத்தவருடைய அந்தரங்கங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடனேயே இருப்பவர்களை உதாசீனப்படுத்துவதில் தவறொன்றுமில்லை.."

  அப்படி எல்லோரும் நம்மிடத்தில் விகல்ப்பமில்லாமல் பழகவேண்டும் என நினைத்தால் அது Fantasy உலகத்தில் தான் சாத்தியம்.

  ReplyDelete
 5. காதல் வேண்டாம் என்கிற போது காதல் கவிதைகள் எழுத இயலுமா.. என்ன? போலியாக வாழாதீர்கள். உங்க மனசுக்கு உண்மையா இருங்க. இப்போ இருக்கும் நிலையை விட எதிர்காலம் (முதுமை) முக்கியம்..

  ReplyDelete
  Replies
  1. கற்பனையில் காதல் இருக்கலாம், எதார்த்த்தம் வேறாகவும் இருக்கலாம். இந்த கட்டுரையை சரியாக படியுங்கள் காதல் வேண்டுமா வேண்டாமா என்பதை பற்றியதல்ல இது. என் தந்தை இறந்துவிட்டார் என் தாய் தனிமையில் தான் இருக்கிறாள். முதுமையில் இருக்கும் எல்லா பெண்களும் தன் துணையின் அரவணைப்பிலேயே வாழ்வார்கள் என்று சொல்வதற்கில்லை. கற்பனை சிறகை விரிக்க இயலுமானால் எதார்த்தத்தில் காதல் வேண்டாம் என்பர்களாலும் காதல் கவிதைகள் எழுத இயலும். அது கற்பனை அது நிகழ்ந்திருக்க வேண்டும் என்றோ அல்லது நிகழ்ந்தே தீரவேண்டும் என்றோ எந்த அவசியமும் இல்லை.

   Delete
 6. //என் மனநிலையை பொறுத்து அந்த ஓசை உற்சாக கூச்சலாகவும், ஒப்பாரியின் சோகமாகவும் இசைக்கும்.//

  இது எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன் தமிழ்ச் செல்வி.

  //இளமையில் துணிச்சலில் தனித்து இருப்பது சாத்தியப்படும் தான். முதுமையில் தான் துணை அத்தியாவசியமாகிறது. காமம் கரைந்து போய் தூய அன்பிற்காக ஏங்கும் மீண்டும் வரும் மழலைப்பருவம் முதுமை.//

  அருமையான கருத்து அம்மா. உங்கள் மன முதிர்ச்சி வியக்க வைக்கிறது. மனம் மிகவும் பண்பட்டிருக்கிறது. உங்களைப் பார்த்து நான் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.


  //அந்தரங்க நெருக்கமாக எந்த ஆணையும் ஏற்றல் என்பது என் மன நிலையின் ஆழத்திற்கு ஒவ்வாத காரியம் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன் என்பது தான் உண்மை.//


  வெளிப்படையாய்ச் சொல்லி இருக்கிறீர்கள். உண்மைதான். உங்கள் மனதில் நன்கு அலசி ஆராய்ந்து பார்த்தே முடிவெடுக்கிறீர்கள்.


  //அதிக வேலை பளுவும் ஓயாத செயல்பாடுகளும் உடலுறவு எண்ணங்களை முடக்கி போட்டது என்பது தான் உண்மை. சிந்திக்கவும் செயல்படவும் அதிக காரியங்கள் உண்டு என்னிடத்தில்.//

  இது தான் யதார்த்தம், நிகழ்வு. நாளைய பொழுது பற்றிய ஓயாத கவலையும், மற்ற எண்ணங்களும், இருக்கையில் மனம் உடல் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து போக முடியாது. உங்கள் மனநிலையைப் பட்டவர்த்தனமாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.

  பால முரளி காதல் என்பதன் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே இருப்பது தான் காதலா? அதன் மூலம் ஏற்படக் கூடிய உடல் உறவு தான் காதலா? எனில் காதல் பற்றிய அவரின் புரிதலே சரியில்லை.

  ஈசனிடம் கூட நம் ஆன்றோர் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி இருக்கிறார்கள். ஆகவே காதல் என்பது கடைச்சரக்காக மாறியது சமீப காலங்களில் தான்.

  ReplyDelete