தேடல் தொடரும்

Posted by G J Thamilselvi On Thursday, 3 January 2013 8 comments

இந்த படம் விசேடமானது. ஏன் என்று நீங்கள் புருவத்தை உயர்த்துவது தெரிகிறது. கூகுளில் கவிதைக்கேற்ற படங்களை தேடியபோது, இந்த குழந்தை என் கவனத்தை கவர்ந்தாள். அட எதையோ கண்டு பிடித்துவிட்டாளே, அவள் அதை தேடினாளா...? இல்லை அதை பற்றி ஏதேனும் ஆராய்ச்சி எண்ணங்கள் ஓடுகிறாதா...? அவள் மனதில். படர்ந்திருக்கும் தனிமையில் பயம் தோன்றவில்லையா அவளுக்கு. பட்டென்று தலையில் அடித்துக்கொண்டேன். புகைப்படம் எடுத்தவர்கள் உடன் இருந்திருக்கதானே வேண்டும்.

சின்னஞ்சிறு குமிழே...!
என் கண்ணின் மணி அவளே...!
செல்லச்சிரிப்பினில்,
கள்ளமின்றியே,
கையில் தவழ்பவளே...!
வீசிடும் காற்றும்,
குளிர் தரும் உணர்வும்,
உன் தீண்டல் தருகிறதே...!
கேட்டிடும் இசையில்,
லயித்திடும் மனம் போல்,
உன் மொழியினில்,
மறக்கிறதே...!
என் மனம் கவலைகள்,
துறக்கிறதே...!
கண்கள் இரண்டும் என்னை,
கைதியாய் வைத்ததென்ன...?
சுட்டும் அந்த நாசி,
என் சுவாசத்தை,
கவர்ந்ததென்ன...?
குவிந்திடும் இதழ்களில்,
பிறந்திடும் புன்னகை,
விதிகளை தகர்ப்பதென்ன...?
கைகள் தீண்டி,
அணைத்திடும் போதிலே,
அன்பினை உணர்வதென்ன...?
மெல்ல கூந்தல் கோதிட,
உன் மடி குழந்தையும்,
நான் ஆனேன்.
என்ன உறவிதுவோ...?
என் மகளே...நட்பின் சிலிர்பலையே...!
வெண்ணிற தாமரையாய்,
என் முன்னே,
வந்திட்ட தமிழ் அமுதே...!
கொஞ்சும் மொழியினிலே,
தீமைகள் களைபவளே...!
சிந்தை முழுவதும்,
அன்பலை பரப்பி,
தூய்மை செய்பவளே...!
தீயின் நிறச்சுடரே...!
என் உயிரே...!
சின்னஞ்சிறு உறவே...!
என் உயிரின் கருபொருளே...!
படைப்பின் திறனுக்குள்,
பதுமையாய் வந்து,
உயிர்ப்புக்குள்,
உருவெடுத்தாய்.
நடையில் துணிவினை கொண்டு,
தீமைகள் தனை எதிர்த்தாய்.
உற்ற பொழுதினில்,
சிற்றெறும்பை போல்,
செய்கை கொண்டவளே...!
நிகழ்வினில் என் மன,
காதலை என்றும்,
குத்தகை கொள்பளே...!
என் அரும்பே...!

இந்த கவிதையை எழுதிட்டு, இது ஒரு தலைப்பும் என் அன்பின் அரும்பானவளேன்னு வச்சிட்டு...படத்தை தேடும் போதுதான் அந்த குழந்தை என்னை கவர்ந்தாள்.

பிறகு அந்த குழந்தை வந்த வலைப்பக்கத்தை ஆவல் கொண்டு அங்கே சென்றேன். ஐரின் பாப்பா என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதைக்குரிய படம் அது.

தலையை
சாய்த்து சாய்த்து
கதை சொல்லுவாள்
ஐரின் பாப்பா
அவ‌ள் க‌தையில் வ‌ரும்
எல்லா வில‌ங்குக‌ளும்
பேசும் திற‌ன் கொண்ட‌வை
நரி புலியிடம் சொல்லியதாம்
புலியே புலியே என்னை
விட்டுவிடு
நான் பாவ‌ம்.
ஆமாம் நீ பாவம்
உன்னை நாளைக்கு
சாப்பிடுகிறேன் என
புலியும் போய்விட்டதாம்.
புலி எங்கே போனது
என்று ஒரு போதும் அவள்
சொல்வதில்லை
புலி மீண்டும்
எப்போதாவது வரலாம்
வராமலும் போகலாம்
அப்படியே வ‌ந்தாலும்
நாளை சாப்பிடுவ‌தாய்
சொன்ன‌ நரியை
மறந்தே போயிருக்கும் 
0OO0
லிவி என்ற பூனை
ஐரின் குட்டியின்
எல்லா க‌தைக‌ளிலும் வ‌ரும்
லிவி இல்லாம‌ல் அவ‌ளால்
க‌தைக‌ள் சொல்ல‌ முடியாது
என்னுடைய‌ எல்லா க‌தைக‌ளிலும்
லிவி பூனைக்குட்டி
க‌ண்டிப்பாக‌ இட‌ம் பெற‌ வேண்டும்
லிவி பூனைக்குட்டி அவ‌ளுக்கு
முறுக்கு வாங்கி த‌ரும்
வாக்கிங் கூட்டிச்செல்லும் என்றாள்
லிவி பூனைக்குட்டி
க‌த‌வின் பின்னாடி ஒளிந்திருப்ப‌தாக‌
சொல்லி க‌த‌வை திற‌க்க
மியாவ்” என்ற‌ ச‌த்த‌த்துட‌ன்
வெளிவ‌ந்தார்
லிவி பூனைக்குட்டியாய்
மாறிப்போன‌ அவள்
தாத்தா
(இது சென்னை சங்கமத்தில் வாசிக்கப்பட்ட கவிதை)
0OO0
குருவி என்றால் திவிலி
பொம்மை என்றால் மித்தி
முத்தம் என்றால் இத்துக்கோ
என‌ அவ‌ளில் உல‌க‌ம்
புதுவ‌கை சொற்க‌ளால்
நிர‌ம்பிய‌து
நான் யார் என்று கேட்டால்
டிட்ட‌ப்பா
என்று  சொல்லி
கண்சிமிட்டி குழையும் போது
தூக்கி முத்தமிடுவ‌த‌ற்கான‌
கார‌ண‌த்தை நான்
சொல்வதேயில்லை
0OO0
பேசும் குர‌ங்கு பொம்மையை
எப்போதும் கையில்
வைத்திருப்பாள்
ஐரின் பாப்பா.
அசிரிய‌ர் அடிக்கும் போது
அம்மா திட்டும் போது
என‌ எல்லா இர‌வுக‌ளிலும்
குர‌ங்கு பொம்மை
பேசிக்கொண்டே
இருக்கிற‌து அவ‌ளுட‌ன்
யாருக்கும் தெரியாம‌ல்.
சரி அந்த கவிதையை படித்து விட்டு அண்மைய பதிவுளின் மேல் கண்களை மேய விட, கல்லூரி கள்வன் தலைப்பு வித்தியாசப்பட, படிக்கும் ஆவலில் அப்பக்கத்திற்கு பயணமானேன்.
அந்த கவிதையில் நான் ரசித்த வரிகள்

மென் இதய‌ம் கிழித்து
குருதி புசித்து
உள்ள‌ம் தொடும்
உன் பார்வை
-000-
கரும்பலகை எழுத்துக்களை
அழிக்கும் ஒவ்வொரு முறையும்
அழித்துக்கொண்டுருந்தாய்
என் தயக்கத்தை
-000-
முத‌ன் முறையாக‌
நீ க‌ல்லூரி வ‌ராத‌
அன்று தான்
தெரிந்து கொண்டேன்
வ‌குப்ப‌றை எத்த‌னை
அந்நிய‌ம் என்று
-000-
நிராக‌ரிப்பை
நாசூக்காய் உண‌ர்த்திய‌தால்
நீ மெதுன‌ன்
-000-
மெதுனன் என்றொரு புதியவார்த்தையை கண்டுபிடித்துவிட்டதாக கருத்துரையில் மகிழ்ந்திருந்தார் அந்த நண்பர். மெதுனன் புது வார்த்தையாம் நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்.

வில‌க்கான‌ நாட்க‌ளில்
ம‌டிகிட‌த்தி
த‌லை கோகி
க‌ர‌ம் ப‌ற்றி
கால் விர‌ல்
சொடுக்கெடுக்கும் நீ
என் தாயுமான‌வ‌ன்
-000-
உள் நுழைந்து
உயிர் புசித்து
சந்தோஷப்படுத்தியே
சாகடிப்பாய்
என்று தெரிந்திருந்தால்
உன்னை
காதலித்திருக்கவே மாட்டேன்
-000-
வகுப்பறையில் நான்
இல்லாததை தேடும்
உன் கண்கள்
எனக்கு பிடித்த உறுப்பு
-000-
இய‌ல்பாக‌ பேசி விடுகிறாய்
எதோ ஒன்றை.,
நினைத்து நினைத்து
நீர்த்துப் போகிற‌து இர‌வு
-000-
ஆணாதிக்க‌ம் பிடிக்க‌த்தான்
செய்கிற‌து
அதிகார‌த்தொனியில்
முத்த‌ம் வேண்டும் என்ப‌து
-000-
கல்லூரியில்
க‌டைசி நாள் வகுப்பு
முடிந்து வெளியேரும் போது
க‌ல‌ங்கிய‌ க‌ண்க‌ளோடு
என்னையே
பார்த்துக்கொண்டிருந்தாயே
அதற்கு என்ன அர்த்தம்
-000-
என்று முடிந்திருந்தது. இடையில் சில வரிகளை விட்டுவிட்டேன், நீங்கள் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். மொத்ததில் ஒரு கல்லூரி காதல் அங்கே அரங்கேற்றப்பட்டிருந்தது. எளிமையான வார்த்தைகளில் கவிதை எழுதப்பட்டிருந்த போதும் அதீத உயிர்ப்பு அதனிடத்தில்.
நன்று என்று கிறுக்கி கடந்து போக மனதில்லை. விபரப்பட்டியலை பார்த்தேன் மின் அஞ்சல் முகவரி மட்டுமே இருந்தது. நான்கு வரியில் ஒரு கடிதத்தை அஞ்சலிட்டு கடந்து போனேன்.
அதன் பிறகென்ன புதுவருடத்தில் பிரபஞ்ச நட்பு வெளியில் ஒரு புது மலர் உதயம். புதுவருடத்தில் புதியதாய் ஒரு நண்பர். நீங்களும் படித்து பாருங்கள்

அதன் பிறகு ஒரு கட்டுரை படித்தேன் அவரின் பக்கத்தில். எட்டயபுரம் பயணக்கட்டுரை. உயிர்ப்புடன் எழுதப்பட்டிருந்தது பாரதியாரின் வீட்டை காணசென்றதை குறித்தான அந்த கட்டுரையில் செல்லம்மாவின் சிரிப்பு காணாமல் போனதை குறித்து அவரின் வருத்தம்... பெண்கள் பார் அவர் கொண்ட நேசத்தை எடுத்தியம்பியது.


எனக்கு எழுதியிருந்த மடலில் பெரியாரின் ஒரு கருத்தை குறிப்பிட்டிருந்தார். அது,
எப்போது ஒரு பெண்ணை சதை பிண்டமாக பார்க்காமல், சக உயிரினமாக பார்க்கிறாயோ அப்போது நீ மனிதனாகிறாய்

பெரியாரின் புத்தகங்களை படிக்கும்படி என் நண்பர் திரு.சுவாமிநாதன் அவர்கள் சொல்வது உண்டு. இந்த நண்பர் அவரின் கருத்தை எடுத்து இயம்ப...பெரியாரின் புத்தகத்தை படிக்கும் ஆர்வத்தை தூண்டிச்சென்றார்.
இந்த படம் விசேடமானது...ஒரு பதிவையும் தந்து புது வருடத்தில் ஒரு நட்பையும் தந்திருக்கிறது.

தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்  வேதாகமத்தில் படித்த நினைவு என் கவிதைக்கான படத்தை தேடப்போக...ஒரு நட்பின் அறிமுகம்.
தேடல் தொடரும் மீண்டும் ஒரு கட்டுரையோடு வருகிறேன் பின் ஒரு நாளில்.

8 comments:

 1. சிறந்த பதிவு..! வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 2. azhagaana pugaipadam. sirappaana pathivu. ungal thedal thodarattum. vaazththukkal.

  ReplyDelete
 3. ஒரு படத்திற்கு இத்தனை கவிதைகள்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 4. மிக்க மகிழ்ச்சி. இதுப் போன்ற ஒரு தேடலில் தான் எனக்கு நிறைய நட்பு கிடைத்திருக்கிறது. அருமை
  வாழ்த்துக்கள் நாளுக்கு நாள் உங்களின் எழுத்து வளர்ந்துக் கொண்டே செல்கிறது. தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தமிழ்ராஜா, எதையும் தேடினால் மட்டுமே கிடைக்கும். நன்றி தங்களின் பாராட்டிற்கும்.

   Delete