என்னில் என்னவனுக்கு,

Posted by G J Thamilselvi On Thursday, 30 August 2012 3 comments

என்னில் என்னவனுக்கு,

     இது என் இதயத்தின் பக்கம், படிப்பதும் கடந்து போவதும் உன் விருப்பம். என் கவிதை மலர்கள் அத்தனையும் உனக்கே அர்ப்பணம். நீ படிப்பாயா? படிப்பாய் என்றே நம்புகிறேன். உலகத்தின் ஏதோ ஒரு புள்ளியில் நின்று, இது உனக்காக எழுதப்பட்டது என்பதை அறியாமலே… அல்லது அறிந்தும் உன் இதயத்தின் ஒரு சிற்றணுவிலேனும் என் மீது எவ்வித ஈர்ப்பும் இல்லாமலே…காற்று என்னை தீண்டும் போதெல்லாம் உன் நினைவில் தவித்துப்போகிறேன். புரியவில்லையா உனக்கு மூச்சு காற்றின் தீண்டல் எப்போது நிற்பது…நான் உன் நினைவால் தவிக்கும் தவிப்பு மறைவது. ஒரு வேளை அது அடுத்ததொரு பிறவிக்கும் நீண்டுவிடும் என்று சாராசரி பெண்ணாய் காதல் வசனங்களை உன் நிழற்படத்தை பார்த்த படி நீண்டதொரு வெள்ளை காகிதத்தில் எழுதி அதற்கு பல முத்தங்களை தந்து…நுனி நாக்கின் எச்சிலால் ஒட்டி, நெஞ்சோடு அணைத்து, பிறகு தபால் பெட்டிக்குள் போட்டு விட்டு, என்ன பதில் வரப்போகிறதோவென்று தவித்து நிற்க ஆசைதான்.

உன் கவிதைகளில் ஏன் அத்தனை உயிர்த்தன்மையை ஊற்றி வைத்தாய், அங்கே தான் என் காதல் அரும்ப துவங்கியது. வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உன் கரம் பற்றி கடந்து விடலாம் என்று தோன்றியது. என் நண்பனும் என் காதலனும் என் கணவனும் நீயாகவே இருந்துவிட்டால் எத்தனை இதமாய் இருக்கும். என் முதல் காதலன் நீயாகவும் உன் இறுதி காதலி நானாகவே இருக்க யாசிக்கிறேன்.

உனக்கு ஒரு விடயம் தெரியுமா…உன்னை ஈர்க்கும் அந்த காந்தத்தின் உயிர்ப்பு என்னிடத்தில் இல்லையோ  என்றொரு எண்ணம் என்னுள் எழுந்து விட்டதற்காகவே, என் இதயம் வெடித்து அழத்துவங்கியது. அந்த எண்ணத்தை நான் அகற்ற பட்ட பாடு வானம் அழுது தீர்த்தது.


தான் விரும்பும் ஆணை ஈர்க்க முடியாத பெண்மை வாழ்வதில் தான் என்ன அர்த்தம் வந்து விடப்போகிறது. தனித்தே வாழ்வதற்கு இயற்கை ஆணை மட்டுமோ, அல்லது பெண்ணை மட்டுமோ படைத்திருக்கலாம். ஆணும் பெண்ணுமாய் வகைப்படுத்தி வைத்திருக்க வேண்டியதில்லை.

கரை புரண்டோடும் என் எண்ணங்களுக்குள் வார்த்தைகள் வற்றிவிட்டது. ஒவ்வொன்றாய் தேடி கோர்க்க வேண்டியிருக்கிறது வாக்கியங்களை, ஸ்தம்பித்துவிட்ட நினைவுகளை உனக்கொரு கடிதம் எழுதியாவது உயிரூட்டலாம் என்று தான் இந்த கடிதம்.

என்றென்றும் உன்னவள்.

3 comments:

 1. உயிரோட்டமுள்ள படைப்பு
  மனம் தொட்டது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. //தான் விரும்பும் ஆணை ஈர்க்க முடியாத பெண்மை வாழ்வதில் தான் என்ன அர்த்தம் வந்து விடப்போகிறது//
  இவை வாழ்வில் பலருக்குத் தோன்றும் இயல்பான வரிகள் ...

  எனினும், மிகப் பலருக்கும் தோன்றது போவது இந்தவரிகள்:-
  " நீ விரும்புகின்றவனை விட உன்னை விரும்புகின்றவனை நேசி "

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete