யுத்தம் செய்ய வாரீர்

Posted by G J Thamilselvi On Friday, 24 August 2012 7 comments

இது உனக்காக எழுதப்படுவது தான். சற்று நிறுத்தி அதிகமாய் சிந்தித்து, பிறகு தான் முடிவெடுத்தேன்...உனக்கு கடிதம் எழுதலாம் என்று. கடிதம் எழுதி வெகுநாட்களாயிற்று. என் விரல் ஓரங்களில் கசிங்கின்ற எழுது மை காயங்களை விரல்கள் துறந்து வெகு நாளாயிற்று.

கடிதம் எழுது முறை இலக்கணங்களை நான் மறந்தே போனேன்...அதனால் தான் நலம் நலமறிய ஆவல் என்று சம்பிரதாய வார்த்தைகளில் முதல் வரிக்குள் வரையாமல், கொஞ்சம் தாமதமாய் விசாரிக்கும் படி ஆயிற்று.

உன் நெற்றி மேலெழும்பி உன் விழிகளில் தொக்கி நிற்கும் வினா எனக்கு புரிகிறது. என் நலனை குறித்து தானே...? நான் நலமில்லை. என் கண்கள் பெருங்குடிக்காரர்களை காண்கிறது. மனம் சஞ்சலப்படுகிறது. மதுவின் நெடியும்...மதுவிற்கு அடிமையானதால் குளிக்காமல் சுயம் இழந்தவனின் வியர்வையுமாய்...நாசியை சுளிக்கச்செய்கிறது காற்று. இது எப்படி ஆயிற்று எனக்கு தெரியவில்லை. ஒருவனை சந்தித்து ஏன் குடிக்கிறாய் என்றேன். கண்கள் சிவக்க அழுதான். இல்லை இல்லை அழுதான், மதுவினால் கண்கள் சிவந்து கிடந்தது. என் மகள் வேண்டும் என்றான். என் மனைவி வேண்டும் என்றான். என்ன செய்வேன்... அவன் குடி அவனை அவர்களிடத்திலிருந்து பிரித்துவிட்டது. அவன் அழுதான்...இந்த கடிதம் உனக்கு எழுதும் போது கூட அழுதுகொண்டு தான் இருக்கிறான். குடிப்பதை விட்டு விடு என்றேன். அய்யோ அவன் முகம் விகாரப்படுகிறது, அது என்னை பயமுறுத்துகிறது, அவன் ஏதோ ஒரு மாய பெண்ணின் பிடியில் சிக்கிக்கொண்டான் போலும்...வெறித்த பார்வை சிவப்பேறி திடுக்கிட வைக்கிறது என்னை. அழுது என்ன செய்ய மதுவை பருக மட்டும் மறக்கவில்லை அவன். அவன் உறவினர்களிடம் பேசினேன். மருத்துவம் பார்க்கலாம் என்று, சாகட்டும் செத்து தொலையட்டும் என்று சாடுகிறார்கள். புண் வேராய் புரையோடி நாற்றமெடுத்துவிட்டது. கொஞ்சம் மருந்து போடுவோம் என்கிறேன். இவன் இல்லாவிட்டால் உலகம் இருளபோவதில்லை என்று முகம் திருப்பிக்கொள்கிறார்கள். அவனை கண்டதும் தலைதெரிக்க பறந்து போகிறார்கள். பதுங்கிகொள்கிறார்கள். பயம் அவனை கண்டதும் வெருண்டோட செய்கிறது.

குடி ஒரு நோய், மருத்துவம் பார்க்கலாம் வா என்று அழைக்கிறேன். என்னிடம் விரோதம் பாராட்டுகிறான். அவன் வாய் எச்சிலால் என் முகம் அலங்கரிக்கப்பட்டது தான் மிச்சம். குன்றி போனேன் நான். எச்சில் பட்ட முகம் அருவருப்பை அள்ளி தந்தது மனதிற்கு. உறக்கம் தொலைந்து போய் நாட்கள் பல வாயிற்று.

பிரிதொருவனை சந்தித்தேன்...அரிசி வாங்க வைத்திருந்த பணமெல்லாம் டாஸ்மாக் கடைக்கே அர்ப்பணம். மனைவி சாலையில் வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதது, என் விழிகளை பிடுங்கி கசக்கியதற்கு ஒப்பதாய் வலித்தது. அவன் பிள்ளைகள் மூன்று உடையற்று கறுப்பு எலும்பு கூடாய் வயிரொட்டி நின்றது புழுதி மண்ணின் பூச்சோடு. அவள் அழுகிறாள், அவளின் தலைமயிற் கற்றைகளை பிடித்து சாலையில் அந்த கருப்பு பாதை தீற்றில் அழுத்தமாய் முட்டி மோதுகிறான். எண்ணை காணாத அந்த தலையின் நெற்றியில் இரத்த பொட்டு தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் நம் மக்கள், யாருக்கும் அவனை தடுக்க துணிவில்லை.

இப்படி வித விதமான விவரணையோடு நீள்கிறது குடிநோயாளிகளின் எண்ணிக்கை. நாட்டு மக்களை நோயாளியாக்கி விட்டு உல்லாச உற்சவம் நடத்துகிறது அரசாங்கம். டாஸ்மாக் கடைகளின் வருமானத்தில் தான் அரசாங்க ஊர்திகள் வரிசையில் பறக்கிறது.

மாபெரும் யுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம். புலியை முறத்தால் அடித்து துரத்திய தமிழ் மறத்திகளின் வீரத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்ட வேண்டிய கட்டாயத்தி்ற்கு வந்துவிட்டோம். நோயுற்ற சமுதாயம் நல்ல சமுதாயமாக இருக்கக்கூடுமோ... மனபலம் அற்ற சிந்தனை திறனற்ற ஆண்மை ஆளும் தன்மையை கொண்டிருக்குமோ...ஒன்று அன்பு வைத்தியம் செய்ய வேண்டும். அல்லது ஆற்றலோடு எதிர்த்து அடித்து வைத்தியம் செய்ய வேண்டும்.

ஒருத்தியின் சப்தம் எடுபடுமா? ஓராயிரம் கரங்கள் பல நூறாயிரங்களாய் பெருகினால். திரண்டு சென்று ஒவ்வொரு ஊரிலும் உள்ள டாஸ்மாக் கடைகளை நொறுக்கிவிடலாம். அது சரி கடைகள் மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெறுகிவிடுமே என அஞ்சாதே அங்கும் அதிர்ச்சி வைத்தியம் தான்....இது ஒரு காரணத்திற்காகவல்ல பல காரணங்களுக்காக இனி தினம் தினம் யுத்தகளம் செல்ல வேண்டியது தான்

இதோ நான் புறப்பட்டுவிட்டேன் யுத்தம் செய்ய யுத்த களத்திற்கு...என்ன வியப்பு கூடுகிறதா? இளந்தளிர்களை காணச்செல்கிறேன்...அங்கே தான் வீர மறவர்களை வார்த்தெடுக்க என்னாலான முயற்சியை துவங்கிவிட்டேன். சிற்பியாய் நின்று எண்ண உளிகளால் பக்குவமாய் வார்த்தெடுக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த போரில் நாம் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று.

விடைபெறுகிறேன்...

பிரிதொரு கடிதத்தில் அறைகூவல் விடுக்க தொடர்ந்து வருவேன்...

7 comments:

 1. மிகச் சரியான கருத்து...உங்களால் ..பெண்களால் இது சாத்தியமாகும்..இக்கொடிய பழக்கம் இல்லாத குடும்பம் ஏற்பட உங்களால்தான் முடியும்..

  வாழ்த்துக்கள்!

  தளராது தொடருங்கள் ...என்னைப்பொன்ற பலர் உங்களோடு..!!

  ReplyDelete

 2. இதோ நான் புறப்பட்டுவிட்டேன் யுத்தம் செய்ய யுத்த களத்திற்கு...என்ன வியப்பு கூடுகிறதா? இளந்தளிர்களை காணச்செல்கிறேன்...அங்கே தான் வீர மறவர்களை வார்த்தெடுக்க என்னாலான முயற்சியை துவங்கிவிட்டேன். சிற்பியாய் நின்று எண்ண உளிகளால் பக்குவமாய் வார்த்தெடுக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த போரில் நாம் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று.//


  எங்களுக்குள்ளும் யுத்தவெறியைத் தூண்டிப்போகிறது
  மனம் தொட்ட பதிவு
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி, நீங்களும் முயற்சி செய்யுங்கள், குழந்தைகள் நம் உலகத்தின் தூண்கள்

   Delete
 3. பல காரணங்களுக்காக இனி தினம் தினம் யுத்தகளம் செல்ல வேண்டியது தான்..... மனதின் ஆவேசம் உணர்வு பூர்வமாய் எழுத வைத்திருக்கின்றது. போராட்டங்கள் ஓய்வதில்லை! தொடருங்கள்....
  பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
 4. வணக்கம் சகோதரி, இந்த பதிவை படித்தபோது எனக்கு கோபம் வந்தது. குடிகாரர்கள் மீது மட்டும் அல்ல, அரசாங்கத்தின் மீதும்தான். இந்த குடிபழக்கத்தினால் எத்தனையோ குடும்பங்கள் வாழ்வை தொலைத்திருக்கின்றன. எத்தனை உயிர்கள் பறிபோயிருகின்றன. டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தை பற்றி மட்டுமே சிந்திக்கும் இந்த அரசாங்கம், அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களின் வாழ்வை பற்றியும் சிந்திக்க வேண்டும். இதோ நானும் வருகிறேன் உங்களோடு கை கோர்த்து போராடுவதற்கு.

  ReplyDelete