நான் இயந்திரம் அல்ல

Posted by G J Thamilselvi On Tuesday, 26 June 2012 3 comments

விடிந்ததை உணர்ந்தும்
விழிக்காத இமைகளின்
உறக்கத்தை துரத்திவிட்டு
குளித்தும் குளிக்காமல்
உடலுக்கு நீர் வார்த்து
ருசித்தும் ருசிக்காமல்
இரண்டுவாய் உண்டுவிட்டு
வியர்க்க விறுவிறுக்க
பேருந்திற்காய் நடைபயின்று
மட்டமான வாசனை பூச்சின்
சட்டமானா மணமும்
தொடர் இலவசமாய்
மல்லிகை முல்லை ரோஜாவுடன்
பஜ்ஜி வடையும் சுவாசித்து
கிழவனோ கிழவியோ
கைம்பெண்ணோ கர்ப்பினியோ பாராமல்
நெரிசலில் பயணி்த்து
எப்போதாவது...
அத்திபூத்தார்போல் பயணிக்கும்
சுமாரான பிஃகருக்கு
சூப்பராய் பார்வை தூதுவிட்டு,
பேருந்து நின்று
நான் இறங்கிய நிறுத்தத்தில்
மானசீகமாய் மனதிற்கு
காதல் தோல்வி என்று அறிவித்து
நடைபாதையில் காணும்
மாற்றுதிறனாளிக்காய்
ப்ச் சொல்லி வருத்தப்பட்டு
சட்டை பைக்குள் துழாவி எடுத்த
ஒரு ரூபாய் நாணயத்தை
நா நயத்தோடு
அவன் கை தீண்டாமல்
பிச்சையிட்டு...
அரசியல் பேசாமல்
பேசும் வாய் பார்த்து
அங்கலாய்த்து...
இயந்திரகதியில் பணியாற்றி
வெகுநேரம் கண்விழித்து
பணி முடித்தும் கூட
வக்கணையாய் ஏசும்
மேலதிகாரியின் பாராட்டிற்காய்
ஏங்கும் மனதை
அதட்டி கட்டி போட்டு
கொண்டாட்டமே இல்லாமல்
திண்டாட்டமாய் படுக்கைக்குப் போகும்
வாழ்ந்த பலன் பூஜ்ஜியமாய் நிற்கும்
நான் இயந்திரமல்ல
மனிதன் தான்.

3 comments:

 1. ஆழமான கருத்துக்களை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். ஒவ்வொரு மனிதனின் தினசரி வாழ்க்கையை படம் பிடித்து காட்டுவது போல இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. ஆழமான கருத்துக்களை மிக அழகாக, தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். ஒவ்வொரு மனிதனின் தினசரி வாழ்கையை படம் பிடித்து காட்டியது போல உள்ளது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. உங்களுக்குள் ஒருவன்?
  :)

  ReplyDelete