காதலுடன் காதல் மனம் - 1

Posted by G J Thamilselvi On Thursday, 17 May 2012 7 comments


ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாய் சேர்ந்து வாழ்வதற்கு என்ன வேண்டும்? அழகு பணம் வசதி பெரிய வீடு கார் பங்களா .......... இப்படி தொடரும் எத்தனையோக்களா? நான் சொல்ல மறந்ததையெல்லாம், உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த பொருட்களையும் சேர்த்து நீங்கள் சொல்லி, இந்த கட்டுரையை படிக்கும் போது நீங்கள் சேர்த்து படித்துக்கொள்ளலாம்.

     ஒரு மதிய வேளையில் தான் அந்த மனிதரை சந்தித்தேன், சற்றே புன்னகை முகம், சுருண்ட கேசம், அடர்ந்த மீசை,  மாநிறம், சிவந்த நிறத்தில் டி சர்ட் என்று என் பார்வை தொட்ட விடயங்கள் அவை.

     ஓட்டு சேக்குறதுக்கு ஒரு பாரம் குடுங்ககேட்ட தொனியில் சிறு தடுமாற்றம்.

     நான் படிவம் 6 ஐ கொடுத்து விட்டு என் அலுவலக பணியில் மூழ்கிபோனேன்.

     மீண்டும் அந்த மனிதர் என்னிடம் வந்தபோது மதிய உணவு வேளை....பெருங்குடல் சிறுங்குடலை தின்பதை போன்ற உணர்வு எனக்குள்......உண்பதற்கு காலதாமதம் ஆனதால் வயிறு தன் சமிக்கைகள் மூலம்  என் கவனத்தை தன் பக்கமாய் திருப்ப முற்பட்டுக்கொண்டிருந்தது.

     அவசரமாய் ஒரு வாய் சோற்றை உண்டிருப்பேன், மேடம் இன்னொரு பாரம் குடுங்க, எம் பேரு தப்பா இருக்கு அதுக்கொரு பாரம் கொடுங்க....என்று கையை என் முன்பாக நீட்டினார்.

     உலகத்தின் ஒட்டுமொத்த எரிச்சல் எனக்குள் தோன்றியது... பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே, என்னிடத்திலிருந்து எதுவும் பறந்து போகமால் கோபம் அட்டையாய் ஒட்டிக்கொண்டது. அது என் குரலில் வெளிப்படவே செய்தது.

இப்பதான் பாஃம் வாங்கிட்டு போனீங்க, அதுக்குள்ள திரும்ப வந்து பாஃம் க்கு நிக்கறீங்க போங்க சார்“

     அவர் போவதாய் தெரியவில்லை, நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன், பிறகு வரவேண்டும் என்ற இங்கிதம் கூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

            கொஞ்சம் காட்டமாகவே சொன்னேன், “ போங்க சாப்ட பிறகு வாங்க சார்“ அவர் நின்றது நின்றபடியே என்னை பார்த்தார். அவர் முகத்தில் நீ பாஃம் கொடுக்காமல் நான் நகரப்போவதில்லை என்றொரு தீர்மானம்.

     நானோ சாப்பிடாமல் உனக்கு பாஃம் எடுத்துக்கொடுக்கப்போவதில்லை என்று எண்ணிக்கொண்டேன். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்தது, பிறர் முன்னிலையில் உண்பது என்பது, பாட்டி சொல்லும் பழமொழி மண்ண தின்னாலும் மறவா தின்னனும்னு பாட்டி குரலிலேயே வந்து மனதோடு பேசியது, காலப்போக்கில் யார் நின்றால் என்ன நிற்காமல் போனால் என்ன என்று சாப்பிட பழகிக்கொண்டாயிற்று.

     சிறிது நேரத்திற்கு பிறகுதான் நான் பாஃம் கொடுக்கப்போவதில்லை என்ற விடயம் புரிந்ததோ என்னவோ.....அவர் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் என் கூற்று பொய்த்து போனது, அந்த மனிதரின் தோளில் சிறு குழந்தை உறங்கிக்கொண்டிருக்க உடன் ஒரு பெண்ணோடு வந்து நின்றார்.

“இவங்களுக்கு தான் பாரம் வாங்கிட்டு போனேன், இப்ப எனக்கு வேணும் மேடம்... குரலில் சிறு கெஞ்சுதல் இருந்தது.

அந்த பெண் கருப்பாக இருந்தால், லேசாய் தலை கலைந்திருந்தது, புஷ்டியான தேகம், அவள் உள்ளே வரும் போதுதான் கவனித்தேன். ஒரு கால் தாங்கி நடந்தாள்... அவள் ஒரு மாற்று திறனாளி.

     அந்த பெண்ணை பார்த்த பிற லேசாய் மனம் கனியத்துவங்கியது.... ஒரு பரிதாப உணர்ச்சி என்னிடத்தில்....

     நான் எதுவும் பேசாமல் படிவத்தை அந்த மனிதருடன் வந்த பெண்ணிடம் கொடுத்தேன்.

     அந்த பெண் தான் படிவத்தை பூர்த்தி செய்தாள். அந்த மனிதர் குழந்தையோடு நின்றது..... அவர் அந்த குழந்தையை அணைத்து பராமரித்தது அவரிடத்தில் ஒரு தாய்மை உணர்வை என்னை உணரச்செய்தது.

யார் அவங்க

என் மனைவி மேடம்

“அரேன்ஜ் மேரேஜா உங்களது“

“இல்லீங்க மேடம் லவ் மேரேஜ் தான், படிவம் பூர்த்தி செய்துக்கொண்டிருந்த அந்த பெண் நிமிர்ந்து என்னவென்பது போல் தலை அசைத்தாள். ஒன்றுமில்லை என்று பதிலுறுத்தவர், இப்ப தான் மேடம் மனசு கொஞ்சம் இறங்கியிருக்கு, அதனால தான் மேடம் அவங்கள கூட்டிட்டுட்டு வந்தேன்என்றார்

     “ஓ இதுல இப்படி வேற ஒரு டிரிக் இருக்கா.... அதனால தான் உங்க வைஃப்அ அனுப்பறீங்களா? என்றேன்.

     அந்த பெண் தான் அதிகாரிகளிடம் மனுவில் கையெழுத்து வாங்கவும் சென்றாள்.

     “அய்யய்யோ அப்படி இல்ல மேடம் அவளால குழந்தைய தூக்கிட்டு நடக்க முடியாது, அதனாலதான் அவளால முடிஞ்சத அவ செய்யறா, அவளுக்காக என்னால முடிஞ்சத நான் செய்யறேன் மேடம்“ என்று பதிலளித்தார்.

அந்த பதிலில் காதல் மிளிர்ந்தது.

“எப்படி லவ் பண்ணீங்க, உங்க வைஃப் மாற்றுதிறனாளின்னு உங்களுக்கு முன்னமே தெரியுமா?

இல்ல மேடம் எனக்கு தெரியாது, நான் அவங்க ப்ரண்ட தான் முதல்ல லவ் பண்ணேன்....அவங்களுக்கு என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டாங்க, இவங்க எனக்கு ஆறுதலா பேசினாங்க, பிடிச்சிருந்தது, போன்லயே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டோம்....எப்படி இருந்தாலும் கட்டிப்பியான்னு கேட்டாங்க, சரின்னு சொல்லிட்டேன்

“முகத்தை பார்க்காமலே லவ் பண்ணீங்களா?“

“ஆமா மேடம், முதல் முறை சென்னையில தான் அவங்கள பாக்க போனேன்.....நான் பாக்குறப்போ சேர்ல உட்கார்ந்துட்டிருந்தாங்க, பேசிட்டு சரிவா காஃபி சாப்பிட போகலாம்னு கூப்பிட்டேன், எழுந்து நடக்கும்போது தான் தெரிஞ்சது கால் தாங்கி தாங்கி நடந்தாங்க, எப்படி ஆச்சுன்னு தான் கேட்டேன், உனக்கு பிடிச்ச கட்டிக்க இல்லினா காஃபி சாப்பிட்டுட்டு நீ உன் ஊருக்கு போ, நான் என் ஊருக்கு போறேன்னு சொன்னாங்க...கொஞ்சம் பாவமா இருந்தது, எப்படி இருந்தாலும் கட்டிக்கிறேன்னு சொல்லிட்டேன்....ரொம்பவே பிடிச்சிருந்தது கட்டிக்கிட்டேன்“ என்று புன்னகைத்தார்.

அந்த பெண் கொண்டு வந்த மனுவைப் பார்த்தேன், சுமதி கணவர் பெயர் அந்தோணி சாமி என்றிருந்தது.

கடைசி வரைக்கும் ரெண்டு பேரும் இப்படியே ஒற்றுமையா, இருக்கனும்னு சொன்னேன். ரெண்டு பேர் முகத்திலும் ஒரு சந்தோஷம் விகசித்தது.

படித்துக்கொண்டிருப்பவர்கள் ஏதோ கற்பனை கதை என்று எண்ணிவிட வேண்டாம்....செங்கம் வட்டம் கீழ் ஆணைமங்கலம் கிராமத்தில் வசித்துக்கொண்டிருக்கும் அந்த காதல் ஜோடி என் மனதை கவர்ந்ததால் அவர்களை புகைப்படம் எடுத்து தரும்படி கேட்டுக்கொண்டதின் பேரில் அவர்கள் எடுத்து கொடுத்த புகைப்படம் மேலே....

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ காசு பணம் அல்ல காதல் மனம் தான் வேண்டும் என்று தோன்றியது எனக்கு.

      (மீண்டும் இந்த தலைப்பில் வருகிறேன்... ஏதேனும் காதல் மனம் என் கவனத்தை கொள்ளை கொண்டால் மீண்டும் சந்திப்போம்.)

7 comments:

 1. வணக்கம் சகோதரி, நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நீங்கள் எழுதி இருந்த சம்பவத்தை படிக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறை கண்டிப்பாக
  அந்தோணிசாமி-சுமதி ஆகியோரின் வாழ்கையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான காதலின் அர்த்தம் புரியும். அந்த ஜோடியை நீங்கள் மீண்டும் சந்தித்தால் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

  ReplyDelete
 2. தோழி நேத்ரா அனுமதித்தால்,இந்நிகழ்வை ஃபேஸ்புக்கில் எனது பதிவாய் இடலாம் என்றிருக்கின்றேன்...!

  ReplyDelete
  Replies
  1. பதிவிட்டுக்கொள்ளுங்கள் நல்ல விடயத்தை யார் பகிர்ந்தால் என்ன

   Delete
 3. நண்பரே உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது படியுங்கள், முகவரி கீழே.

  http://blogintamil.blogspot.com/2012/08/blog-post_19.html

  ReplyDelete
 4. அருமையான நிஜ பதிவு... பாராட்டுக்கள் சகோதரி...

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
  Follower ஆகி விட்டேன்… இனி தொடர்வேன்…

  இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

  ReplyDelete
 5. அருமையான அனுபவப்பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. அருமையான நிஜக்கதை! நெகிழ வைத்த பதிவு! நன்றி!

  வலைச்சரம் மூலம் முதல் வருகை!

  இன்று என் தளத்தில்
  திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
  http://thalirssb.blogspot.in/2012/08/1.html

  ReplyDelete