மௌனமாய் பேசுகிறேன் ( பாகம் - 1)

Posted by G J Thamilselvi On Sunday, 8 April 2012 0 comments

     மௌனமாய் எப்படி பேசுவது என்று நீங்கள் கேட்பது என் செவியை தீண்டுகிறது. உங்களோடு நான் மௌனமாகதான் பேசப்போகிறேன். என் உதடுகள் அசையாமல், என் குரல் காற்றினால் சப்தித்து உங்கள் செவி தீண்டாமல், என் எண்ணங்கள் நான் எழுதும் எழுத்துக்களின் மூலமாக சப்தமே இல்லாமல் உங்கள் மனதை சந்திக்க வருகிறது என்று சொல்ல ஆசைதான். 20 ஹேர்ட்ஸ் முதல் 20,000 ஹேர்ட்ஸ் வரை உள்ள ஒலி அலைகளை மனிதனால் கேட்கமுடியும். 20ஹேர்ட்ஸ்க்கும் குறைவான ஒலி அலைகளை மனிதனால் கேட்க முடியாது என்பதற்காக ஒலி (சப்தம்) அங்கே இல்லை என்று சொல்வது உண்மையாகாது. நான் எழுதுகின்ற இந்த வரியின் போதுதான் நான் உள்வாங்கும் எண்ணத்திற்கும், என்னிடத்திலிருந்து வெளியேறும் எண்ணத்திற்கும் கூட ஒலி அலைகள் இருக்க கூடும் என்ற எண்ணம் என்னுள் உதயமாகியது.

      மௌனமாய் பேசுகிறேன் தலைப்பைப்பார்த்து, கவிதையோ, கதையோ, என்று வந்தால் இது என்ன கட்டுரையாக நீள்கிறதே……………………

      நான் எழுதப்போவது கதையா ?. இல்லை, கவிதையா?. பச் அதுவும் இல்லை. வேறு என்னதான் பெண்ணே இம்சிக்காமல், போரடிக்காமல் விரைவாக சொல், என்று நீங்கள் அதட்டினால் நான் அதிர்ந்து போகமாட்டேனா?, பாவம் நான் சின்ன குழந்தை இந்த எழுத்திற்குள் நான் மட்டுமே கதாநாயகி, நான் அறிமுகப்படுத்தும் அல்லது எனக்கு அறிமுகமாகும் நபர்களை துணை நாயகர்கள் என்றோ, நாயகிகள் என்றோ அழைத்துக்கொள்ளலாம். (போனால் போகட்டும் உங்களையும் சேர்த்து தான் சொல்கிறேன்) (ஹலோ இப்படி அதிகப்படியாய்  பேசக்கூடாது. நான் அறிமுகப்படுத்துபவர்கள் சம்பவத்தின் நாயகர்கள் மட்டும் தான் என் நாயகனை நான் சந்தித்தேன்……………. அது அவ்வளவு சுவராசியமான நிகழ்வு, அதை எழுத வேண்டும் என்றால்….ஒவ்வொரு எழுத்தும் என்னை முதலில் எழுது என்று போட்டிப்போட்டுக்கொண்டு முன் நிற்கும், கொஞ்சகாலம் என் எழுத்தில் இருந்து மட்டும் அவனுக்கு விடுதலை அளித்துவிடலாம்……. என் இதயக்கூட்டிலும் என் சிந்தனை மண்டலத்திலும் வந்து அட்டையாய் ஒட்டிக்கொண்ட அவனை விட்டு விட மனம் எப்பொழுதும் எத்தனிக்கவில்லை. என்னை சுற்றி அனுதினம் நடக்கும் சம்பங்களை தான் உங்களோடு பகிர போகிறேன். ஒவ்வொரு நிகழ்வின் போதும் எனக்குள் உண்டாகும் எதிர்மறை எண்ணங்களை நான் எப்படி வெற்றிக்கொள்கிறேன் என்று கண்டு நீங்களும் என்னைப்பின்பற்றுங்கள் என்று நிச்சயமாக சொல்லப்பொவதில்லை. உங்களுக்கு முன்மாதிரியாகவோ, உங்களுக்கு போதனை தரக்கூடியவளாகவோ உங்களிடத்தில் நான் வரவில்லை. என் உணர்வுகளை எழுத்தில் வடித்து, உங்கள் நட்பாய் உங்களை சந்திக்க வரும் நான் நேத்ரா…………அதுதான் என்னுடைய பெயர்…………………….நேத்ரா என்ற பெயருக்கு ஏற்ப அழகான ஆரோக்கியமான கட்டிளம் பெண்ணை நீங்கள் கற்பனை செய்தீர்களானால் நீங்கள் ஏமாந்தீர்கள். நேத்ராவாகிய நான் ஒரு மாற்று திறனாளி…… கலைஞர் செய்த செயல்களிலேயே நான் வெகுவாய் மகிழ்ந்தது ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றி, மாற்று திறனாளிகள் என்று புதுவார்த்தையை கொண்டுவந்து நடைமுறையை புதுப்பிக்கச்செய்ததினால் தான்……

0 comments:

Post a Comment