மௌனமாய் பேசுகிறேன் - (பாகம் - 5)

Posted by G J Thamilselvi On Tuesday, 17 April 2012 2 comments

“நிஜமாவா, விநாயகர வேண்டிட்டா நடப்பேனா?”

“ம் நிஜம்தான்”

“குதிப்பேனா?”

“ம்”

“ஓடுவேனா”

“ஏய் லூசு தங்கச்சி எல்லாம் பண்ணுவ“

குபீர்னு எனக்குள்ள பொங்கி வழிஞ்ச சிரிப்ப இந்த நிமிஷம் வரைக்கும் என்னால மறக்க முடியலிங்க

திரும்பி விநாயகர பாத்தேனா அவரும் என்ன பாத்து சிரிக்குற மாதிரி இருந்துச்சு, வா போவோம்னு தேவாண்ணா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டான். அம்மாவுக்கு ஏதோ மீட்டிங்காம் செங்கத்துக்கு போய்ட்டா, நான் தெருவுல உக்காந்து வேடிக்கை பாத்துட்டிருக்கேன். எதுத்தாப்ல ஆச்சாரி வீடு அந்த வீட்டு பொண்ணு உமா என்ன பாத்து சிநேகமா சிரிச்சது.

     நான் சிரிக்காம மூஞ்ச வேறபக்கம் திருப்பிக்கிட்டேன். “என்ன கால மெறிச்சிட்டேன்னு கோவமா”, பக்கத்துல வந்து நைசா முகத்தை திருப்பி கேக்குது, “எப்ப மிதிச்ச” திருப்பி கேட்டேன் நான், எப்ப மிதிச்சா எனக்கு தெரியல.

“ஸ்கூல்ல நாங்கள்லாம் வெளிய போனோமில்ல அப்பதான்” நான் யோசிச்சு பாத்துட்டு, ப்ச் எனக்கு தெரியல நீ வேணா திரும்பி மிதியேன்னு சோன்னேன்.

“வேணாம் பாவம் வலிக்கும்” ரெண்டுப்பக்கமும் மறுப்பா முகத்தை ஆட்டினா,

நா அவளையே பாத்துட்டிருந்தேன், மெதுவா அவ கால என் காலு மேல வச்சு மிதிக்காம மிதிச்சா, ஏய் நீ ஏமாத்துற நான் ஒரு விரலை ஆட்டி சிரிச்சேன்.

“ஏய் உமா அந்த நொண்டி பொண்ணுக்கூட என்னா விளையாட்டு, இங்க வா” அவங்க தாத்தாதான் அப்படி கூப்பிடறாங்க, என் மூஞ்சி சிறுத்து போச்சு, அந்த பொண்ணு பாவம் என்ன பாத்துக்கிட்டே அவங்க வீட்டு போயிடுச்சு நா முட்டிப்போட்டுக்கிட்டு உள்ள போய்ட்டேன். நொண்டியா நானு ஏன் எல்லாரும் இப்படியே சொல்றாங்க, என்னால நடக்க முடியாத அவங்கள போல, கண்ண கரிச்சுகிட்டு அழுவை வருது, வயத்துக்குள்ள பசி வயித்துல குடல் பிணையுது கண்ணுக்குள்ள தூக்கம் வருது, கண்ணை ரெண்டும் கசக்குறேன், மின்சாரவிளக்கு இல்ல, லாந்தர் தான் எரிய வைக்க என்னால முடியல, கூரையில கட்டி தொங்க விட்டு கும்மிருட்டுல கொஞ்சமா வந்த நிலா வெளிச்சத்துல இப்படியும் அப்படியும் ஆடி பேயாட்டம் போடுது… ம்மா பயமா இருக்கே….

வீட்டுக்கு பின்னாடி பச்ச பசேல்னு வயக்காடு, தவக்கள கத்துது, சில் வண்டு க்ரீச் க்ரீச் சொல்லுது, மினுக்காம் பூச்சி ஒண்ணு மினுக் மினுக்குங்குது, சில்லுனு காத்து, இருட்டுல காட்டுச்செடி காத்துல அசைஞ்சு டிஸ்கோ ஆடுது.

“வௌயாடலாமா”

“ம்” திரும்பிப்பாக்குறேன், யாரையும் காணும், ஏய் வௌயாட வரலியா நீ, திரும்பவும் குரல் கேக்குது, இப்ப அவன் அங்க இருந்தான், “ம், என்ன வௌயாட்டு?, சொல்றேன் வான்னு கூப்பிடறான் “எங்கன்னு  கேக்குறன், அந்த ஆலமரத்தடியில உக்காந்து வௌயாடலாம், “நான் எப்படி வர்றதாம் முட்டி பொட்டுக்கிட்டா, முட்டியில கல்லுக்குத்திச்சு இங்கபாரு புண்ணு, முட்டியில வட்டமா ஒரு குங்கும பொட்டு, அதை கை வச்சு தொட்டு பாக்குறான் அவன், ஸ்ஹா வலிக்குதுடான்னு அழறேன் வா தூக்கிக்கிட்டு போறேன், குனிஞ்சு உக்காந்துக்கிட்டு ஏறிக்கோ உப்பு மூட்ட தூக்கிட்டு போறேன். நான் அவன் முதுகுல ஏறி அவ கழுத்த என் ரெண்டு கையாலும் கட்டிக்க, அவன் என் கால் ரெண்டு பக்கமும் கைகொடுத்து பிடிச்ச மாதிரி நடக்குறான், உன் பேரு என்ன, அபி, அபின்னா? அப்படி ஒரு பேரா, இல்ல அபிஷேக்குமார், உன்ன நான் எப்படி கூப்பிடறது, எப்படின்னா கூப்புடு, ஆலமரத்த சுத்தி போட்டிருந்த சிமெண்ட் திடல்ல, உட்காத்தி வச்சிட்டு அவனும் மேல ஏறி எனக்கு எதுத்தாப்ல உட்காந்துக்கிட்டான். ரொம்ப பெரிய ஆலமரம், ஒவ்வொரு கிளை வழியா வழிஞ்சு வர்ற நிலா வெளிச்சம்.

மரத்தடியில இருந்த பிள்ளையார கணோம், எங்க போய்ட்டார், சிமெண்ட் தரையில இருந்த ஆலம்பழத்தை பொறுக்குறேன், ச்சீ கீழ போடு கைய தட்டிவிடறான், என் ரெண்டு கையையும் விரிச்சு தரையில கவுத்து வச்சு, அவனோட ஒரு கையைமட்டும் தரையில வச்சிட்டு இன்னொரு கையால, ஓர் சிறுவன் கடைக்கு சென்றான் ஒரு டசன் பென்சில் வாங்கினான் அதன் பெயர் என்ன? என் முஞ்சிய பாக்குறான்.

தலய கொஞ்சம் பின்னாடி சாச்சு என்னங்குறேன். எதாச்சும் ஒரு கலர் சொல்லுங்கறான், என்ன கலர் நான் கேள்வி கேக்குறேன். உனக்கு கலர் தெரியாதா?, ம், ம்கூம், ங்கறேன்,

சிவப்பு கருப்பு மஞ்சள் நீலம் கருநீலம்…னு நீண்டுகிட்டே போகுது அவன் சொல்றான், நான் அவனையே பாத்துக்கிட்டு இருக்கேன்…

“ஏய் நேத்ரா என்னடி பண்ற, விளையாடறேன்மா, விளையாடறியா? யார்கூடடி…ஏய் ….அபிககூடதாம்மா… அபியா... நேத்ரா கண்ண மூழுச்சி பாருடி, நேத்ரா அம்மா சத்தம்போட்டு கூப்பிடறா, அம்மா மடியில நானிருக்கேன். அம்மா அழறா, எதுக்கு அழறா?...

2 comments:

 1. உங்க கதை ரொம்ப நல்லா இருக்கு. ஒவ்வொரு நாளும் அடுத்து என்ன நடக்கும் அப்படிங்கிற எதிர்பார்ப்பு உண்டாவதை தடுக்க முடியவில்லை.நேத்ரா எதுக்காக அழுதாங்கன்னு சீக்கிரம் சொல்லுங்க .

  ReplyDelete
 2. 'மனிதர்முகத்தை மனிதர் பழிக்கும் பழக்கம்'பாலகுமாரன் எங்கோ, எப்போதொ எழுதியதாய் நினைவு. அன்று முதல் அச்செய்கையை நான் விட்டேன் , அதை மற்ற மனிதர்களும் விட யார் எழுதவேண்டுமென எனக்குத் தெரியவில்லை.

  என் தோழியின் வலி எனக்காயிற்று..

  "நோயற்ற வாழ்வே குறைவற்றசெல்வம்" என்ற வரி..மிகப்பெரிய உருவெடுத்து என் முன் நிற்பதாய் நான் உணர்கின்றேன்.

  சிறிய நோய்.. ஆயினும் கொடிது..இப்படி வாழ்வின் விளிம்பில் உட்காரவைத்தது வலிதருகின்றது..

  சொட்டுமருந்து விளம்பரம் என்னை அவ்வளவு ஈர்த்ததில்லை...அதன் தாக்கம் அறியாததால்..என் தோழியால் வலியறிந்த நானும் இனி முயல்வேன் அந்நோயின் கொடிய கைகளில் இன்னொமொரு தோழமை சிக்காதிருக்க.

  ReplyDelete