மௌனமாய் பேசுகிறேன் - (பாகம் - 4)

Posted by G J Thamilselvi On Monday, 16 April 2012 0 comments

     அம்மா அப்போ தொடக்கப்பள்ளி ஆசிரியைய இருந்தா...அக்கா படிக்க போய்ட்டா, சகாயமாதா மெட்ரிக்குலேஷன் ஸ்கூல். அம்மா வேலைக்கு போய்டுவா...நான் மட்டும் ஓட்டு வீட்டின் ஒட்டுத் திண்ணையில சாலை வெறிச்சபடி..., வெறிச்சோடிப்போன மண்சாலையில் பத்து மணிக்கு மேல் ஆடு மாடு கூட நடமாடாது. இது தினமும் நடக்கு காட்சி...எப்பொழுதாவது அத்திபுத்ததுபோல மாறிட்டாலும் மாறிடும்.

   அப்படி ஒரு நாள் மாலையில நா தனிச்சிருக்கேன், அந்த பால்வாடி டீச்சர் கொஞ்சம் அரிசியில் வெல்லம் தேங்காய் திருவிபோட்டு கொண்டு வந்து தந்தா, அம்மா யார் எதை கொடுத்தாலும் வாங்கக்கூடாது என்று தான் சொல்லியிருக்கா, ஆனால் அந்த டீச்சர் கொடுத்ததை நான் வாங்கிக்கிட்டேன். அவ என்னை கடந்து போனப்ப என்ன இந்த பக்கம்னு யாரோ கேட்க,அந்த நொண்டி பொண்ணுக்கு அரிசிகொடுக்க வந்தேன்னுஅவள் சொல்ல, நான் அரிசியை தூக்கி ரோட்டில் வீசி எறிஞ்சேன்.

     “நொண்டி பொண்ணுக்கு திமிர பாருண்ணுதான் சொன்னாங்க, என்னால என்னை நொண்டியா பார்க்க முடியல, அங்க இருந்தவங்களுக்கு என்னோட வேதனை புரியல. அத அவங்களால புரிஞ்சுக்கவும் முடியாது. அது யுகங்கள் கடந்த ஆழமான வலி. குழந்தைபிராயத்துக்கே உரித்தான எத்தனை துருதுருப்புகளை...சேட்டைகளை மனதிற்குள்ளேயே மரணித்துக்கொண்ட வலி.

   அப்பொழுதிருந்தே அந்த ஊரைப்பொறுத்த வரை என்னை திமிர் பிடிச்சவளாவே சித்தரிச்சுக்கிட்டாங்க, அதுக்கு நா என்ன பண்ணமுடியும், யாருக்கு என் கூட பேச பயமோ இல்லையோ, பால்வாடி டீச்சர் மட்டும் என்ன பாக்கும் போதெல்லாம் முகத்தை கோபமா ஒரு வெட்டு வெட்டி திருப்பிக்குவா, அதுக்கப்புறம் சொர்ப்பனந்தல்னு ஒரு ஊருக்கு    வந்துட்டோம் அம்மா என்ன அவ பள்ளிக்கூடத்துக்கு அழைச்சுட்டு போய் ஒன்னாம் வகுப்புல உட்கார்த்தி வச்சிட்டு அவ பாட்டுக்கு அவ வகுப்புக்கு போய்டுவா, ஒன்னாம் வகுப்பு டீச்சர் வருவா குண்டு பூசணி அஞ்சலா… “எல்லாரும் எழுந்து நின்னு இறைவணக்கம் சொல்லுங்க”

“நானுமா டீச்சர் எழுந்து நிக்கனும், என்னாலதான் எழுந்திரிக்க முடியாதே…”

     “அடச்சே உன்ன யார் சொன்னது, இந்த டீச்சருக்கு அறிவே இல்ல இந்த கருமத்தை வேற கூட்டிட்டுவந்து என் தலையில கட்டிடுச்சு”

“ஏய் நீங்க சொல்லுங்க” ன்னு படிக்கிற பசங்கள பாத்து கத்தினா,

குள்ள குள்ளனே
குண்டு வயிரனே
வெள்ளி கொம்பனே
விநாயகா சரணம்.

     இந்த வரிகள் தான் என் நெனப்புல நின்னது, இறை வணக்கம் முடிஞ்சதும், “எல்லாரும் எந்திரிச்சு அந்த வேப்பமரத்தடிக்கு வாங்க”

“டீச்சர் நானு”

     “நான் கேட்டது டீச்சர் காதுல விழுந்ததா இல்லையா? அவபாட்டுக்கு போய்ட்டாளே…இந்த அம்மா வேற காணும்”

     அழுகை வந்தது எனக்கு நான் அழுதுக்கிட்டே அந்த வகுப்பறையில உட்கார்ந்திருக்கேன்.....எப்படியோ அழுகை எனக்கு பழக்கமாயிடுச்சு, என் இயலாமையை காண்பிக்கும் அடையாளம் அழுகை.

     மெதுவாய் நகர்ந்து வாசற்படிக்கு பக்கத்துல வந்து உட்கார்ந்தா, சில காட்சிகள் கண்களுக்கு தெளிவாகும் வேப்பமரத்தடியில் ஒன்னாங்கிளாஸ் பசங்க உட்கார்ந்து அ ஆ இ என்று சப்தமாய், ஒரு இசைத்தன்மையோடு உரத்து சொல்லுவாங்க,

அந்த டீச்சர் ஒரு குச்சியை கையில் வச்சிக்கிட்டு இதுக்கும் அதுக்குமா நடந்துக்கிட்டே பசங்களுக்கு சொல்லிக்கொடுக்கும், என் பக்கம் திரும்பவே திரும்பாது.

     பெரிய ஆலமரம் ஒண்ணுல அணில் துள்ளி விளையாடும். ஆலமரத்துக்கு எதுத்தாப்பல பால்பாடி. ஆலமரத்துக்கு அடியில தொப்பை விநாயகர்.......என்னோட கிரேட் ப்ரண்ட், நான் விளையாடிய முதல் நண்பன் மிஸ்டர் தொப்ப மாமா...இப்பவும் அப்படி தான் கூப்பிடுறேன்.

அத விட்டு இந்தபக்கம் வந்தா, வாயிற்படிக்கு பக்கத்து அறை சமையற்கட்டு....குயிலி ஆயாம்மா...பசிக்குதாடி எதாவது சாப்பிடறியான்னு அவளுக்கு தெரிஞ்சபடி குசலம் விசாரிப்பா.

சாயந்திரம் 4 மணி ஆச்சுன்னா தேவேந்திரன் ஒரு அண்ணா ஐந்தாவது படிச்சிட்டுருந்தான், என்னை உப்பு மூட்டை தூக்கிக்கிட்டு போய் வீட்ல விடனும், கரெக்டா வந்துடுவான், அவன் தான் விநாயகர்கிட்ட என்னை கூட்டிட்டு போனவன். நெறய ஆலம்பழம் சேர்த்து விநாயகர் தலையில கொட்டி அர்ச்சனைங்கிற பேர்ல குண்டு வயிரனேன்னு பாட்டுபாடி...கொஞ்சமா சிரிச்சு சந்தோஷப்பட்டது அவனாலதான். விநாயகர் நல்ல கருப்பு, பெரிய தும்பிக்கை, பெரிய வயிறு, நான் பெரிய வயிற தடவி பாக்குறேன், விநாயகர் என்ன திட்டவே இல்ல, நொண்டி சொல்லல, நான் சிரிச்சேன்,
“எதுக்கு சிரிக்குற“

“விநாயகர் என்ன திட்டலடா அண்ணா“

“அவர் திட்டமாட்டார், நீ வேண்டிக்க உனக்கு கால் நல்லாயிடும்“

0 comments:

Post a Comment