மௌனமாய் பேசுகிறேன் - (பாகம் - 3)

Posted by G J Thamilselvi On Saturday, 14 April 2012 0 comments

     எனக்குரிய முடியாதுகள் ஒரு பெரிய பட்டியலா  நீண்டுக்கிட்டே போகும், நான் எல்லா விஷயத்தையுமே முடியாதுன்னு தான் சிந்தனை பண்றேன்னு ரொம்ப நாளா நான் கண்டுபிடிக்கவே இல்ல.
     என் சிந்தன ஓட்டம் எனக்கு பழக்கமாகி என் சிந்தனய  நான்னு நெனச்சுக்கிட்டேன் அவ்வளவுதான்.

     நடக்க முடியாது......எனக்குண்டான முடியாததுகளின் பட்டியல்ல முதல்ல இருக்குறது சுமார் ஒரு முப்பத்து மூன்று வருஷத்துக்கு முன்னாடி நான் முட்டிப்போட்டுட்டு தரையில கை ஊன்றிதாங்க நடந்தேன்......என்ன இது பிரமாதம் எல்லா குழந்தையும் இப்படி தான் நடக்கும்....இப்படி நீங்க சொன்னாலும்...எனக்கு எட்டு வயது ஆகும் வரை ஒரு குழந்தையை போல தவழ்ந்து தான் போனேன்.

   வளர்ந்த பிள்ளையை தூக்கிக்கிட்டு போக முடியலன்னு , எங்கம்மா சொந்தக்காரங்க வீடு விருந்து பொழுது போக்குன்னு எங்க போறதையும் நிறுத்திட்டா......... கிட்ட தட்ட 26 வருடங்களுக்குப் பிறகு நண்பன் படம் பார்க்க தான் வலுக்கட்டாயமா அவ அழைச்சுட்டு போனேன்.

   சின்ன வயசுல எனக்கு விளையாட்டு ப்ரண்டுன்னு யாருமில்லிங்க, என் வயசு பசங்கள்ளாம் கில்லி கோலி நொண்டி கண்ணாமூச்சின்னு ஏதேதோ விளையாடினாங்க.......நானும் விளையாட வரேன்னு சொன்னதுக்கு நொண்டி நொண்டி விளையாட வரியான்னு கேலி பேசினதால விளையாட்டே எனக்கு பிடிக்காம போச்சுங்க...
   நான் அவர்களை போல் இருக்கவில்லை, அவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தப்பட்டேன். இது இயற்கையா நிகழ்ந்ததா? செயற்க்கையா அவர்களாகவே பாகுபடுத்திக்கிட்டதான்னு எனக்கு தெரியல.

   அவங்கள வேடிக்க பாக்குற இடத்துல கூட என்ன வச்சு பாக்க அவங்களால முடியல.

   படிப்புனு பார்த்தா...... நான் அப்ப இருந்தது ஒரு கிராமத்துல...கிருஷ்ணாபுரம் தான் அந்த ஊரோட பேரு பெயர். எல்லா ஊர்லயும் பால்வாடி இருக்குமில்ல, என்னையும் பால்வாடியில்தான் என் அப்பா கொண்டுபோய் சேர்த்துவிட்டாங்க...பால்வாடி டீச்சர் எங்கப்பாவோட இரண்டாவது பொண்டாட்டி...அந்தம்மாவ பாக்கும் போதெல்லாம் ஓரே கடுப்பு தான், அதுக்கு மேல என்ன மாதிரி குட்டி பிசாசுங்க ஓடி விளையாண்டத பார்த்து நேத்ரா குட்டிபிசாசுக்கு பயங்கர அழுகாச்சி
   அந்த பசங்க என்ன வித்தியாசமா ஒரு ஜந்துவ பாக்குற மாதிரி பாத்தாங்க, என்னால அவங்கக்கூட ஓடி விளையாட முடியல, அவங்களால என்னோட உட்காந்து விளையாட முடியல, எந்த குழந்தையாலங்க ஒரு இடத்துல சும்மா உட்கார முடியும்? நீங்க தான் சொல்லுங்களேன்.

   அதுக்கப்புறம் பால்வாடியா.......... போங்கடி நீங்களுமாச்சு உங்க படிப்புமாச்சு..........ன்னு வீட்டுக்கு வந்துட்டேன். எங்கப்பா பொத்து பொத்துன்னு பொத்தி எடுத்துட்டார்.

     பெரியங்களோட இருந்து நானும் பெரியங்க போல பேசினங்க,
எங்கப்பாவ பாத்து “துரைக்கு பொண்டாட்டிய பாக்காம இருக்க முடியலியோ என்ன சாக்கு வச்சு பாக்கப்போறீங்களோன்னு கேட்டேன்“ எங்கம்மாவும் அப்பாவும் சண்டப்போடும் போது பேசினத நானும் சொன்னேன், அதுக்கும் ஒததான் சூம்பிபோன என் கால பிடிச்சு தலைகீழா தொங்க விட்டு அடிக்குறாரு...
     எங்கம்மா வந்து காப்பத்துனதால தப்பிச்சன், இல்லினா இப்படி உங்களுக்கு என் கதைய சொல்ல நேத்ரா இருந்திருக்க மாட்டேங்க.

0 comments:

Post a Comment