மௌனமாய் பேசுகிறேன் ( பாகம் - 2)

Posted by G J Thamilselvi On Tuesday, 10 April 2012 1 comments

வார்த்தைகள் தான் மனுஷன ஆட்டிப்படைக்குதுன்னு சொன்னா நீங்களோ அல்லது நானோ ஒத்துக்கப் போறதில்ல. கடந்து வந்த பாதையில வெறும் வார்த்தைய வச்சு ஒரு மண்ணும் கிழிக்க முடியாதுன்னு தான் நான் நெனச்சேன். ஊனமுற்றோர் என்ற வார்த்தை எதிர்மறை உணர்வ தோற்றுவிக்குறத பல நேரங்களில் நான் உணர்ந்திருக்கேன்.

     ஊனம்ங்கறதே மனச சங்கடப்படுத்துற ஒண்ணா இருந்துச்சு ஏன்னா நேத்ராவாகிய நான் பிறந்த பொழுது அழகும் ஆரோக்கியமும் உடைய குட்டி தேவதையா இருந்திருக்கேன், எங்க அம்மாக்கிட்ட இருந்து என்னை வாங்கி கொஞ்சி மகிழாதவங்களே இல்லன்னு சொல்வாங்க... குழந்தன்னா எல்லாரும் பிரியமா கொஞ்ச தான் செய்வாங்க, அதிலயும் அழகான குழந்தைன்னா... தத்தி நடக்குற வயசுல போலியோவால பாதிக்கப்பட்ட உடன என்ன யாராவது தூக்கி கொஞ்சினாங்களா? ன்னு எங்கம்மாக்கிட்ட கேட்டேன், அவ சாதிச்ச மௌனம் எனக்கு எத்தனையோ விஷயத்தை புரிய வச்சது, ஆரோக்கியம் தான் அழகுன்னு என் சிநேகிதகாரன் சொன்னத நெனச்சு பார்த்தேன். நிஜம் தான ஆரோக்கியம் இல்லாம போன யார் சீந்தப்போற, ஆரோக்கியம் இருக்குற இடத்துலதான அழகும் இருக்கும்.

      ஆரோக்கியம் கெட்டுபோன நோஞ்சான் குழந்தைய யாராவது தூக்கி கொஞ்சப்போறங்களா என்ன?

     எனக்குள் இருந்த ஆரோக்கியம் போனபின்னாடி நான் யாரையும் என் பக்கம் ஈர்த்து இருக்கமாட்டேன்...அதுக்கு பின்னாடி தான் நான் தனிமைபடுத்தப்பட்டிருப்பேன்னு நினைக்குறேன். எங்கம்மா இயல்பாகவே எதிர்மறையா யோசிக்கிறவ... என்ன கவனிச்சு எனக்கு பீ மூத்திரம் அள்ளி ஒரு கட்டத்துல சளிச்சு போய்ட்டா, அவள எப்படி குத்தம் சொல்றது... பெத்த நாலு பிள்ளயில ஒண்ண மட்டுமே பாத்துட்டிருந்தா மத்த மூணும் என்னாவறது, கடவுள்ங்கிற வார்த்தைக்கு படைச்சவன்னு ஒரு அர்த்தம் இருந்தா எனக்கு கடவுள் என்ன பெத்தவதான்....

      அதுக்கு பிறகுநான் எதிர்மறை உணர்வுகளையே உணர்ந்து பழக்கப்பட்டுபோனதால..........எனக்குள்ளும் அதிகபடியான முடியாதுகள் வந்து ஒட்டிக்கிச்சி. இப்ப நான் சொல்ல வர்றது என்னன்னா, எனக்கு நோய் வந்ததோ, எனக்கு ஆரோக்கியம் கெட்டதோ, நான் ஒரு எதிர்மறை எண்ணவாதியா ஆனதுக்கு காரணமில்லைங்க, மத்தவங்க என்னோட நிலமய பார்த்து என்கிட்ட பேசின பேச்சுகள் தான் முடியாதுகள் என்கிட்ட வந்து ஆசையா காதலோட ஒட்டிக்கிட்டதுக்கு காரணம்.

 உங்கள பத்தி மத்தவங்க என்ன நெனக்கிறாங்கங்குறது முக்கியமில்ல நீங்க உங்கள பத்தி என்ன நெனைக்கிறீங்கங்குறதுதான் முக்கியமான விஷயம்...........உங்கள பத்தி நீங்களே கொஞ்சம் உசரத்துல வச்சு பாருங்க மத்தவங்களும் உங்கள அப்படியே நடத்த ஆரம்பிப்பாங்க........உங்கள பத்தி மத்தவங்க சொல்ற எதையும் உங்களுக்கு எல்லையா வச்சுக்காதீங்க......... இது நான் அனுபவிச்சு சொல்ற உண்மை.

1 comment:

  1. மிகவும் உண்மையான வார்த்தைகள். இதை படிக்கும் போது உங்களுடைய மனதின் வலி புரிகிறது.

    ReplyDelete