மௌனமாய் பேசுகிறேன் - (பாகம் - 5)

Posted by G J Thamilselvi On Tuesday, 17 April 2012 2 comments

“நிஜமாவா, விநாயகர வேண்டிட்டா நடப்பேனா?”

“ம் நிஜம்தான்”

“குதிப்பேனா?”

“ம்”

“ஓடுவேனா”

“ஏய் லூசு தங்கச்சி எல்லாம் பண்ணுவ“

குபீர்னு எனக்குள்ள பொங்கி வழிஞ்ச சிரிப்ப இந்த நிமிஷம் வரைக்கும் என்னால மறக்க முடியலிங்க

திரும்பி விநாயகர பாத்தேனா அவரும் என்ன பாத்து சிரிக்குற மாதிரி இருந்துச்சு, வா போவோம்னு தேவாண்ணா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டான். அம்மாவுக்கு ஏதோ மீட்டிங்காம் செங்கத்துக்கு போய்ட்டா, நான் தெருவுல உக்காந்து வேடிக்கை பாத்துட்டிருக்கேன். எதுத்தாப்ல ஆச்சாரி வீடு அந்த வீட்டு பொண்ணு உமா என்ன பாத்து சிநேகமா சிரிச்சது.

     நான் சிரிக்காம மூஞ்ச வேறபக்கம் திருப்பிக்கிட்டேன். “என்ன கால மெறிச்சிட்டேன்னு கோவமா”, பக்கத்துல வந்து நைசா முகத்தை திருப்பி கேக்குது, “எப்ப மிதிச்ச” திருப்பி கேட்டேன் நான், எப்ப மிதிச்சா எனக்கு தெரியல.

“ஸ்கூல்ல நாங்கள்லாம் வெளிய போனோமில்ல அப்பதான்” நான் யோசிச்சு பாத்துட்டு, ப்ச் எனக்கு தெரியல நீ வேணா திரும்பி மிதியேன்னு சோன்னேன்.

“வேணாம் பாவம் வலிக்கும்” ரெண்டுப்பக்கமும் மறுப்பா முகத்தை ஆட்டினா,

நா அவளையே பாத்துட்டிருந்தேன், மெதுவா அவ கால என் காலு மேல வச்சு மிதிக்காம மிதிச்சா, ஏய் நீ ஏமாத்துற நான் ஒரு விரலை ஆட்டி சிரிச்சேன்.

“ஏய் உமா அந்த நொண்டி பொண்ணுக்கூட என்னா விளையாட்டு, இங்க வா” அவங்க தாத்தாதான் அப்படி கூப்பிடறாங்க, என் மூஞ்சி சிறுத்து போச்சு, அந்த பொண்ணு பாவம் என்ன பாத்துக்கிட்டே அவங்க வீட்டு போயிடுச்சு நா முட்டிப்போட்டுக்கிட்டு உள்ள போய்ட்டேன். நொண்டியா நானு ஏன் எல்லாரும் இப்படியே சொல்றாங்க, என்னால நடக்க முடியாத அவங்கள போல, கண்ண கரிச்சுகிட்டு அழுவை வருது, வயத்துக்குள்ள பசி வயித்துல குடல் பிணையுது கண்ணுக்குள்ள தூக்கம் வருது, கண்ணை ரெண்டும் கசக்குறேன், மின்சாரவிளக்கு இல்ல, லாந்தர் தான் எரிய வைக்க என்னால முடியல, கூரையில கட்டி தொங்க விட்டு கும்மிருட்டுல கொஞ்சமா வந்த நிலா வெளிச்சத்துல இப்படியும் அப்படியும் ஆடி பேயாட்டம் போடுது… ம்மா பயமா இருக்கே….

வீட்டுக்கு பின்னாடி பச்ச பசேல்னு வயக்காடு, தவக்கள கத்துது, சில் வண்டு க்ரீச் க்ரீச் சொல்லுது, மினுக்காம் பூச்சி ஒண்ணு மினுக் மினுக்குங்குது, சில்லுனு காத்து, இருட்டுல காட்டுச்செடி காத்துல அசைஞ்சு டிஸ்கோ ஆடுது.

“வௌயாடலாமா”

“ம்” திரும்பிப்பாக்குறேன், யாரையும் காணும், ஏய் வௌயாட வரலியா நீ, திரும்பவும் குரல் கேக்குது, இப்ப அவன் அங்க இருந்தான், “ம், என்ன வௌயாட்டு?, சொல்றேன் வான்னு கூப்பிடறான் “எங்கன்னு  கேக்குறன், அந்த ஆலமரத்தடியில உக்காந்து வௌயாடலாம், “நான் எப்படி வர்றதாம் முட்டி பொட்டுக்கிட்டா, முட்டியில கல்லுக்குத்திச்சு இங்கபாரு புண்ணு, முட்டியில வட்டமா ஒரு குங்கும பொட்டு, அதை கை வச்சு தொட்டு பாக்குறான் அவன், ஸ்ஹா வலிக்குதுடான்னு அழறேன் வா தூக்கிக்கிட்டு போறேன், குனிஞ்சு உக்காந்துக்கிட்டு ஏறிக்கோ உப்பு மூட்ட தூக்கிட்டு போறேன். நான் அவன் முதுகுல ஏறி அவ கழுத்த என் ரெண்டு கையாலும் கட்டிக்க, அவன் என் கால் ரெண்டு பக்கமும் கைகொடுத்து பிடிச்ச மாதிரி நடக்குறான், உன் பேரு என்ன, அபி, அபின்னா? அப்படி ஒரு பேரா, இல்ல அபிஷேக்குமார், உன்ன நான் எப்படி கூப்பிடறது, எப்படின்னா கூப்புடு, ஆலமரத்த சுத்தி போட்டிருந்த சிமெண்ட் திடல்ல, உட்காத்தி வச்சிட்டு அவனும் மேல ஏறி எனக்கு எதுத்தாப்ல உட்காந்துக்கிட்டான். ரொம்ப பெரிய ஆலமரம், ஒவ்வொரு கிளை வழியா வழிஞ்சு வர்ற நிலா வெளிச்சம்.

மரத்தடியில இருந்த பிள்ளையார கணோம், எங்க போய்ட்டார், சிமெண்ட் தரையில இருந்த ஆலம்பழத்தை பொறுக்குறேன், ச்சீ கீழ போடு கைய தட்டிவிடறான், என் ரெண்டு கையையும் விரிச்சு தரையில கவுத்து வச்சு, அவனோட ஒரு கையைமட்டும் தரையில வச்சிட்டு இன்னொரு கையால, ஓர் சிறுவன் கடைக்கு சென்றான் ஒரு டசன் பென்சில் வாங்கினான் அதன் பெயர் என்ன? என் முஞ்சிய பாக்குறான்.

தலய கொஞ்சம் பின்னாடி சாச்சு என்னங்குறேன். எதாச்சும் ஒரு கலர் சொல்லுங்கறான், என்ன கலர் நான் கேள்வி கேக்குறேன். உனக்கு கலர் தெரியாதா?, ம், ம்கூம், ங்கறேன்,

சிவப்பு கருப்பு மஞ்சள் நீலம் கருநீலம்…னு நீண்டுகிட்டே போகுது அவன் சொல்றான், நான் அவனையே பாத்துக்கிட்டு இருக்கேன்…

“ஏய் நேத்ரா என்னடி பண்ற, விளையாடறேன்மா, விளையாடறியா? யார்கூடடி…ஏய் ….அபிககூடதாம்மா… அபியா... நேத்ரா கண்ண மூழுச்சி பாருடி, நேத்ரா அம்மா சத்தம்போட்டு கூப்பிடறா, அம்மா மடியில நானிருக்கேன். அம்மா அழறா, எதுக்கு அழறா?...
மேலும் வாசிக்க

மௌனமாய் பேசுகிறேன் - (பாகம் - 4)

Posted by G J Thamilselvi On Monday, 16 April 2012 0 comments

     அம்மா அப்போ தொடக்கப்பள்ளி ஆசிரியைய இருந்தா...அக்கா படிக்க போய்ட்டா, சகாயமாதா மெட்ரிக்குலேஷன் ஸ்கூல். அம்மா வேலைக்கு போய்டுவா...நான் மட்டும் ஓட்டு வீட்டின் ஒட்டுத் திண்ணையில சாலை வெறிச்சபடி..., வெறிச்சோடிப்போன மண்சாலையில் பத்து மணிக்கு மேல் ஆடு மாடு கூட நடமாடாது. இது தினமும் நடக்கு காட்சி...எப்பொழுதாவது அத்திபுத்ததுபோல மாறிட்டாலும் மாறிடும்.

   அப்படி ஒரு நாள் மாலையில நா தனிச்சிருக்கேன், அந்த பால்வாடி டீச்சர் கொஞ்சம் அரிசியில் வெல்லம் தேங்காய் திருவிபோட்டு கொண்டு வந்து தந்தா, அம்மா யார் எதை கொடுத்தாலும் வாங்கக்கூடாது என்று தான் சொல்லியிருக்கா, ஆனால் அந்த டீச்சர் கொடுத்ததை நான் வாங்கிக்கிட்டேன். அவ என்னை கடந்து போனப்ப என்ன இந்த பக்கம்னு யாரோ கேட்க,அந்த நொண்டி பொண்ணுக்கு அரிசிகொடுக்க வந்தேன்னுஅவள் சொல்ல, நான் அரிசியை தூக்கி ரோட்டில் வீசி எறிஞ்சேன்.

     “நொண்டி பொண்ணுக்கு திமிர பாருண்ணுதான் சொன்னாங்க, என்னால என்னை நொண்டியா பார்க்க முடியல, அங்க இருந்தவங்களுக்கு என்னோட வேதனை புரியல. அத அவங்களால புரிஞ்சுக்கவும் முடியாது. அது யுகங்கள் கடந்த ஆழமான வலி. குழந்தைபிராயத்துக்கே உரித்தான எத்தனை துருதுருப்புகளை...சேட்டைகளை மனதிற்குள்ளேயே மரணித்துக்கொண்ட வலி.

   அப்பொழுதிருந்தே அந்த ஊரைப்பொறுத்த வரை என்னை திமிர் பிடிச்சவளாவே சித்தரிச்சுக்கிட்டாங்க, அதுக்கு நா என்ன பண்ணமுடியும், யாருக்கு என் கூட பேச பயமோ இல்லையோ, பால்வாடி டீச்சர் மட்டும் என்ன பாக்கும் போதெல்லாம் முகத்தை கோபமா ஒரு வெட்டு வெட்டி திருப்பிக்குவா, அதுக்கப்புறம் சொர்ப்பனந்தல்னு ஒரு ஊருக்கு    வந்துட்டோம் அம்மா என்ன அவ பள்ளிக்கூடத்துக்கு அழைச்சுட்டு போய் ஒன்னாம் வகுப்புல உட்கார்த்தி வச்சிட்டு அவ பாட்டுக்கு அவ வகுப்புக்கு போய்டுவா, ஒன்னாம் வகுப்பு டீச்சர் வருவா குண்டு பூசணி அஞ்சலா… “எல்லாரும் எழுந்து நின்னு இறைவணக்கம் சொல்லுங்க”

“நானுமா டீச்சர் எழுந்து நிக்கனும், என்னாலதான் எழுந்திரிக்க முடியாதே…”

     “அடச்சே உன்ன யார் சொன்னது, இந்த டீச்சருக்கு அறிவே இல்ல இந்த கருமத்தை வேற கூட்டிட்டுவந்து என் தலையில கட்டிடுச்சு”

“ஏய் நீங்க சொல்லுங்க” ன்னு படிக்கிற பசங்கள பாத்து கத்தினா,

குள்ள குள்ளனே
குண்டு வயிரனே
வெள்ளி கொம்பனே
விநாயகா சரணம்.

     இந்த வரிகள் தான் என் நெனப்புல நின்னது, இறை வணக்கம் முடிஞ்சதும், “எல்லாரும் எந்திரிச்சு அந்த வேப்பமரத்தடிக்கு வாங்க”

“டீச்சர் நானு”

     “நான் கேட்டது டீச்சர் காதுல விழுந்ததா இல்லையா? அவபாட்டுக்கு போய்ட்டாளே…இந்த அம்மா வேற காணும்”

     அழுகை வந்தது எனக்கு நான் அழுதுக்கிட்டே அந்த வகுப்பறையில உட்கார்ந்திருக்கேன்.....எப்படியோ அழுகை எனக்கு பழக்கமாயிடுச்சு, என் இயலாமையை காண்பிக்கும் அடையாளம் அழுகை.

     மெதுவாய் நகர்ந்து வாசற்படிக்கு பக்கத்துல வந்து உட்கார்ந்தா, சில காட்சிகள் கண்களுக்கு தெளிவாகும் வேப்பமரத்தடியில் ஒன்னாங்கிளாஸ் பசங்க உட்கார்ந்து அ ஆ இ என்று சப்தமாய், ஒரு இசைத்தன்மையோடு உரத்து சொல்லுவாங்க,

அந்த டீச்சர் ஒரு குச்சியை கையில் வச்சிக்கிட்டு இதுக்கும் அதுக்குமா நடந்துக்கிட்டே பசங்களுக்கு சொல்லிக்கொடுக்கும், என் பக்கம் திரும்பவே திரும்பாது.

     பெரிய ஆலமரம் ஒண்ணுல அணில் துள்ளி விளையாடும். ஆலமரத்துக்கு எதுத்தாப்பல பால்பாடி. ஆலமரத்துக்கு அடியில தொப்பை விநாயகர்.......என்னோட கிரேட் ப்ரண்ட், நான் விளையாடிய முதல் நண்பன் மிஸ்டர் தொப்ப மாமா...இப்பவும் அப்படி தான் கூப்பிடுறேன்.

அத விட்டு இந்தபக்கம் வந்தா, வாயிற்படிக்கு பக்கத்து அறை சமையற்கட்டு....குயிலி ஆயாம்மா...பசிக்குதாடி எதாவது சாப்பிடறியான்னு அவளுக்கு தெரிஞ்சபடி குசலம் விசாரிப்பா.

சாயந்திரம் 4 மணி ஆச்சுன்னா தேவேந்திரன் ஒரு அண்ணா ஐந்தாவது படிச்சிட்டுருந்தான், என்னை உப்பு மூட்டை தூக்கிக்கிட்டு போய் வீட்ல விடனும், கரெக்டா வந்துடுவான், அவன் தான் விநாயகர்கிட்ட என்னை கூட்டிட்டு போனவன். நெறய ஆலம்பழம் சேர்த்து விநாயகர் தலையில கொட்டி அர்ச்சனைங்கிற பேர்ல குண்டு வயிரனேன்னு பாட்டுபாடி...கொஞ்சமா சிரிச்சு சந்தோஷப்பட்டது அவனாலதான். விநாயகர் நல்ல கருப்பு, பெரிய தும்பிக்கை, பெரிய வயிறு, நான் பெரிய வயிற தடவி பாக்குறேன், விநாயகர் என்ன திட்டவே இல்ல, நொண்டி சொல்லல, நான் சிரிச்சேன்,
“எதுக்கு சிரிக்குற“

“விநாயகர் என்ன திட்டலடா அண்ணா“

“அவர் திட்டமாட்டார், நீ வேண்டிக்க உனக்கு கால் நல்லாயிடும்“
மேலும் வாசிக்க

காதலுடன் காதல் மனம் - 1

Posted by G J Thamilselvi On Saturday, 14 April 2012 2 commentsஉன் புன்னகை என்னை
ஈர்ப்பதை போல
வேறேதேனும் ஒன்றில்
என் மன லயிப்பில்லை.

உன் கண்களும் சேர்ந்தே
சிரிக்கிறது
உன் கருத்த உதடுகளுடன்.

உன் அடர்ந்த புருவத்தை
வருடுவதாய் எண்ணி
என் வளைந்த புருவத்தில்
ஒன்றை விரல்
உறவாட காண்கிறேன்.

முகமுகமாய் காணப்போகும்
முற்றுகையின் முத்திரை நாட்களுக்காய்
சித்திரம் வரைகிறது
எண்ணப் பதுமைகள்.

நாம் கைக்கோர்த்துக்கொள்ளும்
சிலிர்ப்பின் தீண்டலை
தினம் ஒரு அசைப்போட்டு
ஒத்திகை பார்க்கிறது காதல் மனம்.

வேண்டாம் உன் முத்தமென்று
வீம்பு பண்ணி
முத்தம் வாங்க,
பக்குவமாய் பதப்படுத்துகிறேன்
கன்னத்தை

பேசுவதற்கென்று ஒன்றுமே
இல்லாத போதும் கூட
தினம் கதை பேசி
உன் குரல் கேட்க ஆசிக்கிறேன்.

உன் அணைப்பில்
உன் நெஞ்சத்தில் முகம்
புதைத்து சொல்ல வேண்டிய
ஐ லவ் யூக்கள்
தனிமையில்
அவரை கொடிகளின் பசுமையில்
வெட்கமுடன் சொல்லி பார்த்து
விரையமாகிறது.

               
மேலும் வாசிக்க

மௌனமாய் பேசுகிறேன் - (பாகம் - 3)

Posted by G J Thamilselvi On 0 comments

     எனக்குரிய முடியாதுகள் ஒரு பெரிய பட்டியலா  நீண்டுக்கிட்டே போகும், நான் எல்லா விஷயத்தையுமே முடியாதுன்னு தான் சிந்தனை பண்றேன்னு ரொம்ப நாளா நான் கண்டுபிடிக்கவே இல்ல.
     என் சிந்தன ஓட்டம் எனக்கு பழக்கமாகி என் சிந்தனய  நான்னு நெனச்சுக்கிட்டேன் அவ்வளவுதான்.

     நடக்க முடியாது......எனக்குண்டான முடியாததுகளின் பட்டியல்ல முதல்ல இருக்குறது சுமார் ஒரு முப்பத்து மூன்று வருஷத்துக்கு முன்னாடி நான் முட்டிப்போட்டுட்டு தரையில கை ஊன்றிதாங்க நடந்தேன்......என்ன இது பிரமாதம் எல்லா குழந்தையும் இப்படி தான் நடக்கும்....இப்படி நீங்க சொன்னாலும்...எனக்கு எட்டு வயது ஆகும் வரை ஒரு குழந்தையை போல தவழ்ந்து தான் போனேன்.

   வளர்ந்த பிள்ளையை தூக்கிக்கிட்டு போக முடியலன்னு , எங்கம்மா சொந்தக்காரங்க வீடு விருந்து பொழுது போக்குன்னு எங்க போறதையும் நிறுத்திட்டா......... கிட்ட தட்ட 26 வருடங்களுக்குப் பிறகு நண்பன் படம் பார்க்க தான் வலுக்கட்டாயமா அவ அழைச்சுட்டு போனேன்.

   சின்ன வயசுல எனக்கு விளையாட்டு ப்ரண்டுன்னு யாருமில்லிங்க, என் வயசு பசங்கள்ளாம் கில்லி கோலி நொண்டி கண்ணாமூச்சின்னு ஏதேதோ விளையாடினாங்க.......நானும் விளையாட வரேன்னு சொன்னதுக்கு நொண்டி நொண்டி விளையாட வரியான்னு கேலி பேசினதால விளையாட்டே எனக்கு பிடிக்காம போச்சுங்க...
   நான் அவர்களை போல் இருக்கவில்லை, அவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தப்பட்டேன். இது இயற்கையா நிகழ்ந்ததா? செயற்க்கையா அவர்களாகவே பாகுபடுத்திக்கிட்டதான்னு எனக்கு தெரியல.

   அவங்கள வேடிக்க பாக்குற இடத்துல கூட என்ன வச்சு பாக்க அவங்களால முடியல.

   படிப்புனு பார்த்தா...... நான் அப்ப இருந்தது ஒரு கிராமத்துல...கிருஷ்ணாபுரம் தான் அந்த ஊரோட பேரு பெயர். எல்லா ஊர்லயும் பால்வாடி இருக்குமில்ல, என்னையும் பால்வாடியில்தான் என் அப்பா கொண்டுபோய் சேர்த்துவிட்டாங்க...பால்வாடி டீச்சர் எங்கப்பாவோட இரண்டாவது பொண்டாட்டி...அந்தம்மாவ பாக்கும் போதெல்லாம் ஓரே கடுப்பு தான், அதுக்கு மேல என்ன மாதிரி குட்டி பிசாசுங்க ஓடி விளையாண்டத பார்த்து நேத்ரா குட்டிபிசாசுக்கு பயங்கர அழுகாச்சி
   அந்த பசங்க என்ன வித்தியாசமா ஒரு ஜந்துவ பாக்குற மாதிரி பாத்தாங்க, என்னால அவங்கக்கூட ஓடி விளையாட முடியல, அவங்களால என்னோட உட்காந்து விளையாட முடியல, எந்த குழந்தையாலங்க ஒரு இடத்துல சும்மா உட்கார முடியும்? நீங்க தான் சொல்லுங்களேன்.

   அதுக்கப்புறம் பால்வாடியா.......... போங்கடி நீங்களுமாச்சு உங்க படிப்புமாச்சு..........ன்னு வீட்டுக்கு வந்துட்டேன். எங்கப்பா பொத்து பொத்துன்னு பொத்தி எடுத்துட்டார்.

     பெரியங்களோட இருந்து நானும் பெரியங்க போல பேசினங்க,
எங்கப்பாவ பாத்து “துரைக்கு பொண்டாட்டிய பாக்காம இருக்க முடியலியோ என்ன சாக்கு வச்சு பாக்கப்போறீங்களோன்னு கேட்டேன்“ எங்கம்மாவும் அப்பாவும் சண்டப்போடும் போது பேசினத நானும் சொன்னேன், அதுக்கும் ஒததான் சூம்பிபோன என் கால பிடிச்சு தலைகீழா தொங்க விட்டு அடிக்குறாரு...
     எங்கம்மா வந்து காப்பத்துனதால தப்பிச்சன், இல்லினா இப்படி உங்களுக்கு என் கதைய சொல்ல நேத்ரா இருந்திருக்க மாட்டேங்க.
மேலும் வாசிக்க

மௌனமாய் பேசுகிறேன் ( பாகம் - 2)

Posted by G J Thamilselvi On Tuesday, 10 April 2012 1 comments

வார்த்தைகள் தான் மனுஷன ஆட்டிப்படைக்குதுன்னு சொன்னா நீங்களோ அல்லது நானோ ஒத்துக்கப் போறதில்ல. கடந்து வந்த பாதையில வெறும் வார்த்தைய வச்சு ஒரு மண்ணும் கிழிக்க முடியாதுன்னு தான் நான் நெனச்சேன். ஊனமுற்றோர் என்ற வார்த்தை எதிர்மறை உணர்வ தோற்றுவிக்குறத பல நேரங்களில் நான் உணர்ந்திருக்கேன்.

     ஊனம்ங்கறதே மனச சங்கடப்படுத்துற ஒண்ணா இருந்துச்சு ஏன்னா நேத்ராவாகிய நான் பிறந்த பொழுது அழகும் ஆரோக்கியமும் உடைய குட்டி தேவதையா இருந்திருக்கேன், எங்க அம்மாக்கிட்ட இருந்து என்னை வாங்கி கொஞ்சி மகிழாதவங்களே இல்லன்னு சொல்வாங்க... குழந்தன்னா எல்லாரும் பிரியமா கொஞ்ச தான் செய்வாங்க, அதிலயும் அழகான குழந்தைன்னா... தத்தி நடக்குற வயசுல போலியோவால பாதிக்கப்பட்ட உடன என்ன யாராவது தூக்கி கொஞ்சினாங்களா? ன்னு எங்கம்மாக்கிட்ட கேட்டேன், அவ சாதிச்ச மௌனம் எனக்கு எத்தனையோ விஷயத்தை புரிய வச்சது, ஆரோக்கியம் தான் அழகுன்னு என் சிநேகிதகாரன் சொன்னத நெனச்சு பார்த்தேன். நிஜம் தான ஆரோக்கியம் இல்லாம போன யார் சீந்தப்போற, ஆரோக்கியம் இருக்குற இடத்துலதான அழகும் இருக்கும்.

      ஆரோக்கியம் கெட்டுபோன நோஞ்சான் குழந்தைய யாராவது தூக்கி கொஞ்சப்போறங்களா என்ன?

     எனக்குள் இருந்த ஆரோக்கியம் போனபின்னாடி நான் யாரையும் என் பக்கம் ஈர்த்து இருக்கமாட்டேன்...அதுக்கு பின்னாடி தான் நான் தனிமைபடுத்தப்பட்டிருப்பேன்னு நினைக்குறேன். எங்கம்மா இயல்பாகவே எதிர்மறையா யோசிக்கிறவ... என்ன கவனிச்சு எனக்கு பீ மூத்திரம் அள்ளி ஒரு கட்டத்துல சளிச்சு போய்ட்டா, அவள எப்படி குத்தம் சொல்றது... பெத்த நாலு பிள்ளயில ஒண்ண மட்டுமே பாத்துட்டிருந்தா மத்த மூணும் என்னாவறது, கடவுள்ங்கிற வார்த்தைக்கு படைச்சவன்னு ஒரு அர்த்தம் இருந்தா எனக்கு கடவுள் என்ன பெத்தவதான்....

      அதுக்கு பிறகுநான் எதிர்மறை உணர்வுகளையே உணர்ந்து பழக்கப்பட்டுபோனதால..........எனக்குள்ளும் அதிகபடியான முடியாதுகள் வந்து ஒட்டிக்கிச்சி. இப்ப நான் சொல்ல வர்றது என்னன்னா, எனக்கு நோய் வந்ததோ, எனக்கு ஆரோக்கியம் கெட்டதோ, நான் ஒரு எதிர்மறை எண்ணவாதியா ஆனதுக்கு காரணமில்லைங்க, மத்தவங்க என்னோட நிலமய பார்த்து என்கிட்ட பேசின பேச்சுகள் தான் முடியாதுகள் என்கிட்ட வந்து ஆசையா காதலோட ஒட்டிக்கிட்டதுக்கு காரணம்.

 உங்கள பத்தி மத்தவங்க என்ன நெனக்கிறாங்கங்குறது முக்கியமில்ல நீங்க உங்கள பத்தி என்ன நெனைக்கிறீங்கங்குறதுதான் முக்கியமான விஷயம்...........உங்கள பத்தி நீங்களே கொஞ்சம் உசரத்துல வச்சு பாருங்க மத்தவங்களும் உங்கள அப்படியே நடத்த ஆரம்பிப்பாங்க........உங்கள பத்தி மத்தவங்க சொல்ற எதையும் உங்களுக்கு எல்லையா வச்சுக்காதீங்க......... இது நான் அனுபவிச்சு சொல்ற உண்மை.
மேலும் வாசிக்க

மௌனமாய் பேசுகிறேன் ( பாகம் - 1)

Posted by G J Thamilselvi On Sunday, 8 April 2012 0 comments

     மௌனமாய் எப்படி பேசுவது என்று நீங்கள் கேட்பது என் செவியை தீண்டுகிறது. உங்களோடு நான் மௌனமாகதான் பேசப்போகிறேன். என் உதடுகள் அசையாமல், என் குரல் காற்றினால் சப்தித்து உங்கள் செவி தீண்டாமல், என் எண்ணங்கள் நான் எழுதும் எழுத்துக்களின் மூலமாக சப்தமே இல்லாமல் உங்கள் மனதை சந்திக்க வருகிறது என்று சொல்ல ஆசைதான். 20 ஹேர்ட்ஸ் முதல் 20,000 ஹேர்ட்ஸ் வரை உள்ள ஒலி அலைகளை மனிதனால் கேட்கமுடியும். 20ஹேர்ட்ஸ்க்கும் குறைவான ஒலி அலைகளை மனிதனால் கேட்க முடியாது என்பதற்காக ஒலி (சப்தம்) அங்கே இல்லை என்று சொல்வது உண்மையாகாது. நான் எழுதுகின்ற இந்த வரியின் போதுதான் நான் உள்வாங்கும் எண்ணத்திற்கும், என்னிடத்திலிருந்து வெளியேறும் எண்ணத்திற்கும் கூட ஒலி அலைகள் இருக்க கூடும் என்ற எண்ணம் என்னுள் உதயமாகியது.

      மௌனமாய் பேசுகிறேன் தலைப்பைப்பார்த்து, கவிதையோ, கதையோ, என்று வந்தால் இது என்ன கட்டுரையாக நீள்கிறதே……………………

      நான் எழுதப்போவது கதையா ?. இல்லை, கவிதையா?. பச் அதுவும் இல்லை. வேறு என்னதான் பெண்ணே இம்சிக்காமல், போரடிக்காமல் விரைவாக சொல், என்று நீங்கள் அதட்டினால் நான் அதிர்ந்து போகமாட்டேனா?, பாவம் நான் சின்ன குழந்தை இந்த எழுத்திற்குள் நான் மட்டுமே கதாநாயகி, நான் அறிமுகப்படுத்தும் அல்லது எனக்கு அறிமுகமாகும் நபர்களை துணை நாயகர்கள் என்றோ, நாயகிகள் என்றோ அழைத்துக்கொள்ளலாம். (போனால் போகட்டும் உங்களையும் சேர்த்து தான் சொல்கிறேன்) (ஹலோ இப்படி அதிகப்படியாய்  பேசக்கூடாது. நான் அறிமுகப்படுத்துபவர்கள் சம்பவத்தின் நாயகர்கள் மட்டும் தான் என் நாயகனை நான் சந்தித்தேன்……………. அது அவ்வளவு சுவராசியமான நிகழ்வு, அதை எழுத வேண்டும் என்றால்….ஒவ்வொரு எழுத்தும் என்னை முதலில் எழுது என்று போட்டிப்போட்டுக்கொண்டு முன் நிற்கும், கொஞ்சகாலம் என் எழுத்தில் இருந்து மட்டும் அவனுக்கு விடுதலை அளித்துவிடலாம்……. என் இதயக்கூட்டிலும் என் சிந்தனை மண்டலத்திலும் வந்து அட்டையாய் ஒட்டிக்கொண்ட அவனை விட்டு விட மனம் எப்பொழுதும் எத்தனிக்கவில்லை. என்னை சுற்றி அனுதினம் நடக்கும் சம்பங்களை தான் உங்களோடு பகிர போகிறேன். ஒவ்வொரு நிகழ்வின் போதும் எனக்குள் உண்டாகும் எதிர்மறை எண்ணங்களை நான் எப்படி வெற்றிக்கொள்கிறேன் என்று கண்டு நீங்களும் என்னைப்பின்பற்றுங்கள் என்று நிச்சயமாக சொல்லப்பொவதில்லை. உங்களுக்கு முன்மாதிரியாகவோ, உங்களுக்கு போதனை தரக்கூடியவளாகவோ உங்களிடத்தில் நான் வரவில்லை. என் உணர்வுகளை எழுத்தில் வடித்து, உங்கள் நட்பாய் உங்களை சந்திக்க வரும் நான் நேத்ரா…………அதுதான் என்னுடைய பெயர்…………………….நேத்ரா என்ற பெயருக்கு ஏற்ப அழகான ஆரோக்கியமான கட்டிளம் பெண்ணை நீங்கள் கற்பனை செய்தீர்களானால் நீங்கள் ஏமாந்தீர்கள். நேத்ராவாகிய நான் ஒரு மாற்று திறனாளி…… கலைஞர் செய்த செயல்களிலேயே நான் வெகுவாய் மகிழ்ந்தது ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றி, மாற்று திறனாளிகள் என்று புதுவார்த்தையை கொண்டுவந்து நடைமுறையை புதுப்பிக்கச்செய்ததினால் தான்……
மேலும் வாசிக்க

ஹாய் டியர்ஸ்,

உங்களோடு என் வாழ்வின் நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ளவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். எம் பேரு.......... (கொஞ்சம் நிறுத்துங்கள், எம் பேரு மீனாகுமாரி என் ஊரு கன்னியாகுமாரி, என்று நீங்கள் சன்னமாய் முனுமுனுப்பது, என் செவிகளில் சன்னமாய் ஒலிக்கிறது.)

அய்யோ ! பாருங்கள் உங்கள் பாடல் என்னை திசை திருப்புகிறது.

சரி கொஞ்சம் அமைதியாய் இருந்தால் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.

நான் யாழினி, என் பெற்றோர் எனக்கு வைத்த அருமையான பெயர். யாழைப்போன்று இனிமையாக வாழ்வேன் என்ற எண்ணத்தோடு வைத்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

யாழினி…!

என்னை நான் வர்ணித்திக்கொள்வதில் ஒரு கிக் இருக்கவே செய்கிறது. சராசரிக்கும் கொஞ்சம் குறைவான உயரம், கொஞ்சம் சாயலில் ஷாலினியை ஒத்த முகவெட்டு, நீண்டகருங்கூந்தல், சரி ஒருமுறைபார்க்கலாம் இன்று இளைஞர்களை திரும்ப வைக்கும் அழகு. (திரும்பி பார்த்தவர்கள் தூக்கம் வராமல் தவித்தால் அதற்கு பொறுப்பு நான் அல்ல).

நகரமும் அல்லாமல், கிராமமும் அல்லாமல், இரண்டும் சேர்ந்த கலவையான ஒரு நகரத்தில் வசிக்கிறேன் நான். அம்மா ரிட்டயர்ட் டீச்சர், அப்பா நோ மோர். நான் என் பெற்றோருக்கு ஒரே மகள். இப்படி உங்களோடு பேசிக்கொண்டே, குளித்து உடைமாற்றி, என் அலுவலகத்திற்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு சென்றுக்கொண்டிருக்கிறேன். மூன்றாவது தளத்தில் என் குடியிருப்பு, அம்மாவின் இருப்புகள் அப்பாவின் மருத்துவ செலவில் கரைந்து போனதால், சேமிப்பு ஒன்றும் அதிகமாக இல்லை. நான் அதைப்பற்றி வெகுவாக கவலைப்படுவதில்லை. நான் படிகளில் இரண்டாவது தளத்தைக்கடந்த போது, அம்மாவின் குரல் சன்னமாய் ஒலிக்கிறது. “இந்த பொண்ணு சாப்பட்டை கொண்டுபோகமல் போகிறாளே, வயத்துக்கு அல்சர் வந்தா என்ன பண்றது, டீ யாழினி கொஞ்சம் நில்லேன், வயசாயிடுச்சில்லயா, நடக்கமுடியலடி...........”

சற்று தாமதித்தேன், அவள் குரலுக்கு ஒரு வசீகரம் உண்டு, அந்த குரலில் தாய்மை வழிவதால், என்று எண்ணுகிறேன். சாப்பாடு டப்பாவை தந்தபடி, கொஞ்சம் யோசிடி ரங்கநாதன் மாமா தந்தாரே அந்த வரன் உனக்கு பொருந்தும் என்று எண்ணுகிறேன், போட்டோ பைல வச்சிருக்கேன், அப்புறமா பாரு, என்று கெஞ்சலும் கொஞ்சலுமாய் கூறினாள்.

சரிம்மா என்று தலையாட்டி வைத்தேன், இன்றும் சற்று நேரம் அவளோடு நின்றால், வயசான காலத்துல ஏன்டி இப்படி கஷ்டப்படுத்துற, காலாகாலத்துல கலியாணம் பண்ணி, ஒரு பேரனோ பேத்தியோ, பெத்துக்கொடுத்த அத கொஞ்சின சந்தோஷத்தோடு போய் சேருவேனில்ல........என்று அனுதின பல்லவி பாட ஆரம்பித்துவிடுவாள்.

தெருவை கடந்து, பிரதான சாலையில் கலந்து பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க துவங்கினேன். சர்ர்ர்ரக்கென்று கடந்து போகும் வாகனங்களின் ஹாரன் ஒலியும், காலைக்கே உரித்தான குளுமையும், மிதமான வெம்மையும் இதமான உணர்வை மனதிற்குள் விதைத்தது.

பேருந்தில் அவ்வளவாக கூட்டமில்லை. ஆனாலும் அலுவலகத்தை நெருங்குவதற்குள்ளாக வேர்த்து ஒழுகும். தீப்பெட்டிக்குள் அடுக்கிவைக்கப்படும் தீக்குச்சிப்போல ஏம்பா, உள்ளே போ, போ உள்ளே என்று அதட்டலோடு நடத்துனர்கள் அடுக்கப்படுவர்கள். உங்களுகே தெரியுமே நீங்கள் ஒன்றும் இது போன்ற நிகழ்விற்கு விதிவிலக்கு அல்லவே !

நாசியை தொட்டுபோன வியர்வை, சென்ட், பவுடர்பூச்சு, மெதுவடை மல்லிகை பூ, என்று கலவையான மணங்களை உள்வாங்கியபடி நகர்ந்து இருவர் அமரும் சன்னலோர இருக்கையில் அமர்ந்தேன்.

அக்கா மெதுவடை, அம்மா மெதுவடை, மெதுவடை மெதுவடை, என்ற வடை விற்கும் சிறுவனின் குரல் என்னை ஏனோ சங்கடப்படுத்தியது. படிக்கும் வயதில் அவனுக்கு என்ன கஷ்டமோ, ஆலோசனை சொல்வது கடினம், அதை செயல்படுத்துவது தான் கடினம். இந்த வேலையை விட்டு படி என்று சொல்ல எழுந்த ஆவலை எனக்குள்ளே அடக்கிக்கொண்டேன். தினமும் ஒரே பேருந்தில் பயணிப்பதால் அந்த சிறுவன் நன்கு பரிச்சயமானான். குட்மார்னிங் கா, என்று சிரித்தவனை பார்த்து கையசைத்தேன்.

அந்த கையசைப்பு எனக்கு முன்பு நின்றிருந்தவனின் தோளில் சாய்ந்திருந்த குழந்தையின் கவனத்தை என்பால் திருப்பியது. அழகாய் துரு துரு கண்களோடு, சிவந்த இதழ்கள் குவிந்தும் குவியாமல் சிரித்த குழந்தையின் முகம் மலர்ந்து என்பார் தாவியது.

அப்பொழுதுதான் கவனித்தேன், ஒரு கையில் மாட்டிருந்த பேக்கின் கனமும் குழந்தையின் தாவலும், அவனை நிற்கவே தடுமாறச்செய்தது. என் பக்கத்து இருக்கை காலியாக இருந்தும் அவன் அமராமல் தள்ளி நின்றது, எனக்கு கொஞ்சம் விந்தையாக கூட இருந்தது. ஆண்களில் இப்படிப்பட்டவர்களும், இருக்கிறார்களா என்ற என் எண்ணத்தை அழித்து, ஒரு வேளை கவனிக்காதிருக்கக் கூடும் என்று எண்ணிக்கொண்டேன்.

சார், சார் , என்று இருமுறை அழைத்தும் திரும்பாததால், நான் முகத்தை திருப்பி ஜன்னல் பக்கமாய் வேடிக்கைப் பார்க்கலானேன். அந்த குழந்தை மழலை ஓசை எழுப்பி என்னை கவர முற்பட்டது. அந்த செயல் அம்மாவின் பேரன் பெயர்த்தி கூற்றை நினைவுப்படுத்தவே, நான்அந்த மணமகனின் புகைப்படத்தைப் பார்த்தால் என்ன” ? என்று எண்ணினேன்.
மேலும் வாசிக்க