வலியின் சுகம்

Posted by G J Thamilselvi On Monday, 26 March 2012 1 comments
உன்னை கண்ட தினம்
உன் பார்வையில் நான்
லயிக்காமல் இருந்திருந்தால்...

உன் குரல் வந்த திசை எல்லாம்
என் விழியும் உனை தழுவி
சுகிக்காமல் இருந்திருந்தால்...

கூட்ட நெரிசலில் எதார்த்தமாய்
தீண்டுவதாய் எண்ணி
நம் விரல்கள் பிணையாதிருந்திருந்தால்...

சந்தர்ப்பவசமாய் சந்திப்பதாகச் சொல்லி
நாம் இருவர்
சந்திக்காமலேயே இருந்திருந்தால்...

தகவலுக்காகவென தன்னிச்சையாய்
அலைபேசி எண்கள் நமக்கு
அறிமுகமாகாமலேயே இருந்திருந்தால்...

மணிக்கணக்காய் பேசி
மணிமுட்கள் நகர்ந்த தடம்
உணராத நாட்கள் வராமலேயே இருந்திருந்தால்...

காதலை சொல்லாமல்
காதல் வளர்த்த வாழ்வொன்றை
வாழாதே இருந்திருந்தால்...

இன்று உன் பிரிவு தந்த
வலியின் சுகம் சுகிக்காமலேயே
இறந்திருப்பேன்.

1 comment:

  1. சொல்லாமல் வளர்த்த உறவும் தரும் ஒரு சுகம்...அதன் சுகம் சற்றே வித்தயாசம் என அருமையாய் சொல்லியிருக்கின்றீர்கள்..பாராட்டுக்கள்!

    ReplyDelete