நாளைய விதி செய்வாய்

Posted by G J Thamilselvi On Sunday, 25 March 2012 1 comments

படிக்கத் தெரிந்துவிட்டுதா உனக்கு?
எழுத்தின் வடிவங்கள்
உருபெற்றுவிட்டதா,
உன் மழலை கைகளுக்கு?
தேடிப்பிடித்து தினம் ஒரு புத்தகமாவது
படித்து விடு தளிரே நீ.

வீரத்தாலாட்டுப்பாடி,
வித விதமாய் கதை சொல்லி,
வெற்றியாளனாய் உன்னை வரித்தெடுக்க,
பாட்டியோ தாயோ….
பகுத்தறிவு புகட்டி பகலவனாய்
வார்த்தெடுக்க,
ஆசானோ, தகப்பனோ,
உடனிக்கப் போவதில்லை
இப்புது யுகத்தில்.

கூட்டுக்குடும்பங்கள் கூட்டுறவற்று,
தனிமங்களாய் தறிக்கெட்டுப்போன
காலத்தின் காட்சி இது.
ஆட்சிசெய்யும் அரசாங்கம்
கஜானாவை உயிரற்ற காகிதங்களால்
நிரப்பிக்கொள்ளும் காலமிது.
மதுவை மன மகிழ்வோடு
கடைப்பரப்பும்,
மழுங்கடிக்கப்பட்ட மூளைகளின்,
உயிர் சுட சுட மரணிப்பதில்
அக்கறை இல்லை அதற்கு.

எதிர்கால சமுதாயம்
எப்படி போனால்தான் என்ன?
இப்படைக்கு தளபதியாய்
வழிகாட்டும் குருட்டு
ராஜாவாய் என்னை
முடிச்சூட்டிக்கொண்டால் போதும்,
என்றே மார்தட்டும்,
வரட்டு கௌரவத்தில்,
குறைச்சல் இல்லை தலைமைகளுக்கு.
கண்ணகியின் கற்போ
மாதவியின் சிறப்போ
சிற்றூர்தியிலோவேனும் உனை வந்து
சீண்டிப்பார்க்கப் போவதில்லை.

சீதையோ, ராமனோ,
கண்ணனின் கீதையோ
திருக்குறளோ, திருக்குரானோ,
வேதாகமோ….உலகத்து மொழிப்பெயர்ப்புகளோ,
உன்னிடத்தில் உறவாட
நொடிப்பொழுதேனும் வந்துபோவதில்லை.
நீ படிக்கும் கல்வி முறை,
காகிதங்களை சேர்த்துக்கொள்ள
காட்டுமிராண்டியாய்,
கடு கடுப்போடு உழைக்க
உதவிடக்கூடும் ஒரு வேளை.
ஒழுக்கமோ, காதலோ
நட்மோ, நேசமோ…………
எந்திரம் கொடுக்குமா உனக்கு?.

தந்திரமாய் தப்பித்துக்கொள்
நீ காணாமல் போகும் அந்த
தருணத்திலேனும்…
மனதை அகண்டமாக்கு,
அண்டத்திற்குள் மாத்திரமல்ல
பிரபஞ்சவெளியின் முடிவில்லா
எல்லைகள் கடந்து
உன் இலக்கை தேடு.

புதுவரிகளை உடையதாய்
உன் முகவரிகள் இருக்கட்டும்.
சீறி புறப்படு சீக்கிரமாய்
புதியதொரு உலகு செய்ய
அங்கு மனிதனுக்காக எல்லாமிருக்கட்டும்
காகிதங்கள் மனிதனின்
காலடியில் முடங்கட்டும்.
நேசமுடன் நேர்த்தியாய்
புது உலகு உருவாக்க
சீக்கிரம் புறப்படு
சிந்தனை சிற்பியாய் நீயும்.
பின்தொடரும் உன்னை
நாளைய சமுதாயம்.

1 comment:

  1. பொதுவில், பெரும்பாளான ஆட்சியாளர்களின்/ஆளவிரும்புவோரின் எண்ணம் இப்படித்தான் என்பதை நன்றாகவே புரிந்துகொண்டுள்ளீர்கள்..

    தலமையேற்போருக்கும் கஜானா நிரம்பவேண்டுமென்பது தவிர மனித நேயம் அற்ற சூழலை கவியால் நன்றாகவே படம் பிடித்திருக்கின்றீர்கள்..வாழ்த்துக்கள்.

    ReplyDelete