வலியின் சுகம்

Posted by G J Thamilselvi On Monday, 26 March 2012 1 comments
உன்னை கண்ட தினம்
உன் பார்வையில் நான்
லயிக்காமல் இருந்திருந்தால்...

உன் குரல் வந்த திசை எல்லாம்
என் விழியும் உனை தழுவி
சுகிக்காமல் இருந்திருந்தால்...

கூட்ட நெரிசலில் எதார்த்தமாய்
தீண்டுவதாய் எண்ணி
நம் விரல்கள் பிணையாதிருந்திருந்தால்...

சந்தர்ப்பவசமாய் சந்திப்பதாகச் சொல்லி
நாம் இருவர்
சந்திக்காமலேயே இருந்திருந்தால்...

தகவலுக்காகவென தன்னிச்சையாய்
அலைபேசி எண்கள் நமக்கு
அறிமுகமாகாமலேயே இருந்திருந்தால்...

மணிக்கணக்காய் பேசி
மணிமுட்கள் நகர்ந்த தடம்
உணராத நாட்கள் வராமலேயே இருந்திருந்தால்...

காதலை சொல்லாமல்
காதல் வளர்த்த வாழ்வொன்றை
வாழாதே இருந்திருந்தால்...

இன்று உன் பிரிவு தந்த
வலியின் சுகம் சுகிக்காமலேயே
இறந்திருப்பேன்.
மேலும் வாசிக்க

நாளைய விதி செய்வாய்

Posted by G J Thamilselvi On Sunday, 25 March 2012 1 comments

படிக்கத் தெரிந்துவிட்டுதா உனக்கு?
எழுத்தின் வடிவங்கள்
உருபெற்றுவிட்டதா,
உன் மழலை கைகளுக்கு?
தேடிப்பிடித்து தினம் ஒரு புத்தகமாவது
படித்து விடு தளிரே நீ.

வீரத்தாலாட்டுப்பாடி,
வித விதமாய் கதை சொல்லி,
வெற்றியாளனாய் உன்னை வரித்தெடுக்க,
பாட்டியோ தாயோ….
பகுத்தறிவு புகட்டி பகலவனாய்
வார்த்தெடுக்க,
ஆசானோ, தகப்பனோ,
உடனிக்கப் போவதில்லை
இப்புது யுகத்தில்.

கூட்டுக்குடும்பங்கள் கூட்டுறவற்று,
தனிமங்களாய் தறிக்கெட்டுப்போன
காலத்தின் காட்சி இது.
ஆட்சிசெய்யும் அரசாங்கம்
கஜானாவை உயிரற்ற காகிதங்களால்
நிரப்பிக்கொள்ளும் காலமிது.
மதுவை மன மகிழ்வோடு
கடைப்பரப்பும்,
மழுங்கடிக்கப்பட்ட மூளைகளின்,
உயிர் சுட சுட மரணிப்பதில்
அக்கறை இல்லை அதற்கு.

எதிர்கால சமுதாயம்
எப்படி போனால்தான் என்ன?
இப்படைக்கு தளபதியாய்
வழிகாட்டும் குருட்டு
ராஜாவாய் என்னை
முடிச்சூட்டிக்கொண்டால் போதும்,
என்றே மார்தட்டும்,
வரட்டு கௌரவத்தில்,
குறைச்சல் இல்லை தலைமைகளுக்கு.
கண்ணகியின் கற்போ
மாதவியின் சிறப்போ
சிற்றூர்தியிலோவேனும் உனை வந்து
சீண்டிப்பார்க்கப் போவதில்லை.

சீதையோ, ராமனோ,
கண்ணனின் கீதையோ
திருக்குறளோ, திருக்குரானோ,
வேதாகமோ….உலகத்து மொழிப்பெயர்ப்புகளோ,
உன்னிடத்தில் உறவாட
நொடிப்பொழுதேனும் வந்துபோவதில்லை.
நீ படிக்கும் கல்வி முறை,
காகிதங்களை சேர்த்துக்கொள்ள
காட்டுமிராண்டியாய்,
கடு கடுப்போடு உழைக்க
உதவிடக்கூடும் ஒரு வேளை.
ஒழுக்கமோ, காதலோ
நட்மோ, நேசமோ…………
எந்திரம் கொடுக்குமா உனக்கு?.

தந்திரமாய் தப்பித்துக்கொள்
நீ காணாமல் போகும் அந்த
தருணத்திலேனும்…
மனதை அகண்டமாக்கு,
அண்டத்திற்குள் மாத்திரமல்ல
பிரபஞ்சவெளியின் முடிவில்லா
எல்லைகள் கடந்து
உன் இலக்கை தேடு.

புதுவரிகளை உடையதாய்
உன் முகவரிகள் இருக்கட்டும்.
சீறி புறப்படு சீக்கிரமாய்
புதியதொரு உலகு செய்ய
அங்கு மனிதனுக்காக எல்லாமிருக்கட்டும்
காகிதங்கள் மனிதனின்
காலடியில் முடங்கட்டும்.
நேசமுடன் நேர்த்தியாய்
புது உலகு உருவாக்க
சீக்கிரம் புறப்படு
சிந்தனை சிற்பியாய் நீயும்.
பின்தொடரும் உன்னை
நாளைய சமுதாயம்.
மேலும் வாசிக்க

நான் ரசிகை

Posted by G J Thamilselvi On Monday, 12 March 2012 3 comments

நான் ரசிகை
கொஞ்சும் அந்த அழகு நிலா பாவைக்கு
உள்ளத்தை தோற்ற நான் ரசிகை
சுட்டும் எனை சுட்டும் நித்தம்
எனை கண்டு கண்சிமிட்டும்
நட்சத்திர கூட்டத்திற்கு நான் ரசிகை
விரைவாய் விரைந்தோடும்
நீல கடல் தேடும்
மும்மாரி பொழிந்துவிட
விண்மலை தேடி மோதும்
விண்முகிலினங்களுக்கு நான் ரசிகை
அழகாய் சிரிக்கும்
அனபுமொழி விழி பேசும்
அன்னையுடன் உறவாடும்
தந்தையின்றி வாடும் மழலைப்பிள்ளைகட்டு
நான் ரசிகை
கண்ணோரம் கனவுகளை தேக்கி
நெஞ்சத்தின் ராஜாவை நோக்கி
கனவுலக காட்சிகளை
நிஜவுலகில் பிரதியிடும் கன்னியருக்கு
நான் ரசிகை
வண்டின கூட்டமாய்
வட்டமிடும் காளைகள்
வாலிப எழுச்சியில் செய்து போகும் தவறுகள்
கண்டும் காணமல் பொறுத்துபோகும்
பெற்றோர் என்றோ ஒரு நாள் கண்டிக்கும் காட்சிக்கு
நித்தம் கண்வைத்து காட்சிகள் தேடிடும்
நான் ரசிகை
வாலிபமும் வயோதிகமும் போட்டியிட்டு
வயோதிக உடலுக்குள் வாலிப ஊக்கத்தைகண்ட
நான் ரசிகை
ரசிக்க மட்டும் பிறந்ததால்
மாறிவிடும் பருவங்களை
மிக மிக அதிசயித்து
ரசித்து வைக்கும் நான்
ரசிகை மட்டுமே
சொச்சமாய் தொக்கி நிற்கும்
ஏக்கங்களை புரட்ட மனமில்லாமல்
அவ்வப்போது கல்லறைக்குள்
பதியனிடும் நான் ரசிகை
ரசிகை மட்டுமே.
மேலும் வாசிக்க

வாழ்வியல் வெற்றிடம்

Posted by G J Thamilselvi On Tuesday, 6 March 2012 3 comments

நம் அறிமுகத்தில் பிறந்த ஈர்ப்பு
நம் உரையாடலில் இசைந்த களிப்பு
நாம் இருவராய் இல்லாமல்
ஓருயிராய் ஆன அழகான நொடி
வந்து போன குட்டி பிணக்குகளில்
கொஞ்சமாய் விழுந்த இடைவெளி...
தீர்க்க முனைந்தும் பார்க்க ஆசித்தும்
பேச தவியாய் தவித்தும் கூட
இணையான தோழியாய் ஒட்டிக்கொண்ட தயக்கம்
இன்றாவது அழைப்பாயா?,
தொலைபேசியை கையிலணைத்தபடி
நெஞ்சை நெருடும் எதிர்பார்ப்பு
நொடிகள் நீடிக்க, காலம் அதை நீட்டிக்க
வராத அழைப்பிற்காய் கலங்கிடும் கண்கள்
துடித்திடும் ஆன்மா........
எல்லாமே சுகம் தான் ஆனாலும்கூட
நட்பில் நீ இல்லாத தருணங்கள் மட்டும்
வாழ்வியல் வெற்றிடமாய்.

மேலும் வாசிக்க

இன்று என் பிறந்தநாள்

Posted by G J Thamilselvi On Saturday, 3 March 2012 4 comments

இன்று என் பிறந்தநாள்,
இப்புவி உலகில் அபூர்வ மலராக
நான் வந்து உதித்த நாள்
கடந்து வந்த பாதையில்
அன்பும் அறிவும் தந்து
கைப்பற்றி அழைத்து வந்த
எந்தையும் தாயும்
இன்புற்று நெஞ்சார எனை வாழத்த
எத்தனிக்கும் மலரும் நினைவுகளை
மீண்டும் தூண்டிவிடும்
உந்துதலாய் உருபெறும் உகந்த நாள்


எத்தனை புன்னகைகள்
நித்தம் எனை தீண்டும் பரிவுகள்
சோர்ந்த தளங்களிலே ஆறுதலாய்
தூக்கிவிட்ட ஆருயிர் நட்புகள்
முகமறிய ஸ்பரிசங்கள்
அறிமுகமில்லா அன்பர்களின்
சந்தர்ப்ப உதவிகள்
அத்தனைக்கும் நன்றி பகன்று
புது வருடம் காண
புத்துயிர்தந்து என் பயணத்தை
நீட்டித்த இயற்கையாய் தோன்றும்
இறைவனுக்கு தலை வணங்கும்
பணிவு நாள்.
மேலும் வாசிக்க