பகலவனைப் பார்த்து

Posted by G J Thamilselvi On Sunday, 19 February 2012 1 comments
ஒரு பறவை மெல்ல சிறகடிக்கும் தூரம்தான்
நம்மிடையேயான இடைவெளியோ?
வினாவிற்குள் விடைதேடினேன்
எத்தனை தூரமாய் இருந்தால்தான் என்ன?
மஞ்சளாய் நீ ஜொலித்த ஒரு மாலையில்
உன் மீது மையல் கொண்டேன் நான்.
வான நீலத்தில் உன் வண்ணம்
நிமிடத்தில் நிறம் மாறும் சேதிதான் என்னவோ?
மஞ்சள் சிவந்த தங்கபழமாய் அல்லவா
உருமாறினாய்.
உன் இதமான வெம்மையில்
என் உடல் அடைந்த கிளர்ச்சியினை
உன்னிடத்தில் விவரிக்க சற்று நேரில்
வந்தால் என்ன செய்வாய்?
ஓ காதலிப்பது நான் தானே
என் காதலின் அவஸ்தை உனக்குள்
உயிர்க்குமா என்ன?
உணர்ச்சி கொந்தளிப்பில் என் காதல் பிதற்றல்கள்
உனக்கு பைத்தியங்களின் மொத்த உருமாற்றமாகலாம்.
உன் பிம்பத்தில் இடைபுகுந்து
பறவை பறந்த இடைவெளிக்கூட
என் இதயத்தை கிழித்து சென்றதாய்
விக்கித்து நின்றேன்.
உனை தீண்டினால் நான் தீய்ந்து போவேன்
எனத்தெரிந்தும் கூட
உன் தீக்கரங்களில் சரண்புக சித்தமானேன்
எட்டாதவனாய் நீ இருந்தாலும்,
எட்டி நின்றேனும் உனை காதலிப்பேன்.

1 comment:

  1. "அவஸ்த்தை" என்ற சொல்லை தவிர்த்திருக்கலாம்.

    ReplyDelete